மறவாதே இன்பக்கனவே 3 (2)

துண்டால் முகத்தைத் துடைத்தவாறே, “என்னத்த முக்கியமான விஷயம் கேட்க போற? அண்ணிக்கு முடியலை அம்மாவை மீன் குழம்பு வைச்சிக் கொடுத்து விட சொல்லுனு தானே?” என்றான்.

“டேய் வந்தேன்னு வை, உன் உடம்புல ஒரு எலும்பும் தேறாது பார்த்துக்கோ” என மிரட்ட, “டேய் பால் டப்பா வாடா? யாருக்கிட்ட, ஒத்தைக்கு ஒத்த வாடா பார்த்திடலாம், உங்கப்பனுக்கு மூத்தபிள்ளை இல்லாம பண்ணிடுவேன்” என்றவாறு மீசை முறுக்கினான் சிவச்சந்திரன்.

“அடேய் நாம இப்படி அடிச்சிக்கிட்டு இருந்தா ஊடபுகுந்து உதய் எல்லா சொத்தையும் சுருட்டிட்டு போகப்போறான்டா. ச்சே, கேட்க வந்ததையே மறந்துட்டேன். உதய் ஊருக்கு போயிட்டானா?” என்றான்.

“இல்லை வேளாவேளைக்கு அம்மா ருசிருசியா அவனுக்கு ஆக்கிப்போட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்படிக் கிளம்புவான்? நம்ம அம்மாவுக்கு அவனா மரிக்கொழுந்து நானா வேப்பங்கொழுந்து!” என்றான்.

“உனக்கு இப்படி புலம்புறதத் தவிர வேற என்ன தெரியும்? சரி அவன் வந்து எத்தனை நாளாச்சுடா?”

“ஒரு வாரமாகுது”

“எப்போ ஊருக்கு வந்தாலும் மூணுநாள் இல்லை நான்கு நாள்ல கிளம்பிடுறவன் இன்னும் இங்கையே இருக்கானே சரியில்லடா, அப்பறம் அவன் போற வரைக்கும் வீட்டுக்கணக்கு வழக்கு எதுவும் அவன் காதுக்கு போகாம பார்த்துக்கோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவனை ஊருக்குக் கிளம்பி விடு”

“டேய் முட்டாப்பயலே அவன் என்ன ஸ்கூல் போற சின்னப்புள்ளையா? யூனிஃபார்ம் போட்டு, ஷூ போட்டு வேன்ல பிடிச்சு தள்ளி விட?”

“பெரிய சண்டியராட்டம் வாய் மட்டும் பேசுற? இந்த சின்ன வேலைய கூட உன்னால செய்ய முடியாத?”

“கத்தாதடா, நேத்தே அறையிற மாதிரி நாலு கேள்வி நல்லா கேட்டான். எப்படியும் நாளைக்கெல்லாம் கிளம்பிடுவான் மானஸ்தன். சரி அண்ணியும் பாப்பாவும் எப்படியிருக்காங்க?”

“ம்ம், நல்லாயிருக்காங்க. ஸ்கூல் அட்மிஷன் நடக்குது வேலை கிடக்கு அப்பறம் பேசுறேன்” என ராஜகணபதி கட் பண்ண, எதுக்கு திரும்பவும் குரைக்கவா வேண்டாம்டா சாமி என மனதில் நினைத்தான் சிவச்சந்திரன்.

இரவுவேளை கூடத்து சோஃபாவில் கையில் டிவி ரிமோட்டுடன் படுத்திருந்த சிவாவின் பார்வை டிவியில் பதியாது அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்த உதயனின் மேலே இருந்தது. ‘பரபரப்பா சுத்திக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா மும்பைக்கு கிளம்பிட்டான் போல’ என நினைத்துக் குதுகலித்துக் கொண்டிருந்தான் சிவா.

