மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 8

தில் இதோ திருமணமும் முடிந்து…. சர்ச்சிலிருந்து பெண் வீட்டிற்கு செல்ல காரிலும் ஏறியாயிற்று மணமக்கள்….

அங்குதான் மற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக திட்டம்….

இவர்களுக்கு கார் ட்ரைவ் செய்ய பஜ்ஜி வர வேண்டும்… அதற்காக வெளியே நின்ற பஜ்ஜியிடம் ஆதிக் ஏதோ சொல்லிவிட்டு  உள்ளே திரும்பினான். அப்போதுதான் அதை கவனித்தாள்  அன்றில். அவன் முன் முடியில் ஏதோ ஒரு மலர் இதழ்.

அதை எடுத்துவிட தூண்டியது இவளது ஒரு மனம்….தடையாகவும் ஒரு குணம்…. முன்பு எவ்வளவு எளிதாய் இவளுக்கு முடிந்தது…..இப்போது என்னவாயிற்று என்ற நினைவோடு இரண்டொரு முறை அதைப் பார்ப்பதும்… பின் பார்வையை திருப்பிக் கொள்வதுமாய் இவள் இருக்க…… இவளது பார்வையை உணர்ந்தவனாக ஆதிக் இயல்பாய் இவளது கையையே எடுத்து அவள் பார்வைபட்ட இடத்தில் தோராயமாக வைத்தான்….

சற்றும் இதை எதிர்பார்க்காத மனையாளுக்கு  ஒரு பக்கத் தோளோடு தொடங்கி உயிர்வரை சிலிர்க்க….. அவசரமாய் தன் கையை உருவிக் கொள்ள முனைந்தவள்…. பின் இருவரின் உரிமை நிலை உணர்ந்து….மறுப்பேதும் சொல்லாமல்….. அவன் பார்வையை மட்டும் தவிர்த்து….. அப்படியே அமர்ந்திருக்க….

இந்த குட்டி காதல் நாடகத்திற்கு பகிங்கர காரணமான திருவாளர்  தூசி இதற்குள் பை மிஸ்டேக் கைபட்டு அதாகவே கீழே விழுந்துவிட……

அதை கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில்  கவனித்தாலும்…..கொஞ்சமும் அதைப் பத்தி யோசிக்காமல்….. ஆமா தூசியா இங்க விஷயம்…..

இப்போது தன் தலைமேல் இருத்தி இருந்த அவள் கையை எடுத்து அவன் பார்த்த வகையில் அவள் முழு தேகம் சிணுங்க…

அதே நேரம் இவர்கள் புறமே பார்க்காது ட்ரைவர் இருக்கையில் ஏறி அமர்கிறான் பஜ்ஜி….  “ஹையோ என் செகண்ட் இயர் புல்லாங்குழலே….” என்றபடி…

பட்டென சிரித்துவிட்டாள்  அன்றில்…. ஆதிக் சட்டென அவள் கையை விட்டிறுந்தான்.

“அதென்ன மாப்பு செகண்ட் இயர் புல்லாங்குழல்…? “ பிஜுவை விசாரித்தான் ஆதிக்.

“ஆஹா…. அஞ்சு பைசா ப்ரயோஜனம் இல்லாம குடும்ப ரகசியத்த யாராவது வெளிய சொல்வாங்களா மச்சான்…?” என பஜ்ஜி மறுக்க….

இவள் மன மௌனத்தின் கணம்…. நிலவளவிலிருந்து கடல் அளவாய் குறைந்தது….

என்னவாகிறதாம் இவளுக்கு?!

டுத்து வீட்டில் மணமக்களை வரவேற்கும் முகமாய் சில சம்பிராதயங்களுக்கு பிறகு…. “மாப்ளய மாடிக்கு கூட்டிட்டு போ அனி…. ரெண்டு பேரும் காலைல சீக்கிரமே எந்திரிச்சுருப்பீங்க……சாயந்தரமும் ஆள்கள் உங்கள பார்க்க வரதும் போறதுமா இருப்பாங்க….. அதனால இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க….” என்ற தன் அம்மாவின் வார்த்தையில்  அன்றில் ஆதிக்கைப் பார்த்தாள்.

