மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3

விழத் தொடங்கியதும் ஒரு நொடி மிரண்டு போனாலும் அன்றிலுக்கு அடுத்து ஒரு வகையில் தைரியம்தான்….’எப்டியும் ரெண்டு பேர் இருக்காங்க…அப்டி ஒன்னும் இவள விட்ற மாட்டாங்க….. என்ன சின்ன வயதில் இந்த கிணற்றில் சின்ன தேங்காய் சைஸுக்கு ஒரு தவளை பார்த்திருக்கிறாள்…..அது இப்பவும் இங்க இருக்குமா….? சீய்ய்ய்…அது எவ்ளவு அருவருப்பா இருந்துச்சு….’ இவ்ளவுதான் அவளது எண்ணம்…

ஆனால் மரத்திலிருந்த பஜ்ஜியோ மரணத்தைப் பார்த்தவன் போல மிரண்டு போனான்….

“ ஏ லூசு…..ஐயோ கிணத்துல…” என அவன் அலற ஆரம்பிக்கும் போது ஆதிக் கிணற்றில் குதித்திருந்தான்…..

அதுவும் அவன் குதித்த வகையில் கண்டிப்பாக அவனை ரத்தமும் சதையுமாக அள்ளித்தான் எடுக்க வேண்டும்…..மரத்திலிருந்து வேகமாக இறங்கிக் கொண்டிருந்த பஜ்ஜிக்கு நாசியில் மரணவாசம்.

கிணறு படு ஆழம் என்பதோடு மழையற்ற இக்காலத்தில் கிணற்றின் வெகு கீழே கிடந்த தண்ணீரே பஜ்ஜியின் முக்கிய பயம்….

தரையில்  இருந்து உள்ளே விழுந்தாலே….. பொதுவாக எவ்வளவு உயரத்திலிருந்து குதிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரின் அடியிலும் சென்றே மேலே வருவோம் என்பதால்….. குறைவான தண்ணீர் மட்டுமே இருக்கும் இந்நிலையில் கிணற்றில் விழுபவர் அடியில் உள்ள பாறையில்  இடித்துவிடும் ஆபத்து அதிகம்….. அது கைகாலில் எலும்பு முறிவு என்பதில் தொடங்கி தலையில் அடிபட்டு மரணம் என்பது வரை எதாகவும் அமையலாம்….

அதில் அன்றில் மேலும் ஒரு மாடி உயரத்திலிருந்து விழுந்திருக்கிறாளென்ற போது அவள் அடித்தள பாறையில் இருந்து தப்பிப்பது அபூர்வம் என அவன் திகில் கொண்ட நேரத்தில்……ஆதிக்கோ மாடியிலிருந்து அதுவும் கிணற்றின் ஓரத்தை நோக்கி வேறு குதித்திருந்தான்….

நடுவிலாவது கிணறு ஆழம் அதிகம்….. அங்கு தண்ணீரும் அதிகமாக இருக்கும்…. ஓரங்களில் முக்கால் கிணறுக்கு கீழேயே பாறைதான்…. சுத்தமாக தண்ணீரும் இல்லை…..நேரே அதில் போய் விழுந்தால் அவனை அள்ளி தான் எடுக்க வேண்டி இருக்கும்….

நொடியில் மொத்தமாய் வேர்த்து விதிர்விதிர்த்து  ஸ்தம்பித்துப் போனான் பஜ்ஜி…..  மெல்லமாய்தான் புரிகிறது அவனுக்கு….. ஆதிக் ஓரத்தில் உள்ள பாறைக்கே போகவில்லை…..

பாதி ஆழம் கடந்த இடத்தில், கிணற்று சுவரில் ஒரு சிறிய கல், இரண்டு கால்களை மட்டுமே உன்ற கூடிய அளவிற்கு நீண்டு கொண்டிருக்கும்…..

