மறவாதே இன்பக்கனவே 7 (2)

அன்று மேசையின் ட்ராவில் வைத்த விண்ணப்பத்தையும் கதிரின் சான்றிதழ் நகல்களையும் எடுத்துப்பார்த்தான். அவ்விண்ணப்பமானது வருகிற ஊராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு.

ஆம் சிவா கூற்றில் இருக்கும் ஒரு தவறு அவன் தந்தை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தற்போதைய வேட்பாளர். ஆகா அவரை எதிர்த்து நிற்க நினைத்துள்ளான் கதிர் என்பதைப் புரிந்து கொண்ட உதயன் அதிர்ந்து அமர்ந்தான்.

ரெங்கநாதன் சொத்துபத்துக்களை விடப் பெரும் கௌரவமாக நினைப்பது ஊர்த் தலைவர் என்னும் பதவியைத் தான்! இது வரையிலும் யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டதில்லை, ஏதோ கடமைக்கு என ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இடையில் நடக்கும் தேர்தலில் ஒற்றையாளாய் போட்டியின்றி நின்று வென்றவர்.

அத்தனை உயரம் வளர்ந்திருக்கிறார் என்றால் அதில் உதயனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியின் உழைப்பும் மறுக்க முடியாத அளவிற்கு உள்ளது. அப்படி இருந்தும் கூடத் தம்பியை தனக்குக் கீழே வைத்துக்கொண்டிருந்தவர் தனக்குச் சிறிதும் சமமில்லாத தனி ஒருவனான கதிர் எதிர்க்க நினைத்தால் எளிதாக விடுவாரா? தனது பெரியப்பாவைப் பற்றி நன்கு அறிந்தவனுக்குத் தற்போது உண்மை புரியப் பூமி மட்டுமல்லாது அண்டமே சுற்றுவது போன்றிருந்தது.

“வீட்டை விட்டு வந்துட்டா உங்க உறவு இல்லைன்னு ஆகிடுமா? உங்க குடும்பம் தான் கதிர் மாமாவை கொன்னது, உங்களால என்ன செஞ்சிட முடியும் அவங்களை? அதை விடக் கதிர் மாமா ஆசையவாவது உங்களால நிறைவேற்ற முடியுமா?” என அன்று எழில் கோபத்தில் உரைத்தது உதயனின் நினைவில் வந்தது அது மட்டுமின்றிச் சற்று முன் பேசிய சிவாவின் ஆணவமான பேச்சுக்களும் நினைவில் வர நரம்புகள் முறுக்கிக்கொண்டு சினம் பொங்கியது.

‘என் கதிரை என்னடா செய்தீர்கள்? எளியவன் என எளிதில் தள்ளிவிட்டீர்களா? ஆனால் நான் உங்களில் இருந்து வந்தவன் தானே என்னை என்ன செய்துவிடுவீர்கள்? நானும் மோதிப் பார்க்கிறேன்!’ என உறுதிக்கொண்டான் உதயன். உயிர் தவிரப் பெரும் உறவு, உடைமை எதுவுமில்லை, உயிர் தவச் சிறிது கதிரின் மீது கொண்ட நட்பே பெரிது உதயனுக்கு.

கதிரை சாதாரணத் தூசி போன்று கணக்கிட்டவர்கள் அவன் பின் இருக்கும் பிரபஞ்ச பெரும் சக்தியான உதயனைக் கணக்கிடத்தவறியது பெரும் தவறு!

மாலை நேரம் வயல் வரப்புகளில் சிறிது தூரம் நடந்துவிட்டு, கிணற்றில் குளிக்கச்சென்றான் உதயன். அவர்கள் வயல் தான், வேலையாட்கள் அப்போது தான் வேலை முடித்துக் கிளம்பும் நேரம், அவர்கள் வீட்டுக் கணக்காளர் வேலுமாணிக்கம் அவர்களுக்கான சம்பளத்தைச் சரிபார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

உதயனைக் கண்டவர், “வாங்கத் தம்பி” என வரவேற்க, “என்ன மாமா சம்பளம் கொடுக்குறீங்களா?” எனக் கேட்டவாறு அருகே சென்றான். விவசாயக் கூலிகளாக அவர்கள் நிலத்தில் வேலை செய்பவர்களுக்கு வாரமொரு முறை சம்பளமிடுவார்கள் என உதயன் அறிவான்.