இவளுக்கு மட்டுமே புரியும் அளவான சிறு தலையாட்டலுடன் அவன் எழுந்துகொள்ள….மாடிக்கு படியேறினாள் இவள். இவளைத் தொடர்ந்தான் அவன்.

திருமணத்திற்காக மாடிப்பகுதியில் புதுப்பிக்கும் வேலை நடந்தது என இவளுக்கு தெரியும்…. ஆனால் இத்தனை அழகாய் இவ்வளவு வேலை நடந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரியும்…

‘இவ வீட்டவிட்டு போகப் போறான்னு இவ மேல உள்ள பாசத்த இதுல காமிக்கிறாங்களோ…’ என்ற நினைவு தந்த சிறு மிரட்சியுடன் அறையை பார்த்தவாறே இவள் உள்ளே நுழைய…. பின்னால் கதவு மூடும் சத்தம்.

என்னவென திரும்பிப் பார்க்கும் முன்….பின்னிருந்து இடையோடு வளைத்திருந்தான் இவள் கணவன்…

காந்தம் காமம் எதையும் உணர்விக்கவில்லை அவன்…..வலி பொறுக்க தாய் மார்பில் முகம் புதைக்கும் பிஞ்சு மழலையின் நினைவொன்று இவள் நெஞ்சில் தெறிக்கும் வண்ணம் மென் பஞ்சாய் தன் தோளுக்கு கொடுத்திருந்தான் இவளை…

“என்னச்சுடா குட்டிமா?” இவ்வளவுதான் கேட்டான்.

அவன் எதுவும் சொல்லவில்லைதான்…..ஆனால் தான் விரும்பியவள் உயிரோடு இல்லை என்ற அந்த செய்தியை அவன் உள்வாங்கிய தருணங்கள்…. அது அவனுக்கு கொடுத்த கொடூர வலி கொன்று தின்னும் வேதனை விடையற்ற விரக்தி…..  அதன் அடுத்த வந்த தனிமைக் காலங்கள் என ஒவ்வொன்றையும் மானசீகமாய் உணர்ந்து….. அந்நேரத்து அவனுக்கு இந்நாளில் துணை போனாள் அவள்..… இங்கு இவன் மார்போடு அழுகையில் சிதறினாள்.

என்ன செய்துவிட்டேன் இவனுக்கு? இத்தனை  வேதனைக்கும் எந்தவகையிலும் காரணம் நான்தானே….  வெடித்தாள்…

என்ன இருந்தாலும் இவளுக்காவது அவன் மீதிருந்தது கோபம் மற்றும் ஏமாற்ற உணர்வு அவ்வளவே…..ஆனால் அவன் நிலை….?? விரும்பிய பெண் உயிரோடு இல்லை என்ற நினைவை எப்படி சுமந்தலைந்திருப்பான்…. இப்படியாய் ஒரு அழுத்திப் பிசையும் அவன் சார்ந்த அவல தவிப்பும்….

அதெற்கெல்லாம் காரணம் இவளது பெரியம்மா….. அதாவது இவளது குடும்பமாயிற்றே’ என்ற சற்று சுயம் சார்ந்த குற்ற பரிதவிப்பும்தான் இவளது மன அடிவாரத்தில் சரிந்து கிடந்து அறுக்கும் உண்மை…

ஆனால் அவைதான் அவளை வாதிக்கிறது என்று புரிய கூட இல்லை இதுவரைக்கும்…

பெரியம்மா மேல் கோபம் இல்லை என அவன் சொன்ன போதும்….பிஜுவிடம் முன் போல் மச்சான் மாப்பு என பேசிக் கொள்ளும் போதும் இவள் மனபாரம் குறைவதற்கு காரணமும் இதுவே….இவள் குடும்பத்தை அவன் குற்றவாளியாய் பார்க்காமல் ஏற்கிறான் என்பது நிம்மதி தருகிறது இவளுக்கு….

அழுகை என்பதும் வரமே….பெரும் பலங்களின் அடி வேர் அங்கும் கூட அடர்ந்து இருக்கின்றது…

இவளுக்கும் அதுதான் சம்பவித்தது…. அழுகையின் முடிவில் அடிமன கணக் குண்டு காணாமல் போயிருந்தது….. நிமிர்ந்து பார்த்தாள்….

அடுத்த பக்கம்