மறவாதே இன்பக்கனவே 23 (2)

“நல்லது செய்றதுக்கு நீ உயிரோட இருக்கியான்னு பாருலே” எனக் கொலை வெறியோடு உதறிச் செல்ல, “இருக்குற நொடி வரைக்கும் செய்வேன்” என்றான் அசராமல்.

கேட்டுக்கொண்டிருந்த எழில் வெடிக்கும் எரிமலையானாள். பொதுவாகவே கதிரை குறைவாகப் பேசினால் தாங்க மாட்டாள், அவரோ தங்கள் ஏழ்மையை கீழாப்பேசி மிரட்டிச் செல்ல கொதித்துப்போனாள். ஏழைகள் என்றால் அடிமைகள் அல்லவே! தன்மானத்திற்கு விலை நிர்ணகிக்க அவர் யார்? பதவியும் பணமும் இருக்கும் ஆணவத்தில் தானே இவ்வளவு பேசுகிறார்! கதிர் ஒன்றும் அவருக்குக் குறைந்தவனில்லையே என அன்றைய நாள் முழுக்க வெம்பிக்கொண்டிருந்தாள்.

அதை உதயனிடம் உரைத்தவள், “இது நடந்த அன்னைக்கு காலையில சிவாவும் கதிரை உன் கழுத்துல தாலி கட்ட விட மாட்டேன்னு மிரட்டுனான். அன்னைக்கு இராத்திரி முழுக்க எனக்குத் தூக்கமே இல்லைங்க, என்ன தான் உங்க பெரியப்பா மேல கோபமிருந்தாலும் அவர் மிரட்டல்ல ரொம்ப பயந்துட்டேன். ஏற்கனவே கதிர் மாமாவை அடிச்சவங்க தானே எதுவும் செய்வாங்கன்னு தோனுச்சு. காலையிலே கதிர் மாமாக்கிட்ட அரசியல் எல்லாம் வேண்டான்னு சொன்னேன், அவர் என் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை, நான் சொன்னதை கேட்கலை. அன்னைக்கு நைட் டவுனுக்குப் போயிட்டு வரும் போது தான் விபத்து நடந்தது. விடியவும் தான் ஊருக்குள்ள விஷயம் தெரிஞ்சி எங்களுக்கும் தெரிய வந்துச்சு. ஆனால் அது விபத்துன்னு என் மனசு ஏத்துக்கிடலை” என்றவள் கண்ணீரோட அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

தன் குடும்பமா இப்படி என்ற அதிர்ச்சியில் உதயன் உறைந்தே போனான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “விஷேத்துக்கு அடுத்தநாள் நீங்க வீட்டுக்கு வரும் போது உங்களை பார்த்ததும் உண்மையிலே அவங்க மேலிருந்த கோபம் தான் உங்க மேல திரும்பிடுச்சு, என்னையே மறக்குற அளவுக்கு! விளக்கை தூக்கி எரிஞ்சது கூட என்னையே அறியாம தான் செஞ்சிட்டேன். சாரிங்க! ஆனால் என் அத்தனை அடிகளையும் தாங்கிக்கிட்டு அடுத்த நாள் நீங்க வந்து நின்ன போது எனக்கு பிரமிப்பாயிருந்துச்சு, என் கோபம் ஏதோ ஒரு விதத்துல உங்களை பாதிக்குதுன்னு புரிஞ்சது. அப்பவும் கோபப்பட்டு கதிர் மாமா இறந்ததுக்கு உங்க குடும்பம் தான் காரணம்னு கத்துனேன்.

அன்னைக்கு நைட்டே நீங்க வீட்டை விட்டு வந்தது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு, திரும்பவும் கோபப்பட்டு கதிர் மாமா ஆசைய நிறைவேற்ற முடியுமான்னு கேட்டதும் நீங்க அதைச் செய்ய ஆரம்பிச்சிங்க. ஒவ்வொரு முறை நான் கோபம் காட்டும் போதும் நீங்க அதை எந்த உரிமையில தாங்கிக்கிட்டீங்கன்னு தெரியலை, ஆனால் என் மனசுல அழுத்தமா பதிய ஆரம்பிச்சிங்க. அதே கோபத்தைக் காட்டியே உங்களைத் தள்ளி வைக்க நினைச்சாலும் மெல்ல மெல்ல நீங்க என் மனசை நெருங்குனதை தவிர்க்க முடியலை. கோபப்பட்டேனே தவிர உங்களை வெறுக்கவில்லை. அந்த கோபமும் போலியானது தான்!

கதிர் மாமா மனசுல என்ன இருந்ததோ எனக்குத் தெரியாது. என் மனசுல அப்படி எதுவுமில்லை. தாய்மாமாங்குற பாசமும் உரிமையும் தான் இருந்தது. ஒருவேளை கல்யாணம் முடிஞ்சி வாழ்ந்திருந்தா எனக்குத் தோன்றியிருக்குமோ என்னவோ தெரியலை! ஆனால் உங்களை முழுமனசோட தான் ஏத்துக்கிட்டேன். உங்களோட தோன்றுன உணர்வு முன் எப்பவும் தோன்றாத புது உணர்வு, வேற யாரோடும் இது மாதிரி தோன்றாதுங்குறதும் உறுதி” என்றவள் மேலும் நிமிர்ந்து அவன் நெற்றில் இதழ் பதித்தாள்.

உதயனுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளக்கால் வரை உடலெல்லாம் சிலிர்த்தது. மேலும் கீழிறங்கி முகம் முழுவதும் கண்ணீரோடு முத்தமிட்டவள், “என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது, உங்க பெரியப்பா பேசுனது எனக்குள்ள வன்மமா இருந்துச்சு. யாரோ ஒரு எளியவன்னு தானே கொசு அடிக்கிற மாதிரி அடிச்சாங்க இதுவே அவங்க கையே அவங்க கண்ணை குத்துனா விரலையா வெட்ட முடியும்! என்ன செய்றீங்கன்னு பார்ப்போம்னு இருந்தேன். ஆனாலும் இதுல எதுவுமே அறியாத உங்க வாழ்க்கையே பாழாக்கிட்டேன் மன்னிச்சுக்கோங்க, இந்த குற்றவுணர்ச்சி உங்களை பார்க்கும் போதெல்லாம் இருந்துச்சு.

இந்த நேரத்துல நீங்க எங்கிட்ட கேள்வி கேட்க, மேலும் உங்க குடும்பத்துக்கு எதிரா உங்களைத் தூண்டிவிட வேண்டான்னு தான் நான் பதில் சொல்லுறதில்லை, அதனால தான் சிவாவைப் பத்தியும் சொல்லலை. என்ன இருந்தாலும் உங்க குடும்பத்துக்கு எதிரா உங்களை செயல்பட வைச்ச என் கோபம் தப்பு தான், சாரிங்க! என்னை மன்னிச்சா சந்தோஷம் இல்லை பதிலுக்குக் கோபப்பட்டாலும் தாங்கிக்கிடுறேன் ஆனால் வெறுத்திட மட்டும் செஞ்சிடாதீங்க ப்ளீஸ்” என்றவள் அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு கண்ணீர் மழையே பொழிந்தாள்.

அவளை நிமிர்த்தியவன், “இந்த உண்மைய நீ சொல்லியிருந்தாலும் நான் செஞ்சிருப்பேன், நல்லாட்சி செய்தும் இல்லை நல்லவனுக்காவது வழிவிடணும். அந்த நல்லவன் யாரா இருந்தாலும்” என்றான்.

சட்டென எழில் கண்ணீர் நின்றுவிட அப்போதும் வியப்போடு அவனைப் பார்த்தவள், “அப்போ என் மேல கோபமில்லையே?” என்றாள்.

பற்களைக் கடித்தவன் முன் நெற்றியில் வலிக்கும்படி முட்டி, “செய்றதையும் செஞ்சிட்டு, முத்தம் கொடுத்து மன்னிப்பு, இதுல கண்ணீர் வேற? உன் கோபம் என்னை செயல்பட வைக்கும்னா உன் கண்ணீர் என்னைச் செயலிழக்க வைக்கும்! இதை தெரிஞ்சிக்கிட்டே மன்னிப்பு கேட்குற இலட்சணத்தை பாரு” என்க, அவன் உண்மையைக் கண்டுகொண்டதால் ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்துக்கொண்டு சிரித்தாள்.

“இன்னைக்கு இருக்குடி உனக்கு..” என்று குழைந்தவன் மடியில் இருப்பவளை கைகளில் ஏந்தியவாறு வீடு நோக்கி நடந்தான். மனம் நிறைந்துத் தழும்ப சந்தோஷ மிகுதியில் இருந்தவள் அவளாகவே எக்கி அவன் அழுத்தமான இதழை தன் தேனுரும் இதழால் மெல்லியதாகத் தீண்ட இன்பமாய் வளைத்துக் கொடுத்தான் உதய்.

காலை நேரம் வாயில் வேப்பங்குச்சியை வைத்து மென்றவாறே பின்கட்டு தொழுவத்திற்கு வந்தான் சிவச்சந்திரன். வேலையாட்கள் பால் கறந்து அளந்து கொண்டிருக்க, லிட்டர் கணக்கை எண்ணியவன் அவர்கள் எடுத்துச் செல்லவும் கிணற்றடியில் வாய் கொப்பளித்து முகம் கழுவினான். அப்போதே அங்கிருந்த வண்டியைக் கவனித்தவன் முகம் துடைத்தபடியே முன் வாசலுக்கு வந்தான். தினசரியைப் புரட்டியபடி அமர கணக்காளர் வேலுமாணிக்கம் வந்தார்.

“சின்னத்தம்பி ஐயா இல்லைங்களா?” என்க, “உள்ள தான் இருக்காரு மாமா, உக்காருங்க காபி சாப்பிடுங்க” என்றான்.

அடுத்த பக்கம்

Advertisements