மறவாதே இன்பக்கனவே 7 (3)

அவர் மனதிற்குள்ளும் ஆதங்கம் தான் இருந்தது, உதயனின் தந்தை இருந்திருந்திருந்தால் இவ்வாறு சொல்லியிருப்பார்களா? பெற்றவர்கள் இல்லாத ஒற்றைப் பிள்ளையை ஒதுக்குகிறார்கள் என நன்றாகத் தெரிந்தது.

முன்னோர்கள் சம்பாதித்து வைத்ததை அண்ணனும் தம்பியுமாக இருவரும் தான் பெருக்கினர். அதிலும் ரெங்கநாதன் கூட அரசியல், குடும்பத்தை மட்டுமே கவனிக்க, பெரும்பாலும் தொழிலைக் கவனித்துச் செல்வத்தைப் பெருக்கியது கிருஷ்ணமூர்த்தித் தான்.

ஆனால் தற்போது கிருஷ்ணமூர்த்தி இல்லாத நிலையில் ரெங்கநாதனுக்கு இணையாக மொத்த சொத்தில் பாதி உதயன் ஒருவனுக்கே! ரெங்கநாதனின் பங்குகளிலிருந்து அவர் மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்தால் தனக்கென வருவது இருபத்தி ஐந்து சதவீகிதத்திற்கும் குறைவான பங்குகளே என ராஜா முதலிலே கணக்கிட்டான்.

ரெங்கநாதனின் குணத்தில் சிறிதும் மாறாதவன் மூத்த மகன் ராஜகணபதி. உதயன் இதில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் இருக்க, குடும்பத்தின் மொத்த தொழிலையும் கைக்குள் வைத்துக்கொண்டான் ராஜகணபதி. அத்தனை ஆசைகளும் விவேகமும் கொண்டவன். ஆனால் தற்போது உதயன் ஊரிலே தங்கி விட, அவனுக்கு உரிமையான பங்குகளைக் கொடுப்பதில் ராஜாவுக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை, மொத்தமாக உதயனைத் தவிர்க்கவே எண்ணினான்.

குளித்து முடித்து ஈரத்தலையோடு வீட்டிற்குச் சென்ற நேரம் வாசலில் நான்கு ஐந்து பேர் பெண்களும் ஆண்களும் கூட்டமாக இருந்தனர். குணசுந்தரியும் பேசிக்கொண்டிருக்க, உள்ள வந்த உதயனை கண்டவர் அவனிடம் ஒரு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு அழைத்து விட்டுச் சென்றனர். அதே ஊரார்கள் என்பதாலும் அவன் தந்தைக்கு நன்கு தெரிந்தவர்கள் என்பதாலும் அழைப்பு விடுத்துச் சென்றனர்.

தன்னறை நோக்கிச் சென்றவன், பத்திரிக்கையைப் பிரித்து மணமக்கள் பெயர்களைப் பார்த்தான். ‘அட நம்ம வினோத் பயலுக்கா கல்யாணம்! இவனெல்லாம் என்னோட ஜூனியர், இரண்டு வயசு சின்னப்பையன்’ என நினைத்தவாறு அறைக்குள் சென்று உடை மாற்றிவிட்டுப் படுத்தான். ஒரு ஓரம் கிடந்த அழுக்குத்துணிகளைப் பார்த்தவன் சில மணிநேரத்திற்கு முன் எழில் சொல்லிச் சென்றதை நினைத்தவாறு விழி மூடினான்.

அன்று வெள்ளிக்கிழமை, காலை ஒன்பது மணி பேருந்திற்குக் கம்ப்யூட்டர் கிளாஸ் போக வேண்டும். காலை எட்டு முப்பதுக்கு வாசல் படிகளில் நின்றவாறு ஈரக் குழலை உலர்த்திக் கொண்டிருந்தாள் எழிலரசி. “அம்மா அந்தப் புதுபட்டுப் புடவையோட ப்ளவுஸ் தைக்க மறக்காம தேவி அக்காகிட்ட கொடுத்திடும்மா, துளசி கல்யாணத்துக்கு அதைத் தான் கட்டணும்” என வீட்டிற்குள் இருக்கும் சுந்தரியிடம் உரைத்தாள்.