Advertisements

அதற்குள் வேலுமாணிக்கத்திடம் வேலையாள் ஒருவர், “ஐயா இந்த வாரம் மச்சினன் வீட்டுல விசேஷம் இருக்கு அந்த இரண்டு நாள் சம்பளத்தையும் பிடிக்காம கொடுத்தா நல்லாயிருக்கும்” எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“அதெல்லாம் முடியாதுப்பா, இன்னும் நாலு நாள் வேலையிருக்கே, முடிச்சிட்டு மொத்தமா ஆறுநாள் சம்பளத்தையும் வாங்கிக்கோ” என்றார் காரராக. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த உதயன், “வேலுமாமா, அவர் உழைச்ச காசை தானே கேட்கிறாரு, ஆறுநாள் சம்பளத்தையும் கொடுக்காம எதுக்கு இரண்டுநாள் சம்பளத்தைப் பிடிக்கிறீங்க?” எனப் புரியாது கேட்டான்.

“பெரியைய்யா அப்படித் தான் தம்பி கொடுக்கச் சொல்லியிருக்காங்க” என்க, “அதான் எதுக்கு?” என விளக்கம் கேட்டான் உதயன்.

“அதுவா இது நடவு நடக்குற நேரம், ஆளுங்க பத்து, இருபது கூடக் கொடுக்காங்கன்னு வெளிய வேலைக்குப் போயிடக் கூடாதுன்னு தான்” என்றார்.

“இதென்ன அநியாயம், அன்னனைக்கு உழைச்சு சாப்பிடுறவங்க சம்பளத்தை இப்படிப் பிடிச்சிகிட்டு கொடுத்தா எப்படி? அவங்க திடீர் தேவைக்கு வெளிய தானே வட்டிக்கு வாங்குவாங்க, அப்புறம் சம்பளம் வந்தும் வட்டி கட்டுறதுக்கே சரியா போய்டும். அவரும் ஏதோ தேவைக்குன்னு தானே கேட்கிறாரு, நம்ம கிட்ட கையிருப்பு இருக்குற போது எதுக்கு மறுக்குறீங்க. எல்லாருக்கும் ஆறுநாள் சம்பளத்தையும் கொடுங்க வேலு மாமா” என்றான் அதிகாரமாக.

“வேண்டாம் தம்பி ஐயாவுக்குத் தெரிஞ்சா என்னைத் தான் திட்டுவாங்க…அது மட்டுமில்லாம….” என அவர் எதையோ சொல்லத் தயங்க, “என்னனு சொல்லுங்க வேலுமாமா” என்றான்.

“தொழில்ல, கணக்கு வழக்குல உங்க சொல் எதுவும் கேட்க வேண்டாம்னும், உங்களுக்கு எதுவும் தேவை இருந்தாலும் நேரடியா ஐயா கிட்டையே கேட்டுகவும் சொல்லிருங்காங்க தம்பி” என்றார்.

தனக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களைத் தழுவியே நான் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார்கள் எனப் புரிந்தது. “யாரு அப்படிச் சொன்னா? பெரியப்பாவா?” என நிதானமாகக் கேட்டான்.

“இல்லைங்க தம்பி, பெரியைய்யா சொன்னதா ராஜா தம்பி தான் சொல்லிட்டுப் போறாருப்பா” என்றார்.

அதற்கு மேல் எதுவும் கேட்காது குளிக்க வந்தவன் அருகே இருக்கும் சுந்தரியின் வயல் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

உதயன் தோப்பில் ஒரு இளநீர் கேட்டால் கூடத் தங்களைக் கேட்காமல் கொடுக்கக் கூடாது, அவனை உள்ளே விட வேண்டாம் என்றும் குறிப்பாக அவனை மாந்தோப்பின் திசையில கூடச் செல்லவ விடக்கூடாது என்றும் ராஜா சொல்லிச் சென்றதை நினைத்தார்.

அடுத்த பக்கம்

Advertisements