மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 1

வள் எம் பி.ஏ முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது. இன்று கான்வகேஷன். அவள் கல்லூரி நிர்வாகம் அப்படி. எல்லாவற்றிலும் வேகம்.

விழா தொடங்கி இருக்குமோ..?

அவசரமாக பார்க்கிங்கில் சென்று காரை நிறுத்திவிட்டு விழா நடக்கும் ஆடிட்டோரியத்திற்கு விரைந்தாள்.

அதன் முகப்பிலேயே நின்றிருந்தது இவளது கேங்க்..

“ஹேய்…ரேயா வந்தாச்சு….”   அர்பணா தான் முதலில் இவளைப் பார்த்தாள்.

“ரேயு…சேரி உனக்கு சும்மா நச்சு பிச்சுன்னு இருக்குது… “ சுனிதா சொல்ல

“ரொம்ப ஓவரா இருக்கோபா…” தன்னை மீண்டுமாய் மேலும் கீழும் பார்த்துக் கொண்டாள் அன்றில் அலைஸ் ரேயா.

“அதெல்லாம் ஒன்னும் ஓவரா இல்ல….பார்த்த உடனே…பொண்ணுக்கு மாப்ளை பாக்க நேரம் வந்துட்டுன்னு  உங்க அப்பா நினைக்கிற அளவுக்கு இருக்க…….”

முறைத்தாள்  பெண். காலைல அப்பா இதைதான் ஹிண்ட் செய்தாங்களோ…? மனதிற்குள் சிலீர் என ஒரு பயம்.

“அழகா இருக்கன்னு சொல்றதுக்கு அழுகின தக்காளி  லுக் விடுறவ நீ மட்டும் தான்….இன்னைக்கு நீ தான் ஷோ ஃஸ்டாப்பர்…அதுக்கு ஏத்தமாதிரி வந்திருக்க…அவ்ளவுதான்…”

சொல்லிய சுனிதா இவள் கையை பிடித்து இழுத்த படி அரங்கத்தை நோக்கி நடந்தாள்.

“சுகந்தி அங்க நம்ம எல்லோருக்கும் சீட் பிடிச்சு வச்சிட்டு காத்துகிட்டுருக்கா…சீக்கிரம் போகலைனா கடிச்சு குதறிடுவா.”  சொல்லியபடி அர்பணாவும் இவர்களை தொடர

“இரு இரு நீ மத்தவங்க முன்னாடி சுகந்திய நாய்னு சொல்லிட்டல்ல…இன்னைக்கு இருக்கு உனக்கு…” சுனிதாவின் வார்த்தைக்கு தெறித்தாள் அர்பணா

“அம்மா…பர தேவதை….உனக்கு கண்டிப்பா இன்னைக்கு கிட்கேட் வாங்கி கொடுத்துடுறேன்….ஆப்பு அடிக்கிற ஐடியாவை  அப்டியே விட்டுடுமா…”

“அது..”

அவர்கள் பேச்சை கேட்டபடி நடந்த ரேயாவின் சிரிப்பு இன்னும் சிறிது நேரம் கூட தொடர்ந்தது.

மேடைக்கு மிக அருகில், ஒரு ஓரத்து இருக்கையில் எளிதாக மேடைக்கு செல்லும் வகையில் சென்று அமர்ந்து கொண்டாள் ரேயா.

“சுகன்…இதையும் வச்சுக்கோபா…நான் ஸ்டேஜ்க்கு போறப்ப இதிலயும் போட்டோஸ் எடு….அப்பா கேட்டாங்க…” தன் கேமிராவை இயக்கும் முறையை அடுத்திருந்த சுகந்தியிடம்  சொல்லி கொடுத்துவிட்டு மேடையைப் பார்த்து திரும்பும் போதுதான் அந்த காட்சியைப்  பார்த்தாள்.

இடியொன்று அவள் மேல் விழுந்து இதயம் முதல் இரண்டு கால் வரையிலுமாய் துடிக்க துடிக்க இறங்கியது மின்சாரம்.

ஆறிவிட்டதாக நினைத்திருந்த அடி மனக் காயம் சுரீலென்று வலிகொண்டு திறக்க, ரத்த சுரப்பு உள்மனதில்.

மேடையின் பக்கவாட்டு அறையிலிருந்து பேசி சிரித்தபடி கல்லூரி முதல்வரும் , சேர்மனும் அழைத்து வந்து கொண்டிருந்தனர் அவனை.

ஆதிக்….!!!

காவல் துறை உடையில் அவன்….

ஆதிக் தான் சீப் கெஸ்ட் அதிரூபன் ஐ பி எஸ்ஸா…?

இவளறிந்த அவன் பெயர் கூட உண்மையில்லையா…?

மருகியது உயிர்.

சொன்னாலும் கேட்காமல்  அவள் கண்கள் அவன் பால்.

புன்னகையுடன் பேசுவது அவன் இயல்பு.

பார்த்தவுடன் தொற்றியது அது இவள் முகத்தில் இத்தனை வலியிலும்….

தனக்கென இடப்பட்ட இருக்கையில் அவன் அமர, இவள் பார்வை அவன் தலை முதல் கால்வரை பரவியது.

மொத்த உருவத்தையும் உயிரில் பொதிந்துவிட பரபரக்கின்றன விழிகள்….

முன்பைவிடவும் கம்பீரமாக தெரிந்தான்.

ஜிம்முக்கு அதிகமாக போகிறான் போலும்.

அவன் பின் கழுத்தை மறைக்கும் விதமாக சற்றே நீளமாக வைத்திருந்த முடி இப்பொழுது காவல் துறை பாணியில் வெட்டப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் அந்த சாக்லேட் பாய் சார்ம் அப்படியேத்தான் இருக்கிறது.

கண்ணில் அதுவாக நீர் கோர்க்கிறது…

இத்தனைக்கும் பிறகுமா?

சட்டென எழுந்துவிட்டாள்.

“தலை வலிக்குது சுகன். நான் வீட்டுக்கு போறேன்…..”

கிளம்ப எத்தனித்தவளை நகரவிடாமல் பிடித்துக் கொண்டாள் சுகந்தி.

அடுத்த பக்கம்