சரியாய் அதை குறி பார்த்து குதித்து ….அதில் எதோ ஜிம்னாஸ்டிக்காரன் லேண்ட் ஆவது போல் பெர்ஃபெக்டாய் இறங்கி இருந்தான் ஆதிக்…..  அதற்கு  சற்று கீழிருந்துதான் மோட்டாரின் நீர் இழுக்கும் குழாய் கிணற்றுக்குள் இறங்கும்…… அடுத்து அந்த குழாயை நோக்கி பாய்ந்தவன்….அதைபற்றி சரசரவென அதிலேயே வழுக்கி கிணற்றின் நீர்மட்டம்  வரை போய்விட்டான்…

அதாவது தண்ணீரில் குதித்தால் பாறையில் விழும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து முழு மொத்தமும் அந்த ஆபத்தை தவிர்த்து நேராக நீர் பரப்புக்கு சென்றுவிட்டிருந்தான் ஆதிக்…. அடுத்த இரு நொடிகளில் கிட்டதட்ட இரண்டு நீச்சல் குளம் அளவு நீள அகலமாய் இருந்த அந்த கிணற்றின் நடுபகுதியை நீந்தி அடைந்திருந்த  அவன் கையில் இருந்தாள் அன்றில்……

மற்று மொரு இரண்டு நொடி செலவில்,  அவன் எந்த குழாயின் வழியாய் இறங்கினானோ அந்த குழாயிடம் அவளோடு வந்து சேர்ந்தும் இருந்தான்….

மொத்த நிகழ்வையும் பார்க்கவும் அனைத்தையும் மீறி முதலில் அப்படியே கைதட்டத்தான் தோன்றியது பஜ்ஜிக்கு…. இத்தனை நொடிக்குள்…..நிலை உணர்ந்து….. இத்தனையும் யோசித்து… திட்டமிட்டு அதை செய்தும் முடித்தென….  ஆதிக்கை கண்டு ப்ரமித்துப் போனான் அவன்….

கூடவே…..இந்த குழாய் வழியாய் ஆதிக் இறங்கியது போல திரும்ப மேலே ஏறிவருவது சாத்தியமே இல்லை என உறைக்க….. ஒரு பிடிமானத்திற்கே குழாய் அருகில் ஆதிக் வந்திருக்கிறான்…..இனி இவன் கயிறு போல எதையாவது போட்டால்தான் அதைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கும் அன்றிலும் மேலே வர முடியும் என புரிந்து….கயிறை தேடி ஓடினான்….

அதே நேரம் ஆதிக்கோ “ஒன்னுமில்ல அனி…. ஒன்னும் இல்லமா…. You are safe” என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும்…. தன் மார்போடு ஒன்றி இருந்தவளை படு அவசரமாய் அவளது பின் தலை….உச்சி….நெற்றி என கைகளால் தடவி அவளுக்கு காயம் பட்டிருக்கிறதா என்பதை பரிதவிப்போடு பரிசோதித்துக் கொண்டிருந்தான்…

என்னதான் கிராமம் அன்றிலுக்கு அறிமுகம்  என்றாலும்….அதுக்காக கிணத்துல குதிச்செல்லாமா பார்த்திருபா…. ஆக விழும் வரை இருந்த தைரியம்….தண்ணீரில் விழவும்….அதன் ஆழத்தை நோக்கி அவள் போன வேகத்தில்…. மொத்தமாய் கழுவப்பட்டு காணாமல் போக…

முழு சதவீதமும் பயந்து போயிருந்த அவள் மூச்சுக்காய் அல்லாட தொடங்கிய நேரத்தில் முதல் பிடிமானமாய் ஆதிக் கிடைக்கவும் அவனை அப்படியே பயத்தில் அப்பி இருந்தாள் அவள்…

அரை நிமிட நேரம் கண்களை கூட திறக்காமல் ஆதிக்கை  அல்லாடவிட்ட அவள் கண் திறக்கும் போது, அவள் கண்ணில் படுகிறது ஈர முடிகற்றைகள் முன் நெற்றியில் நீர் சொட்டிக் கொண்டிருக்கும் அவன் முகம்….

இதற்குள்ளாக கூட நிறம் கொள்ள துவங்கிவிட்ட ரத்த நாளங்கள் ஓடும் அவன் கண்கள்….. அதில் கலந்தும் கரைந்தும் கிடக்கும் அந்த உணர்வுக்கு என்ன பெயராம்??

அடுத்த பக்கம்