மறவாதே இன்பக் கனவே 8 (2)

“அதான் நீ இருக்கீயே மச்சான், இது போதுமே வேறென்ன வேண்டும்?” என்க, “க்கூம் ஊசிப்போன உசிலமணி வடையைத் தவிரப் பைசா தேறாது!” எனக் கழுவிய பாத்திரத்தோடு உள்ளே வந்தான் கரிச்சட்டி.

“அடேய் உன்னை….இருடா வரேன்” என எழுந்த அழகன் ஒரு அடி எடுத்து வைக்க, சற்று முன் எண்ணெய் பாத்திரத்தோடு வந்து சென்ற மணி சிந்திய எண்ணைய்யில் கால் வைத்திருந்தான்.

வழுக்கிக் கொண்டு சென்று டேபுளில் தட்டி கீழே விழ, டேபுளில் கழுவி கவுதியிருந்த பாத்திரங்கள் அனைத்தும் அவன் தலையில் விழுந்தது. அவ்வளவு தான் கரிச்சட்டி ஓட்டமெடுத்து ஓடி விட, சிரிப்புடனே வந்து அழகனைத் தூக்கி விட்ட உதய், “தலையில என்ன தக்காளிச் சட்டினியா மச்சான்?” என்றான் கேலியுடன்.

“இந்த இரண்டு ஏழரையும் கூடவே வைச்சிருந்தா எல்லாச் சட்டினியும் என் தலையில தன்னால ஊற்றெடுக்கும்டா” என்றான் கடுப்புடன். “ஓஹோ அப்போ உன் தலை தான் அட்சயப்பாத்திரம்? இப்படித் தான் நீ ஊருக்காரங்களை ஏமாத்திக் கடைய நடத்துற?” என மேலும் கேலி செய்தான் உதய்.

“சரி எதுக்கு இப்பவே கடைய மூடுற?” என்க, “எங்க பக்கத்து வீடு மாரி மகன் வினோத்துக்கு  நாளைக்குக் கல்யாணம், நைட்டுப் பரிசம் போடுறாங்க. நீயும் சாயங்காலம் வந்திடு மாப்பிள்ளை. இப்படி நல்லது பொல்லதுல கலந்துக்கிட்டா தான் ஊரோட இருக்க முடியும்” என அழகன் உரைக்க, தலையாட்டி விட்டுச் சென்றான் உதயன்.

பொதுவாக ஊரில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் குடும்பத்தோடு அனைவரும் கலந்து கொள்வதும், உடன் இருந்து ஆளுக்கொரு வேலை செய்து உதவுவதும் உண்டு. சுந்தரியும் குடும்பத்துடன் சென்றிருந்தார். அதுமட்டுமின்றி மணப்பெண்ணான துளசி எழிலரசியின் கல்லூரித் தோழி ஆகையால் அவளும் சென்றிருந்தாள். உதயனும் கிளம்பி அழகனின் வீடு நோக்கிச் சென்றான்.

அழகனின் பக்கத்து வீடான வினோத் வீட்டின் முன் பந்தலிட்டு சீரியல் விளக்குகளால் அலங்கரித்திருக்க அந்த தெருவே வண்ணமயமாக மின்னியது. ஊரார் அனைவரும் அங்கு தான் கூடியிருந்தனர். இரவு வினோத் வீட்டில் நிச்சியதார்த்தமும், காலை முருகர் கோவிலில் திருமணமும், வீட்டில் விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அழகன் வீட்டிற்குச் சென்றவன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, “என்ன அத்தே நல்லாயிருக்கியா?” என அவன் அன்னை சோலையம்மாளிடம் நலம் விசாரித்தான். அதே நேரம் வீட்டிற்குள் இருந்து பாத்திரங்கள் விழுந்து உடைவது போன்ற சத்தங்கள் வந்து  கொண்டிருந்தது.

”இந்தா சொன்னா கேளுடி, மேல கை வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம், குண்டுமணி அளவு மோதிரம் அதுக்காகப் புருஷன் உசுரோட விளையாடதாடி” என அழகன் கத்திக்கொண்டிருக்க, “அடேய் அது என்ன செத்தவனோட செல்லாக்காசுன்னு நினைச்சியா? ஒரு பவுன் தங்க மோதிரம்டா, அடியேய் ரத்தினம் உண்மைய சொல்லுற வரைக்கும் அந்தப்பயல விடாதா” எனத் திண்ணையிலிருந்து குரல் கொடுத்தார் சோலையம்மாள்.

Advertisements

அதேநேரம் உள்ளிருந்து ஓடி வந்த அழகனின் மகளை, “களவானி நில்லு” என நிறுத்தினான். “ஐயோ எத்தனை தடவை தான் நான் சொல்லுறது என் பெயரு கலைவாணி மாமா” என நெற்றில் தட்டிக் கொண்டு ரகமாய் அவள் உரைக்கச் சிரித்தான் உதயன்.

“அடியே குள்ள வாத்து நீ உங்க அம்மாவுக்குத் தெரியாம ஹார்லிக்ஸ் டாப்பாவை களவானுவ தானே களவானி” என்க, “உஷ், இந்த ரகசியம் நமக்குள்ளயே இருக்கட்டும் மாமா. அம்மாகிட்ட சொல்லிடாதே?” என ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்துக் கட்டளையிட்டாள்.

“அப்போ உள்ள போய் மாமா வந்திருக்கின்னு உங்க அப்பனை கூட்டிட்டு வா” என்றான் சிரிப்புடன். மறுப்பாய் தலையசைத்தவள், “அப்பாவும் அம்மாவும் விளையாண்டுகிட்டு இருக்காங்க இப்போ ஊட போனா அம்மா அடிக்கும்” என்றவள் எழில் நடந்து செல்வதைப் பார்த்துவிட்டு அவளை நோக்கி ஓடிவிட்டாள்.

சிறிது நேரத்தில் வெளிவந்த அழகன், உதயனை அழைத்துக் கொண்டு வினோத் வீடு நோக்கிச் சென்றான். “என்னடா மச்சான் என்னாச்சு?” என உதய் கேட்க, “அதை ஏன்டா கேட்குற, நகைபெட்டிய திறந்திருக்கா போல, அதுல இத்துணுண்டு மோதரத்தைக் காணுமாம் மாப்பிள்ளை. அதுக்குப் போய்ப் பூரிக்கட்டையைத் தூக்கிட்டா, இதுல எங்க ஆத்தா இருக்கே வாயை வைச்சுக்கிட்டு சும்மா கிடக்குதா? அந்தச் சிவப்புகல்லு மோதிரமாடி! அதைத் தையக்காரி கையில பார்த்த மாதிரி இருக்குன்னு பாயிண்டு பாய்ண்டா எடுத்துக்கொடுக்காடா. முதல் விஷயம் அதுக்கு சரியா கண்ணு தெரியாது, இரண்டாவது ஊரு உலகத்துல அதே மாதிரி மோதிரத்தை வேற எவனும் வைச்சிருக்க மாட்டானா என்ன?” என புலம்ப உதய் சிரிப்புடனே வந்தான்.

“ஊருக்குள்ள நல்லா பாருடா மாப்பிள்ளை, மாமியாரும் மருமகளும் எப்படியிருக்காங்க ஆனால் என் வீட்டுலையும் இருக்காங்களே ஒத்துமைனா ஒத்துமை அப்படியொரு ஒத்துமை, என்னவோ பசை போட்டு ஓட்ட வைச்சாப்பல தான்! இதுங்க இரண்டும் ஒன்னு சேர்ந்துச்சி என் டவுசர் கிழிஞ்சிச்சி” என மேலும் புலம்பிக்கொண்டே வந்தான்.

இருவரும் வினோத் வீட்டு வாசலில் நிற்க, “மாமா….” என அழைத்தவாறு ஓடி வந்து உதயனின் கால்களைக் கட்டிக்கொண்டாள் ப்ரதிக்ஷா. “ஹேய் குட்டிம்மா! நீ எங்க இங்க?” எனக்  கேட்டவாறு கைகளில் தூக்கிக்கொண்டான் உதய்.

அதே நேரம் அங்கு நின்ற வேன்னிலிருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்தாள் அபிராமி. “வாக்கா, நீ என்ன இங்க?” என அழைக்க, “பொண்ணு எங்க ஊருடா, மாமாவுக்குத் தூரத்துச் சொந்தம் தான்” என்றாள் அபிராமி. அழகன் சென்றுவிட, இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“அது சரி நீ எதுக்கு வீட்டை விட்டு வந்த? வந்தது மட்டுமில்லாம எதுக்கு அந்த சுந்தரி வீட்டுல தங்கியிருக்க? என்னவோ சரியில்லை, எனக்கென்னவோ இது சரியாப்படலை” என்றாள் உரிமையுடன் அதட்டலாக. ஊரில் பெரும்பாலானோர் உதய் வீட்டை விட்டு வந்து எழிலின் வீட்டில் தங்கியிருப்பது குறித்து அறியாது பலவிதமான கேள்விகளும் வதந்திகளும் பரப்பிக்கொண்டு தான் இருந்தனர்.

“அது எனக்கும் சிவாவுக்கு ஒத்து வரலை அதான் வேற ஒண்ணுமில்லை. கொஞ்சநாள் என் மனசு போல விடுங்கக்கா” என்றான் மென்குரலில்.

அடுத்த பக்கம்

Advertisements