மறவாதே இன்பக்கனவே3

“வெளியே போ, என் கண்ணு முன்னாடி நிக்காதே. என் வீட்டுக்குள்ள நீ வரவே கூடாது வெளியே போ” எனக் கத்தியவாறு உதயனின் நெஞ்சில் கை வைத்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தாள் எழிலரசி.

அவளின் தளிர்கரம் தள்ளி அவன் தேக்குமர தேகம் அசைவதா? சிறிதும் அசையாது நிலையாக நின்றவன், “எழில் நான் எதுவும் பண்ணலையே ஏன் தேவையில்லாம என் மேல கோபப்படுற? முதல சட்டைய விடுமா” என்றவாறு அவள் கைகளிலிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தான் உதயன்.

அதற்குள் வீட்டிற்குள் வந்த இருவரும் இவர்களின் நிலை கண்டு அதிர, சுந்தரி ஓடி வந்து மகளைப் பிடித்து தன்னோடு இழுத்துக்கொண்டார். இருந்தும் எழிலின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்னையின் பிடிக்குள்ளும் துள்ளியவள், “செய்யக் கூடாத பாவமெல்லாம் செஞ்சிட்டு இப்போ புண்ணியம் தேடி வந்திருக்கியா? உன் கையால நாங்க வாங்கி சாப்பிடுகிறதுக்குச் செத்தே போயிடலாம். என் வீட்டுல இருந்து போன்னு சொன்னேன்ல இன்னும் ஏன் முன்னாடி நிக்கிற? உன்னை….” எனக் கத்திக்கொண்டிருந்தவள், மேசையில் கதிரின் புகைப்படத்திற்கு முன் எரிந்து கொண்டிருந்த காமாட்சி விளக்கை தூக்கி உதயனின் மேலே எறிந்தாள்.

 

யாரும் தடுப்பதற்குள் நொடிப்பொழுதில் நிகழ்ந்து விட, கணமான கை விளக்கு அவன் நெஞ்சில் மோதி கீழே விழுந்தது. “உதய்….” எனப் பதறியவாறு கோவிந்தசாமி ஓடி வந்து அவனைப் பார்க்க, “காயமேதும் இல்ல மாமா” என்றவாறு மார்புப்பகுதியை நீவிக்கொண்டான். அதற்குள் மகளின் இச்செயலில் கோபம் கொண்ட சுந்தரி, அவளை சமாளிக்கவும் முடியாமல் கண்டிக்க நினைத்து, “பைத்தியமாடி நீ?” என்றவாறு அறைந்தார்.

ஆனால் அதற்கும் சிறிது கூட அசராதவள், “ஆமா நான் பைத்தியம் தான், கொலைகாரி ஆகிறதுக்குள்ள அவரை போகச் சொல்லு…இல்லை…” என்றவள் அடிப்பதற்கு எதையோ தேடி அருகிலிருந்த தாம்பூலத்தட்டை எடுத்தாள். அதற்குள் கோவிந்தசாமி உதயனை வெளியில் அழைத்து வந்து விட, சுந்தரி மீண்டும் மகளைக் கண்டித்தார்.

அனைவருக்குமே எழிலரசியின் நிலை காணக் கவலையாக இருந்தது. அமைதியே குணமாக கொண்டவள், வீட்டாள்களிடம் மட்டும் கலகலப்பாகப் பேசிச்சிரிப்பவளிடம் இப்படியொரு குணம் இருக்குமென நினைக்கவேயில்லை. உதயன் திண்ணையில் அமர, அவன் எதிரே நின்றுக்கொண்டிருந்த கோவிந்தசாமி, “மன்னிச்சுக்கோப்பா, என்னைக்கும் அவ இப்படியெல்லாம் நடந்துக்கிட்டதில்லை. இன்னைக்கு என்னனு தெரியலை இப்படி கத்துறா?” என வேண்டினார்.

“எனக்குத் தெரியாதா மாமா! அவ ஏதோ கதிரு போன துக்கத்தை மனசுலையே வச்சுகிட்டு இப்படி இருக்கா? எனக்கு ஒன்னுமில்லை போய் அவளை பாரு இல்லை அக்கா அடிச்சே உன் தங்க மகளை தகரமாக்கிடுவா. போ மாமா” என அனுப்பி வைத்தான்.

ஆனால் மனதிற்குள் ஒரு கேள்வி இருந்தது, கதிரின் இழப்பு அவளுக்குத் தாங்க முடியாத வேதனை தான் எனினும் அனைவரிடமும் அமைதியாகப் பேசுபவள் தன்னிடம் மட்டும் கோபம் கொள்வதேன்? தன் மீது தவறேதும் இல்லையே? ஏதோ தவறான புரிதல் கொண்டு கோபத்தை வளர்த்துள்ளாள் எனப் புரிந்து கொண்டு எழுந்தான்.

நீண்டு வளர்ந்த வானுயர்ந்த தென்னை மரங்கள் ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கும் தோப்பில் வேலையாட்கள் தேங்காய் உரித்துக்கொண்டிருந்தார். அவர்களுக்குச் சற்று தொலைவில் கயிற்றுக்கட்டிலில் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுக் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தான் சிவச்சந்திரன். அரை உறக்க நிலையில் அவன் அலைபேசி இருமுறை அழைக்கத் திரும்பிப் படுத்தவன் எடுத்துப்பார்த்தான்.

தன் அண்ணன் ராஜகணபதியிடமிருந்து அழைப்பு வந்திருக்க, அட்டன் செய்து, “டேய் ரோசா, உனக்குத் தான் தம்பி இந்த நேரம் தென்னந்தோப்புல நித்திரையில இருப்பான்னு தெரியுமில்லை அப்பறம் எதுக்கு கூவிக்கிட்டு இருக்க? ஏதா இருந்தாலும் ஒருமணிநேரம் கழிச்சு கால் பண்ணு” என்றவன் கட் செய்து விட்டு அருகில் இருக்கும் துண்டை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

மீண்டும் அலைபேசி விடாது அழைக்க, எரிச்சலுடன் முழு தூக்கத்தையும் துடைத்து விட்டு எழுத்து அட்டன் செய்தான். பேசியவாறே கிணற்றடி தொட்டியில் முகத்தை கழுவிக் கொண்டிருக்க, “அடேய் எருமைமாடே! நான் எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்க, போன் பண்ணுறேன், நீ பகல் தூக்கத்துல இருக்கையா?” என்றான் ராஜா.

அடுத்த பக்கம்

Advertisements