Advertisements

”ஏன்டி இங்க என்ன நான் சும்மா உக்காத்திருக்கேனா? எனக்கு வேற வேலையே இல்லைபாரு. வீட்டு வேலைக்குத் தான் ஆகுறதில்லை இதுல இவளுக்கு வேலை செய்ய ஒரு ஆள் வேணுமாம். நான் தைக்கக் கொடுத்துட்டு வரவும் கை நீளமா இருக்கு, கழுத்து இறக்கமா இருக்கு, இடுப்பு லூசா இருக்குன்னு மட்டும் சொல்லு எலும்பை எண்ணிப்புடுறேன்” எனக் கத்தினார் குணசுந்தரி.

‘சுந்தரி சூடா இருக்குறது தெரியாமா வார்த்தையை விட்டுட்டையே எழிலு’ எனத் தன்னுள் புலம்பிக்கொண்டவள், “சரி ரைட்டு விடும்மா நானே கொடுத்துகிடுறேன்” என்று சமாதானம் பேசினாள்.

அதே நேரம் படிகளில் சத்தம் கேட்கத் திரும்பியவள் இறங்கி வரும் உதயனின் தோற்றம் கண்டு வாய் பிளந்தாள். பளீர் வெள்ளை கதர் வேஷ்டி, சட்டையில் நிமிர்ந்த நடையில் மிடுக்காக வந்தான்.

‘இவருக்குக் கதிர் மாமா தானே வேஷ்டி கட்டிவிடும், இவருக்குத் தான் வேஷ்டி கட்டத் தெரியாதுல பின்ன எப்படி…?’ என ஐயமுற அவனைப் பார்த்தவள் பழைய நினைவில் பட்டெனச் சிரித்தும் விட்டாள்.

பெரும் பாடுபட்டு பல மணி நேர போராட்டத்தில் கட்டிக்கொண்டு வந்தவன் எழிலரசி சிரிக்கவும் அர்த்தம் புரியாது, ‘ஐயோ திரும்பவும் அவுந்திடுச்சா? என் மானம் போச்சே’ எனப் புலம்பியவாறு இடுப்பைச் சுற்றி கைகளால் தடவி பார்த்துக்கொள்ள இறுக்கமாகத் தான் இருந்தது. அவன் செயலில் எழில் மேலும் சிரித்தாள். பல மாதங்களுக்குப் பின் அதுவும் கதிரின் இழப்பிற்குப் பிறகு இன்று தான் எழில் சிரிக்கப் பார்த்தான் அதில் மனம் நிறைய, மகிழ்வுடன் கிளம்பினான்.

அவனுடன் பயின்ற வெளியூரில் வேலை செய்யும் நண்பன் ஒருவனை வரும் படி அழைத்துவிட்டு ஊரில் பெரியவர்களில் ஒருவரான பெரிய மீசை முருகையாவின் வீட்டிற்குச் சென்று பேசி சரி கட்டி அவரை அழைத்துக்கொண்டு பதிவாளர் அலுவலகம் சென்றான்.

ரெங்கநாதனுக்கு எதிராக ஊராட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாக உரைக்க அதிர்ந்த பெரியவர் முதலில் வேண்டாம் என்று தான் மறுத்தார். ஆனால் உதயன் பிடிவாதமாக நின்று இதுவே எங்க அப்பா கேட்டுருந்தா மறுப்பீங்களா என்றெல்லாம் கேட்டு அரை மனதாகச் சம்மதிக்க வைத்துக் கிளம்பி உடன் அழைத்து வந்திருந்தான்.

நண்பன் அவனுக்கு முன்னே வந்து காத்திருக்க, இருவரின் சாட்சியோடும் உதவியோடும் ரெங்கநாதனுக்கு எதிராகச் சுயட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தான். துணையாய் இருந்து வழிகாட்டும் படி தந்தையும், கதிரையும் வேண்டிக்கொண்டான்.

ஆனால் முருகையாவிற்கு இவ்விஷயம் ஊருக்குள் தெரியும் போதும் அதுவும் ரெங்கநாதனுக்குத் தெரியும் போது என்ன நிகழுமோ என்ற பயம் பற்றியது.

 

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements