மறவாதே இன்பக்கனவே 23

தோப்பில் நட்டியிருந்த மரக்கன்றுகளுக்குக் கிணற்றிலிருந்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான் உதயன். மதிய உணவு நேரம் சமையல் முடித்தும் அவன் வராததால் அவனை அழைக்க வந்தாள் எழில். தொலைவிலிருந்து அவனை அழைத்தவாறே வர அவன் கவனிக்கவேயில்லை, அருகில் வந்தவள், “ஏங்க உங்களை தான் சாப்பிட கூப்பிடுறேன் காதே கேட்கலையா?” என்றவாறு தட்டி அழைத்த பின்னே திரும்பினான்.

“ம்ம், என்னம்மா?” என்றான் மீண்டும் கவனமில்லாமல், “எத்தனை தடவைங்க சாப்பிட வாங்கன்னு கூப்பிடுறது, கிச்சன் ஜன்னல்ல இருந்து கூப்பிட்டேன், பின் வாசல்ல இருந்து கூப்பிட்டேன், கத்திக்கிட்டே இவ்வளவு தூரமும் வந்திருக்கேன்” என்றவள் நொந்து போய் நெற்றியில் அறைந்துகொண்டாள்.

அதற்குள் வாய்க்கால் தண்ணீரில் கைகால் கழுவியவன் வேப்பமரத்தடி நிழலில் இருந்த கயிற்றுக்கட்டியில் அமர்ந்து எழிலை நோக்கி கை நீட்டி அழைத்தான். முறைப்புடன் அவள் அருகே வர, “ஏன்டி எப்பப்பாரு என் மேல கோபப்பட்டு இந்த முட்டைக்கண்ணையும் உருட்டி உருட்டி முறைச்சிகிட்டே இருக்க?” என்றபடி அவள் கைகளைப் பிடித்திழுத்து தன் மடியில் அமர்த்தினான்.

நெளிந்தவள் விலக முயற்சிக்க, “நம்ம தோப்பு தானே இந்த நேரம் யாரு வரப்போறா?” என்றவன் அவள் இடையை நெருக்கி அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைக்க, நிமிர்த்தியவள் அவன் ஈர முகத்தை தன் சேலை முந்தானையால் துடைத்தாள்.

கண்மூடி ரசித்தவாறே அவள் ஆடையில் அவள் வாசத்தை இழுத்து சுவாசிக்க, அவன் நெஞ்சில் சாய்ந்தவள், “நான் எப்போங்க உங்க மேல கோபப்பட்டு இருக்கேன்?” என்றாள் கொஞ்சலாக.

“அடி பாதகி, கோபப்பட்டதென்ன காமாட்சி விளக்கை எரிஞ்சி என்னைக் கொல்லவே பார்த்தவளே நீ” என்றான்.

“அன்னைக்கு ஒருநாள் தாங்க உங்க மேல கோபம் இருந்துச்சு அதுவும் உங்க மேல இல்லை உங்க வீட்டாளுங்க மேல இருந்த கோபம் தான், அப்பறம் எப்போ நீங்க வீட்டை விட்டு வந்தீங்களோ அப்போவே போகிடுச்சு, அதுக்கு அப்பறம் கோபமெல்லாம் இல்லை சும்மா நடிப்பு தாங்க” என்றாள்.

“நடிப்பா..! உன்னை..” என்றபடி இடுப்பில் கிள்ளியவன், “ஆமா கதிர் இறந்ததுக்கு எங்க வீட்டாளுங்க தான் காரணன்னு சொன்னீயே குறிப்பா யார்? சிவாவா? பெரியப்பாவா? ஏன்னா ஆக்கிரமிப்பு அகற்ற, தேர்தல்ல நிற்கன்னு பெரியப்பா கூடவும், உங்கூட நிச்சியம் முடிச்சு சிவா கூடவும் பிரச்சனையில இருந்திருக்கான். இருந்தும் இது பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை, சரி யாருன்னு நீயாவது சொல்லு?” என்றான்.

எழில் மௌனமாய் இருக்க, கன்னத்தில் கிள்ளியவன், “இன்னுமா என்மேல நம்பிக்கை வரலை? எப்பவுமே நான் கேள்வி கேட்டா பதில் சொல்லுறதே இல்லை நீ” எனக் குறைபட்டான்.

“பதில் சொல்லாம இருக்கேன்னா அதுக்கு அர்த்தம் நீங்களே கண்டுபிடிக்கணுங்கிற தான்” என்க, “அதை தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இங்க இருந்த டாட்டா ஏசி வண்டியை எடுத்துட்டு போனாங்கல அந்த வண்டியை ஓட்டிக்கிட்டு இருந்த டிரைவர் காளியண்ணா நான் ஊருக்குள்ள வந்ததிலிருந்து அதாவது கதிர் இறந்ததிலிருந்து அவர் ஊருக்குள்ள இல்லை. எங்க பெரியப்பாவுக்கு ரொம்ப விஸ்வாசி, போன வாரம் அண்ணியைப் பார்த்த ஹாஸ்பிட்டல்ல அவரையும் பார்த்தேன், நான் கூப்பிட்டும் கண்டுக்காம போனாரு, கேட்டும் கேளாத மாதிரி என்னைத் தவிர்த்து ஓடி இருக்காரு. இத்தனை நாளா இங்கிருந்த வண்டிய நாமா குடி வரவும் எடுத்துட்டு போயிருக்காங்க, அதுவும் அந்த வண்டி பயன்பாட்டுக்கு இல்லாம இருக்கு. அந்த காளி கையில மாட்டுனா தான் உண்மை தெரியும், எல்லாத்தையும் வைச்சு ஒரு கணக்கு போட்டா அது பெரியப்பாவா? சிவாவான்னு என்னால கணிக்க முடியலை, நீயும் சொல்ல மாட்டிக்க, நான் என்ன தான்டி செய்யட்டும்?” என மூச்சு வாங்கினான்.

கேட்டுக்கொண்டிருந்த எழில் உடல் இறுக, கைகள் மேலும் இறுக்கமாய் அவன் கழுத்தை வளைத்துக்கொண்டது.

அன்று எழில் தங்கள் வயலில் வேலை செய்யும் கதிருக்கு உணவு எடுத்து வந்து கொண்டிருந்தாள்.  ரெங்கநாதனின் தென்னந்தோப்பைத் தாண்டி அவர்கள் வயல், அதற்கு அடுத்து தான் கதிரின் வயல். தங்கள் வயலுக்கு அவர்கள் தோப்பு வழியாகச் சென்று கொண்டிருந்த எழில், ரெங்கநாதனின் மிரட்டல் குரல் கேட்டு அப்படியே ஒரு மரத்தின் பின் சற்று மறைவாக நின்றுகொண்டாள். யாரை மிரட்டுகிறார் என எட்டிப்பார்க்க, அவர் கைகளுக்குள் பிடிபட்டிருந்த கதிரைக்கண்டு அதிர்ந்தாள்.

“ஏன்டா நீயெல்லாம் என்ன தைரியத்துல என்னை எதிர்த்து தேர்தல்ல நிற்க நினைச்சே? இங்க நான் தான் எப்பவும் தலைவர் என்னைத் தாண்டி எதுவும் நடக்காது. அப்பனாத்தா இல்லாத கால் வயித்துக் கஞ்சிக்கும் அல்லல்படுற உனக்கெல்லாம் என்னடா தகுதி இருக்கு என்னை எதிர்க்க? இந்த இலட்சணத்துல ஆக்கிரமிப்புகளை வேற அளந்துக்கிட்டு இருக்கீயா? ஏற்கனவே எங்கிட்ட வாங்கினவன் தானே? இருந்தும் பயம் வரலை!

பதவியாசை அரசியல் ஆசை இருக்குன்னா சொல்லு, எங்க கட்சியில தொண்டனா சேர்த்து எங்கூடவே குறையில்லாம வைச்சிக்கிடுறேன். நீயும் பிரியாணியோடும் எடுபுடிங்கிற பெயரோடையும் காலத்துக்கும் சுகமா இருந்துட்டு போகலாம். இந்த ஊருல ஒரு பையனும் என்னை எதிர்த்தது கிடையாது, எதிர்க்க நினைச்சவனும் இருக்க முடியாது, புரியும்னு நினைக்கிறேன். அதையும் மீறி என்னை எதிர்க்க உங்கிட்ட பணமா? பலமா என்ன இருக்கு?” என்றார் ஏளனமாய்.

அவர் கைகளுக்குள்ளிருந்த சட்டையை உருவிக்கொண்ட கதிர், கசங்கிய சட்டையை நீவி விட்டபடியே, “இந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யணுங்கிற மனசு இருக்கு” என நெஞ்சில் கை வைத்தான். அவன் பதிலிலே பின்வாங்க மாட்டான் என்பது புரிய முகத்தில் அறைந்தது போன்றிருந்தது.

அடுத்த பக்கம்

Advertisements