மறவாதே இன்பக்கனவே 3 (3)

கதிருக்குப் பின் உதய் மனம் விட்டுப் பேசுவது அபிராமியிடம் மட்டுமே! முதலில் அவள் நலம் குடும்ப விஷயங்கள், சிவாவிற்குப் பார்த்துக் கொண்டிருக்கும் மணப்பெண் பட்டியல் என அனைத்தையும் இருவரும் பேசி முடிக்க, உதயன் கதிரின் இழப்பை வேதனையோடு உரைத்தான். அபிராமி ஆறுதல் சொல்ல, ப்ரதிக்ஷா, “அழாத மாமா” என்றவாறு கண்ணீரே வரதா கண்களைத் துடைத்துவிட்டாள்.

அபிராமியின் சமையல் வேலைகள் முடிய, கணவர் செல்வராஜுக்கு உணவு நேரம் அழைத்தாள். அவரும் வர உணவு நேரம், மாமனுடன் பேசியவாறு உண்டுவிட்டு மாலை நேரம் உதய் வீடு திரும்பினான்.

காலைவேளை எப்போதும் போலே அழகனின் கடையில் டீக்குடித்துக்கொண்டிருந்த உதயனின் கண்கள் எதிர்புறமிருக்கும் மெக்கானிக்செட்டை பார்த்தது. இன்றும் திறக்கப்படாமல் இருக்க, வீட்டிற்குச் சென்றவன் தனது பைக்கை எடுத்துத் தள்ளிக்கொண்டே கோவிந்தசாமியின் வீடு நோக்கிச் சென்றான். கோவிந்தசாமியைப் பார்க்கவென வந்து விட்டவனுக்கு வீட்டை நெருங்கும் போதே, எழிலரசியின் நினைவு வந்தது.

அன்று எவ்வாறு எல்லாம் கத்தினாள், மீண்டும் அவள் முன் செல்ல வேண்டுமா! தன்னை கண்டால் மேலும் கோபம் கொள்வாள் என நினைத்தவன், வீட்டிற்கு சற்று முன்பே நின்று விட்டான். தெருவில் செல்லும் சிறுவன் ஒருவனைப் பிடித்து, “டேய் சுந்தரியாக்கா வீட்டுக்குள்ள இருக்காளான்னு பார்த்துட்டு வாடா?” என்றான்.

“ஐய்யோ, நான் ஸ்கூல் போகணும் டைம்மாச்சு. விடுண்ணே” என்றவன் ஓடப்பார்க்க, “டேய் டேய், நான் வேணா உனக்கு சாக்லேட் வாங்கித்தரேன்டா” என உதய் டீல் பேசினான்.

“சாக்லேட் எல்லாம் வேண்டாம், அழகமாமா கடையில சாயந்தரத்துக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொல்லிடுண்ணே” என்ற சிறுவன் கையை கட்டிக் கொண்டு நிற்க, சரியென்றான் உதயன். வீட்டிற்குள் செல்லாது வீட்டு வாசலை நோக்கி ஒரு கல்லை எறிந்துவிட்டு, வீட்டை ஒருமுறை சுற்றி வந்தவன், “அத்தை இல்லை, ஆனால் எழிலக்கா இருக்கா. சாம்பார் தாளிக்கிற வாசம் வருது” என தன் கண்டுபிடிப்பின் முடிவை உரைத்துவிட்டு ஓடிவிட்டான்.

என்ன செய்வது என சுற்றும் முற்றும் பார்த்தவன் கையிலிருந்த ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியைத் தள்ளியவாறு உள்ளே சென்றான். அந்த சத்தத்தில் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த எழில் முகம் மறைத்துக்கொண்டு ஹெல்மட்டோடு நிற்பவனைப் பார்த்து, “யார் நீங்க என்ன வேணும்?” என்றாள்.

“நாங்க அசலூரு வண்டி ரிப்பேர், மெக்கானிக்செட்டுக்கு போனா பூட்டி இருந்தது. அங்கபக்கத்துல விசாரிச்சா இந்த வீட்டை காட்டுனாங்க. கோவிந்தமாமாவை பார்க்கணும்” என்றான்.

மண்டமேல இருக்குற கொண்டைய மறந்துட்டானே! என்பது போல் ஹெல்மட் போட்டும் கோவிந்தமாமா என்றதில் அவனைக் கண்டுகொண்டாள் எழிலரசி. படிகளில் நின்றுக்கொண்டிருந்தவள் இடுப்பில் கைவைத்து முறைத்தவாறே, “நினைச்ச நேரத்துல புதுகாரே வாங்குற இந்த பெரிய வீட்டுக்காரங்கள் எல்லாம் எங்க வீடு தேடி வர வேண்டாம்! இனியாவது எங்களைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க” என்றாள்.

