மறவாதே இன்பக்கனவே 7

விறுவிறுவென உள்ளே வந்த உதயன், “எழில் நீ என்ன செய்ற இங்க?” என்ற கேள்வியுடன் அவளை உற்றுப்பார்த்தான். சூரியனின் உஷ்ணத்திற்கு இணையான பார்வையாய் இருக்க, எதிர்கொண்டு பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பினாள் எழில்.

“அ..அது…கிளீன் பண்ண வந்தேன்” என்றவளின் வார்த்தை வழக்கத்திற்கு மாறாய் தடுமாற, முத்து முத்தாய் முகத்தில் வியர்த்திருந்த வியர்வை கழுத்தில் இறங்கிக்கொண்டிருந்தது.

அவன் பார்வை அவள் இரு கைகளையும் தழுவி மீண்டது. அப்போதே தன் இரு கைகளிலும் துடைப்பம் இல்லாதது நினைவில் வர, ‘பொய் சொன்னாலும் பொருந்தும் படிச் சொல்ல வேண்டுமடி’ என மனதில் குட்டினாள்.

உடனே சமாளிக்கும் சாக்கில் “இல்லை அன்னைக்குக் கிளீன் பண்ணும் போது என் கொலுசு ஒன்னு காணாமப் போச்சு, அதான் அது இங்க கிடக்காணு தேடி வந்தேன்” என்றாள் மென்குரலில்.

அப்போதும் தடுமாற்றம் மாறவில்லை, எதிரே நின்றிருந்தவனோ விசாரிக்கும் தோரணையில் கைகளைக் கட்டிக்கொண்டு, “இதை நான் நம்பணுமா…?” என நகைப்புடன் கேட்டான். ஏனெனில் சற்று முன் தான் அவள் இரு கால்களிலும் கொலுசிசைக்க நடந்து செல்வதைக் கண்டான்.

என்ன பதிலளிப்பது எனத் தெரியாது கைகளைப் பிசைந்துகொண்டு நிற்க, “அது சரி, அப்படியே கொலுசைத் தேடி வந்தாலும் நான் இல்லாத நேரம் எதுக்கு உள்ள வந்த? உண்மைய சொல்லு என்னத்த எடுக்க வந்த எழில்?” என்றான் சற்றே அதட்டலில்.

பயத்திலாவது உண்மையை உளறுவாளா என்ற எதிர்பார்ப்பு! ஆனால் அவன் மனமோ, ‘என்ன தைரியம்டா மவனே உனக்கு? அவகிட்ட இம்புட்டு வாங்கியும் திருந்துறீயா? அவள் பத்திரகாளியானா நீ பாதாளம் போக வேண்டியது தான்’ என்றது.

அவன் எண்ணத்திற்கு எதிர்மாறாய் முகம் சிவந்தவள், “கொலுசு இங்க இல்லைனா வீட்டுக்குள்ள தான் இருக்கும், இப்போ எதுக்கு என்னை இத்தனை கேள்வி கேட்குறீங்க? புதையலும் பொக்கிஷமுமா வைச்சிருக்கீங்க? பொதி மூட்டை மாதிரி அழுக்குத்துணி தான் ஒரு பை நிறையா இருக்கு, இதுலிருந்து நான் என்னத்தைத் திருட? கதிர் மாமா இருந்தவரைக்கும் நான் நினைச்ச நேரத்துக்கு வந்து போவேன் தெரியுமா? என் வீட்டில இருந்துக்கிட்டு நீங்க எப்படி என்னையே வரக் கூடாதுன்னு சொல்லலாம்? எனக் கோபமுடன் எண்ணெய்யில் இட்ட கடுகாய் பொரிந்தாள்.

ஆனால் அதிலும் சில நொடி தடுமாறுவதையும் வழக்கத்திருக்கு மாறாக வியர்த்து வழிய நிற்பதையும் உதயன் கண்டுகொண்டான். எழில் கோபம் கொள்கிறாள் எனில் எதையோ மறைக்கிறாள் என்பது உதயின் அனுபவப் பாடம்.

Advertisements

“நான் இப்போ உன்னை வரக்கூடாதுன்னு சொல்லலையே? எதுக்கு வந்திருக்கன்னு தானே கேட்டேன்?” என நிதானமுடன் தன் கேள்வியை விளக்கினான்.

அதற்கும் என்ன சொல்வது என ஒரு நொடி தடுமாறி யோசிக்க அவள் பார்வை எதிரே சுவரிலிருந்த கதிரின் புகைப்படத்தில் விழுந்தது. அருகே சென்று எக்கி கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டவள், “கதிர் மாமா போட்டோவை எடுக்கத் தான் வந்தேன்” என முகத்தைச் சிலுப்பிக்கொண்டு வாசல் நோக்கிச் சென்றாள்.

அவளை விட வேகமாக அவள் முன் சென்று உதயன் கை நீட்ட, சட்டென அவன் கைகளில் மோதிவிடாது பின் விலகி நின்றவள் அவனைப் பார்க்க, “போறவா எதுக்கு என்னையும் இழுத்துட்டுப் போற?” என்றான். இடையில் கை நீட்டியது அவன் தானே என்ற எண்ணத்தில் முறைப்புடன் பார்த்தாள்.

எதுவும் பேசாது அவள் கைகளிலிருந்த புகைப்படத்தைப் பறித்தவன் மேசையில் சென்று அதை வைத்துவிட்டு அங்கிருந்த கதிரின் மற்றொரு சிறிய புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தான். மாறாத முறைப்புடன் பிடுங்கிக் கொண்டவள் முகத்தைச் சிலுப்பிக் கொண்டு நிற்காமல் சென்றுவிட்டாள். குறிப்பிட வேண்டியது அவள் முதல் எடுத்த புகைப்படத்தில் கதிரோடு உதயனும் இருந்தான் என்பது.

தொலையாத கொலுசைத் தேடி வந்தவள் வேண்டாத புகைப்படத்தை எடுத்துச் செல்லும் மர்மம் புரியாது நீண்ட மூச்சோடு கட்டிலில் சென்று அமர்ந்தான் உதய். அப்போதே தான் பரபரப்புடன் வந்ததன் காரணம் நினைவில் வர, எழுந்தான்.

அடுத்த பக்கம்

Advertisements