உதய்யும் அலைப்பேசியில் ஏதோ ட்ரவல்ஸில் பேசிக்கொண்டிருக்க, வழக்கத்திற்கு மாறாக அன்னையும் சமையலறையில் பரபரப்பாய் இருக்க, உதயன் கிளம்புகிறான் என முடிவு செய்து விட்டான் சிவா. அவன் அருகே வந்த பரமேஸ்வரி, “டேய் எழுந்து சாப்பிட வா?” என அழைத்தார்.

“நான் சாப்பிடுறது இருக்கட்டும் முதல கிளம்புற உன் வளர்ப்புப்பிள்ளைக்கு சோத்தைப் போட்டு அனுப்பிவை, காத்து வரட்டும்” என்றான் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு.

“அவன் எப்போட கிளம்புறேன்னு சொன்னான்? நீயா உளறாத!”

“இன்னும் எதுக்கு இந்த முக்காடு, அதான் எனக்கு தெரியாமா ஏதோ டப்பா டப்பாவா கட்டிவைக்கிற, நீ மறச்சி வைச்சாப்புல எங்களால மோந்து பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதாக்கும்?”

“டேய் அதெல்லாம் அபிராமிக்கு கட்டி வைச்சதுடா, உதய் தான் நாளைக்கு அக்காவைப் போய் பார்த்துட்டு வரேன்னு சொன்னான், அதான் மிளகாப்பொடி, அரிசி வடகம், நெய் முறுக்கு கட்டி வைச்சேன்” என்றதும் அதிர்ந்த சிவாவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது.

“ஹலோ மிஸ்டர்.சுஜத் உங்க டீமோட நாளைக்கு ஜெய்ப்பூர் கிளம்புங்க, நான் ட்ரவல்ஸ் எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டேன்” என கைப்பேசியில் பேசியவாறே அவர்கள் அருகே வந்தான் உதயன். சிவாவோ எரிச்சலோடு மூடிய உதட்டிற்குள் பற்களைக் கடித்தான்.

“பெரியம்மா சாப்பிடலாமா?” என உதய் கேட்க, “நீ வா கண்ணு” என்றவர் சிவாவைக் கண்டுகொள்ளாது அழைத்துச் சென்றார்.

“என்ன பெரியம்மா, ஹால்ல மாட்டியிருக்கிற பல்பு புதுசு போல நல்ல பிரகாஷமா… எரியுது” என கேலியுரைக்க, அர்த்தம் புரிந்த பரமேஸ்வரி சிரித்துக்கொண்டார்.

மறுநாள் காலை பரமேஸ்வரி கட்டிக்கொடுத்த சரக்குகளோடு அக்கா அபிராமியை பார்க்கக் கிளம்பினான் உதயன். சிவாவோ ஏக கடுப்பில் முறைத்துக்கொண்டே வெளியில் சென்றுவிட்டான். அன்றும் ராஜகணபதி அழைத்து இன்னும் உதயனை ஊருக்குக் கிளப்பி விட இயலவில்லையா என சிவாவை திட்ட, மேலும் உதயனின் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அபிராமியின் வீட்டிற்குள் செல்ல, வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உதயனைக் கண்டதும், ஓடி வர, தூக்கிச்சுற்றியவாறு உள்ளே சென்றான். “மாமா, எங்கே சாக்லேட்?” என்றவள் அவன் சட்டைப்பைக்குள் ஆராய, “இரு குடிம்மா…” என்றவாறு கால்சட்டை பாக்கெட்டிலிருந்து சாக்லேட் பாரை எடுத்துக்கொடுக்க உடனே பிரித்து உண்ண ஆரம்பித்துவிட்டாள் ப்ரதிக்ஷா.

புன்னகை முகமாக எதிரே அபிராமி, தம்பியை வரவேற்று நலம் விசாரித்தாள். “மாமா எங்கக்கா காணும்?” என்க, “மில்லுக்கு போயிருக்காரு, மதிய சாப்பாட்டுக்கு வந்திடுவாருடா” என்றவள் சமையல் வேளையைக் கவனிக்கத் தொடங்கினாள். சமையலறை வாசலில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தவன் ப்ரதிக்ஷாவுடன் விளையாடிவாறு அபிராமியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அடுத்த பக்கம்

Advertisements