மறவாதே இன்பக்கனவே 23 (3)

“இருக்கட்டும் தம்பி” என்க, “வேலுமாமா அந்த குட்டியானை வண்டியை இன்னும் மெக்கானிக் செட்ல விடலையா? தோப்பு வேலைக்கு வண்டியில்லாம எப்படிச் சமாளிக்கிறது?” என்றான்.

“எங்க தம்பி இன்னும் அந்த களவானிப்பையன் காளி வேலைக்கே வரலையே, அவன் வந்து வண்டியை மெக்கானிக் செட்ல விட்டுச் சரி பண்ணி எப்போ எடுக்க?” என்றார் புலம்பலாக.

“இன்னுமா அவன் வேலைக்கு வரலை?” எனச் சிவா கோபமுடன் கேட்க, “பொண்டாட்டி பிரசவத்துக்கு போறேன்னு மாமியார் வீட்டுக்குப் போனவன் மூன்று மாசமாச்சு ஆளைக்காணும்” என்றார்.

“மூன்று மாசமா மாமியார் வீட்டுல என்ன விருந்து கொண்டாடுறானா? யாரை ஏமாத்தப் பார்க்கிறான், இருக்கு அவனுக்கு! சம்பளத்துல கழிச்சிக்க சொல்லி ஐம்பதாயிரம் முன்பணமா வாங்கியிருந்தான் மாமா, பணத்தை வாங்கிட்டு ஒருமாசம் லீவுன்னு போனவன் இன்னும் திரும்பி வரலை பாருங்க” என்றான் ஆற்றாமையில்.

“அடேய் விடுடா ஐம்பதாயிரம் தானே, நம்மகிட்ட விஸ்வாசமா வேலை பார்த்தவன்டா அவன்” என வந்தார் ரெங்கநாதன்.

‘பேசுவது தன் தந்தை தானா! அத்தனை எளிதாக விட மாட்டாரே, அதென்ன காளியின் மீது மட்டும் புதுப்பாசம்’ என நம்ப இயலாது பார்த்த சிவா, “நீங்க சொல்லுவீங்க, ராஜாகிட்ட யாரு கணக்கு வழக்கு சொல்லுறது?” என முணுமுணுத்தான்.

வேலுமாணிக்கத்திடம் திரும்பியவன், “சரி மாமா, நான் பார்த்துகிறேன், மெக்கானிக் செட்டுக்குப் போன் பண்ணி ஆள்விட்டு வண்டியை எடுத்துக்கச் சொல்லுறேன்” என்று எழுந்து சென்றான்.

சிவா காலை தோப்பிற்குச் செல்லும் முன் காளியின் வீட்டுப்பக்கம் சென்று பார்க்க, வீடு பூட்டி தான் இருந்தது. பக்கத்தில் விசாரிக்க, மூன்று மாதங்களாக அவன் குடும்பமே ஊரிலில்லை என்றனர். தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்த சிவாவிற்குச் சினம் சீறி எழுந்தது. தோப்பிற்கு வந்தவன் தனது ஆட்களுக்கு அழைத்து வரச்சொன்னான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஆட்கள் தோப்பிற்குள் வர, குவிந்து கிடந்த தேங்காய்களை ஒரு பத்து வேலையாள் மட்டும் உரித்துக்கொண்டிருந்தனர். வந்த ஆட்களை தோப்பு வீட்டிற்குள் அழைத்து வந்த சிவா, “அடேய் நம்ம டிரைவர் காளி நியாபகமிருக்குல?” என்க, மூவரின் தலையும் ஆடியது.

“எங்கிருந்தாலும் அவனைக் கட்டித்தூக்கிட்டு வாங்கடா, ஐப்பதாயிரம் வாங்கிட்டு குடும்பத்தோட எஸ்கேப்பாகி மூன்று மாசமா என்னையே ஏமாத்தியிருக்கான்” என்றான் கொதிப்புடன்.

வேலையாட்களிடம் வேலை வாங்குவதிலும், கொடுத்த பணத்தை வசூலிப்பதிலும் சற்றே கராரானவன் தான் சிவச்சந்திரன். சில சமயம் இவர்கள் மூலம் மிரட்டிக் கூட வசூலிப்பதுண்டு.