அதில் உதயனுக்கு கோபம் வர, ஹெல்மெட்டை கழட்டியவாறு, “இந்தா கொஞ்சம் நிறுத்து இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேனு இப்படி கத்துறதும், ஜாடையில பேசுறதுமா இருக்க என்ன விஷயம்? ஏன் இதுக்கு முன்னாடி நான் கோவிந்தமாமாவை தேடி வந்ததில்லையா? இல்லை சுந்தரியக்கா கையாளத் தான் சாப்பிட்டதில்லையா? ஒருவேளை கதிர் இறந்த அன்னைக்கு வரலைன்னு கோபமா? எனக்கு அப்போ விஷியமே தெரியாது, தெரிஞ்சதும் உடனே வந்துட்டேனாக்கும்?” படபடவென கோபத்தில் கொட்டினான் உதயன்.

“ஏன் வந்தீங்க? அது தான் வேண்டாம்கேன். உங்க கொலைகார குடும்பத்தோட காத்துக் கூட எங்க வீட்டுப்பக்கம் வரவேண்டாம். போதும் நாங்க ரொம்ப நொந்துட்டும், எங்களை விட்டுடுங்க” என்றவளின் கண்கள் கலங்க, மெல்ல மெல்ல மீண்டும் கோபம் ஏறிக்கொண்டிருந்தது. அவள் கோபம் தன்மீது மட்டுமல்ல தன் வீட்டார்கள் மீதும் தான் என உதயனுக்குப் புரிந்தது.

“அப்படியென்ன நாங்க செஞ்சிட்டோம்? சொத்துப்பிரச்சனையும் ரெம்ப நாளா இருக்குறது தானே? அதுமட்டுமில்லாம அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே? எழில் நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு பேசுற என்னனு சொல்லு” என்றான்.

“என் மனசு முழுக்க ஆத்திரம் தான் இருக்கு கதிர் மாமாவை கொன்னவுங்களை எல்லாம் தண்டிக்கணும், சும்மா விடக்கூடாது, கதிர் மாமா நினைச்சதெல்லாம் இந்த ஊருக்கு செய்யணும். அவ்வளவு வெறி இருக்கு என் மனசுல, ஆனால் என்னால எதுவும் செய்யமுடியலை. உங்க குடும்பத்தை நினைச்சாலே தாங்க முடியலை, என்னை கொலைகாரியா மாத்துறதுக்குனே என் முன்னாடி வாறீங்களா?” என்றவள் கோபமிகுதியில் தன்னிலை மறந்து கத்திக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் கண்களும் அடிப்பதற்கான பொருள் தேடி அங்குமிங்கும் சுழன்றது. ஆனால் உதய் இது எதையும் கவனிக்கவில்லை, அவனுக்கு அவள் சொல்லும் உண்மைகளை உள்வாங்கிக் கொள்ளவே சில நிமிடங்கள் தேவையாக இருந்தது. அவனுக்கு மட்டும் சுற்றும் பூமி நின்றதை போன்று பேரதிர்ச்சியாக இருந்தது. உதய் மட்டுமல்ல ஊராரும், கதிர் விபத்தில் இறந்ததாகத் தான் எண்ணினர். அவன் கேஸும் அவ்வாறு தான் முடிக்கப்பட்டிருந்தது.

குளித்து முடித்து இடையில் கட்டிய ஈரத்துண்டோடு கோவிந்தசாமி மகளின் குரல் கேட்டு, விரைந்து வந்தார். கோபத்தோடு நொடியில் நிற்காமல் அவள் வீட்டிற்குள் விறுவிறுவென சென்றுவிட, அவளைக் கடந்து வாசலிற்கு வந்தவர் உதயன் நிற்பதைப் பார்த்தார்.

”மாப்பிள்ளை நீ அழக கடையில உக்காரு இதோ இரெண்டு நிமிசத்துல சட்டைய போட்டு வந்திடுறேன்” என்றவர் மீண்டும் வீட்டிற்குள் சென்றார். மனதிற்குள்ளே, ‘ஐய்யோ என் தங்கமகளுக்கு என்னச்சுன்னே தெரியலையே! சீக்கிரம் சுந்தரிக்கிட்ட சொல்லி மாடசாமி கோவில் பூசாரிட்ட கூட்டிப் போய் விபூதி போடச் சொல்லணும்’ என புலம்பினார்.

அங்கிருந்து கிளம்பிய உதயனுக்கு எழிலின் கோபமே நினைவில் வந்தது. ஏதோ சொல்லமுடியாத உன்மைய மனதில் வைத்துக்கொண்டே எழில் அதைக் கோபமாகக் காட்டுகிறாள் என உணர்ந்திருந்தான். தான் இல்லாத போது என்ன நடந்ததோ! அதுவும் தன் குடும்பத்தை குறிப்பிட்டு அவள் சொல்லும் பழிச்சொல் அவனுள் சினமென்னும் தீயை மூட்டியது. கதிரின் இழப்பை விபத்தென்று நினைத்தே இழப்பின் வேதனையை தாங்கிக்கொண்டு அவனில்லாது வெறுமையானா தன் வாழ்நாட்களைக் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தான். அது கொலை என்றறிந்த பின் உள்ளத்தில் பற்றிய தீ அனல் காடாய் எரிய அடக்க முடியாத சினத்தோடு தன் வீடு நோக்கிச் சென்றான்.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements