மறவாதே இன்பக் கனவே 8

மதிய உணவு நேரம் அழகனின் கடையில் வந்தமர்ந்தான் உதயன். கரிச்சட்டி பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்க, அழகனும் கடையை மூடுவதற்கு அனைத்தையும் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தான்.

உதயனின் தோற்றத்தைப் பார்த்தவன், “என்னடா புதுசா வேஷ்டி கட்டிக்கிட்டு புது மாப்பிள்ளை தோரணையில வந்திருக்க?” எனக் கேட்டு விட்டு சுற்றும் முற்றும் பார்த்த அழகன் மீண்டும், “எப்படி அரசங்குளத்துல என் சித்தி மகள் இருக்கு பொண்ணுகேட்டுப் போவோமா?” என்றான்.

“அட நம்ம கூடப் படிச்ச புள்ளை ரேவதி அந்த ஊரு தானேடா, சரி தான்…அப்போ ரத்தினத்தையும் கூட்டிட்டு போவோம் எப்படிடா?” என்றான் உதயன். “அட பாவிப்பயலே, வேண்டாம்டா அழகன் பாவம் பொல்லாதது” என்றான்.

“யாருக்கு எனக்கா? சரி சரி, நான் என்ன ஆடுமாடா இலை தலையத் திங்க? எவ்வளவு நேரம் தான் நான் இலைய வெறிக்கிறது? சீக்கிரம் சாப்பாடப் போடுடா” என்க, அழகன் வந்து உணவை எடுத்து வைத்தான்.

“என்னாடா தினமும் இந்த உப்பில்லாத சாம்பாரு தானா? பிரியாணி எல்லாம் கண்ணுலையே காட்ட மாட்டியாடா?” என்க, “ஆமா நான் உன் பொண்டாட்டி பாரு விதவிதமா சமைச்சிப் போட?” என்றான் அழகன்.

உதயன் சிரித்துவிடக் கடுப்பான அழகன் , “பேசாம சாப்பிடுறீயா என்ன வேணும்? கல்யாணம் பண்ணிக்கோன்னா காது கொடுத்தும் கேட்க மாட்டிக்க, இல்லை வரும் போதாவது நல்லா சப்பாத்தி தட்டுற பொண்ணைத் தள்ளிக்கிட்டு வந்திருக்கணும் அதுவுமில்லை” என்றான்.

மாறாத சிரிப்புடன் உதயன், “அதான் நீ இருக்கீயே மச்சான் அப்பறம் என்ன?” என்க, மேலும் கடுப்பான அழகன், “ஊருல எல்லாத்துக்கும் உசுரக் கொடுக்குற ப்ரண்டா இருந்தா எனக்கு மட்டும் உசுர எடுக்குற ப்ரண்டா இருக்கானே!” எனப் புலம்பலுடன் அருகில் அமர்ந்தான்.

“உசுரெல்லாம் இல்லை மச்சான், உன் கடைய மட்டும் தான் எடுக்கப்போறேன்” என உதயன் உரைக்க, “அடேய் என்னடா சொல்லுற? உனக்கு இன்னும் இந்தக் கிறுக்கு தெளியலையா?” என்றான் அழகன்.

“இல்லை இப்போ தான்டா தெளிவா இருக்கேன், எலெக்ஷன்ல நிக்கிறேன், ஜெயிக்கிறேன், உன் கடைய எடுக்குறேன்” என உதயன் அசராமல் உரைக்க, அதிர்ந்த அழகன் தலையில் துண்டைப் போட்டவாறே, “அட படுப்பாவி, இப்படி உண்ட கடைக்கே துரோகம் செய்றீயேடா, உனக்கே இது நியாமாப்படுதா?” எனப் புலம்பினான்.

“என்ன செய்ய ஊருக்கு நல்லது செய்யணுமே, அப்பறம் உண்ட பாவம் கொன்றால் தீரும்” என்க, கையில் எண்ணெய்யுடன் வெளியே வந்த உசிலமணி, “அட அண்ணே பழமொழிய தப்பா சொல்லுறீங்க கொன்றால் பாவம் உண்டால் தீரும்” என்றான்.

Advertisements

“இது புதுமொழி மணி அதுவும் அழகனுக்காகவே எழுதுனது, எப்படி இருக்கு மச்சான்?” என அழகனின் புறம் திரும்பினான். “ஹே, ஊசிப்போன சாம்பார் மாதிரி இருக்கு” என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

மேலும் கடுப்பான அழகன், “நல்லா வருது என் வாய்ல! எதுவும் முதலையே சொல்லுறதில்லை, எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிட்டு வந்து தான் சொல்லுறதா? எவ்வளவு பெரிய விஷயத்தைச் செஞ்சிட்டு இப்படி எதுவுமே தெரியாத குழந்தை மாதிரி உக்காந்திருக்கியேடா எப்படி? இது மட்டும் உன் பெரியப்பாவுக்குத் தெரிஞ்சா என்னாகும்? அந்த அரைவேக்காடு சிவாவுக்குத் தெரிஞ்சாவே போதும் வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திடுமேடா? முழுப் பூசணிக்காயை மறைக்கத் தான் முடியுமா? இல்லை இது தான் மறைக்கிற விஷியமா? ஏன்டா ஏன்? ஐயோ இப்பவே என் வயித்துல நெருப்பு எரியுற மாதிரி இருக்கே” எனப் பயத்தில் புலம்ப, “அடுப்புப் பக்கத்துல உக்காந்தா அப்படித்தான் இருக்கும் அழகா?” என்றான் உதயன்.

“எனக்கு இறக்குற பயத்துல அடுப்புக்குள்ளையே போய் உட்கார்ந்திடுவேன் அப்படி இருக்கேன்” என்க, “ஆல்ரெடி கருகின்ன கரிக்கட்டை மாதிரி தான் இருக்கு” என்ற உசிலமணி உள்ளே சென்றுவிட்டான்.

அத்திசையில் முறைத்து விட்டு திரும்பிய அழகன், “ஆமா, உன் முஞ்சியை இந்த ஊருல பாதிப்பேருக்குத் தெரியாது. அப்பறம் நீ எதை நம்பி இறங்குற? யாரை நம்பி தேர்தல்ல நிற்கிற?” என்றான் உதயனிடம் திரும்பி.

அடுத்த பக்கம்

Advertisements