“எங்க அண்ணி இருக்குற ஹாஸ்பிட்டல்ல போன வாரம் அவனைப் பார்த்தேன், அவன் பொண்டாட்டியும் அங்க அட்மிட் ஆகியிருக்கலாம் எதுக்கும் அந்த பக்கம் போய் பாருங்க, சுத்தி இருக்குற ஒயின்ஸ்ஷாப் இல்லை அவன் மாமியார் வீட்டுக்கே போய் கூட தூக்கிட்டு வாங்கடா” என்க, “சரிங்க ஐயா, டென்ஷனாகாதீங்க நாங்க சத்தமேயில்லாம தூக்கிட்டு வரோம்” என்றனர்.

“யாரு நீங்க! போன தடவை எழிலை தூக்க முடியாம ஏமாந்து வந்த ஏமாளி தானேடா நீங்க, இந்த தடவை மட்டும் வெறுங்கையோட வந்தீங்க நானே உங்களை உப்புக்கண்டம் போட்டு ஊற வைச்சிடுவேன்” என்றான் மிரட்டலாக.

சிவாவின் கோபத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆகையால், “கவலை வேண்டாமையா, இரண்டே நாள்ல கண்டிப்பா தூக்கிட்டு வரோம்” என உறுதியளித்துச் சென்றனர். ஆனால் தன் விதியை அறியாத சிவா தனக்குத் தானே குழி பறித்துக்கொண்டான்.

மாலை நேரம் அழகனின் கடையில் வந்தமர்ந்தான் உதயன். அங்கிருந்து பேருந்து நிறுத்தத்தைப் பார்க்க, அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டு அங்கிருந்த மரத்தடி திண்டுகள் இடிக்கப்பட்டிருந்தது.

“அடேய் வாடா புதுமாப்பிள்ளை, ஆள் அடையாளமே தெரியலையே! அன்னைக்கு அறிவுரை கேட்டுட்டுப் போனவன் தான் எவ்வளவு நாள் கழிச்சி திரும்பி வந்திருக்க? ஏன்டா எங்களை எல்லாம் மறந்துட்டீயா?” என அருகே வந்தான் அழகன்.

“என்னலே கிண்டலா?” என உதயன் முறைக்க, “நிசமாத்தான் அண்ணே ஆளே மாறிட்டீங்க!” என்றான் மணி.

“என்னடா, அப்படி என்ன மாறிட்டோமாம்?” என்க, “ஆமா எங்கடையிலே சாப்பிட்ட வரைக்கும் காஞ்ச கருவாடாட்டம் இருந்தே, இப்போ பாரு ஒரு சுத்து வெய்ட் போட்டு பெங்களூர் தக்காளியாட்டம் தகதகன்னு ஜொலிக்கிறியேடா!” என உதயனின் முகத்தைப் பிடித்து இருபுறமும் திருப்பியவாறு உரைத்தான் அழகன்.

அவன் கைகளை மெல்லிய சிரிப்போடு உதயன் தட்டிவிட, “என்ன அண்ணே வெட்கமா?” என மணி கேட்க, “பின்ன இருக்காதா? எல்லாம் எழிலோட கவனிப்பு தான், அதான் நம்மளையே மறந்துட்டான் பையன்” என்றான் அழகன்.

“டேய் அப்படியெல்லாம் இல்லடா, காலேஜ்லையும் தோப்புலையும் வேலை அதிகம்” என்க, “பின்ன இருக்காதா! நீ தான் குடும்பஸ்தனாகிட்டையே” என்றான் அழகன்.

“போடா ஒரு டீயைப் போடு” என உதய் மெல்லிய சிரிப்போடு அழகனை விரட்டிவிட்டு, மணியிடம், “எங்க கரிச்சட்டியைக் காணோம் மணி?” என்றான்.

“அவனுக்குக் காலையில இருந்தே காய்ச்சல்ன்னு அண்ணே தான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வான்னு அனுப்பி வைச்சுச்சு” என மணி உரைக்க, “அடுத்து அந்த பயலுக்கு ஒரு நல்ல பொண்ணை பார்த்து சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு வைக்கணும்” எனப் புலம்பினான் அழகன்.

“ஏன்டா? அடுத்த ஆடு அவனா? கடைய கவனிக்காம தரகர் வேலை நல்லா செய்யுறடா!” என்றான் உதயன்.

அடுத்த பக்கம்

Advertisements