மறவாதே இன்பக் கனவே 22

எழிலரசி சென்று கதவை மூடியதும் பின்னே சென்று தட்டிப்பார்த்தவன் உட்புறமாக பூட்டியிருப்பது அறிந்து கூடத்தில் வந்தமர்ந்தான். எவ்வளவு கத்தினாலும் திறக்கமாட்டாள் பிடிவாதக்காரி என நன்கு அறிந்தவன், ‘இந்த வாயால் தான் எனக்கு வம்பே’ என நொந்து கொண்டான்.

சட்டென ஒரு யோசனை தோன்ற எழுந்து முன் வாசல் சென்றவன் கரண்ட் ப்யூஸை கழற்றிவிட்டு எதுவும் அறியாதவன் போலே மீண்டும் வந்து கூடத்தில் அமர்ந்து கொண்டான். அவன் எதிர்பார்த்தது போலே இரண்டே நிமிடத்தில் இருளில் தனிமைக்குப் பயந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் எழில்.

கூடத்தில் சிறிது நிலவின் வெளிச்சமிருக்க, வந்து தூண் ஓரம் நின்றுகொண்டாள். ‘இவ்வளவு தான் உன் தைரியமா’ என நினைத்தவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது சிரித்தால் முறைப்பாள் என நினைத்து அடக்கிக்கொண்டவன், “என்னாச்சு எழில்?” என்றான்.

அவனிடம் பேசமாட்டேன் என்பது போல் இறுக்கமாய் வாயை மூடிக்கொண்டவள் அவனை நெருங்கி சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தாள். அதன் முகப்பு விளக்கை ஆன் செய்து கொண்டு அடுப்பறைக்குள் சென்றவள் கையில் மெழுகுவர்த்தியோடு திரும்பி வந்தாள். அவனைக் கண்டுகொள்ளாது மீண்டும் அறைக்குள் செல்ல, அவள் கதவை அடைப்பதற்கு முன் கட்டிலில் விழுந்தான் உதய்.

அப்போதும் எழில் கண்டுகொள்ளாது ஒருபுறமாகப் படுக்க, “முதல்ல நான் சொல்லுறத முழுசா கேள் எழில்” என உதய் ஆரம்பித்தான். அவ்வளவு தான் சினம் கொண்டு சீறியவள் காளி அவதாரமாக எழுந்து அவன் சட்டையைப் பிடித்தாள்.

“என்ன சொன்னே? நீயும் சிவாவும் ஒன்னா? என் மேல காதலில்லாம அப்படி மட்டும் தான் பார்த்தியா? ஆமா நான் கோபப்பட்ட உனக்கென்ன? என் கோபம் உன்னை ஏன் இந்தளவுக்கு பாதிச்சது? அதுக்காக எதுக்கு உன் வீட்டை விட்டு வந்து, ஒரு பொண்ணு நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக உன் குடும்பத்தையே எதிர்த்தே? சொல்லு இதுக்கெல்லாம் பெயர் என்னன்னு எனக்கு இப்போவே சொல்லு! என்னைக் கடத்தப் போறான்னதும் துடிச்சே, நான் காணும்னதும் தவிச்சே இதெல்லாம் எதனால சொல்லு?

என் கண்ணீரைப் பார்த்துத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, நான் அழுதா உனக்கென்ன? என் கண்ணீர் உன்னை என்ன செஞ்சது சொல்லு, எனக்கு இப்போவே பதில் தெரிஞ்சாகணும் சொல்லு! கதிர் மாமா கூட நான் அடிவாங்கி அழும் போது மிட்டாய் வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்யும், ஆனால் நீ எங்கம்மாவை அடிக்கவே விடாமத் தடுத்தியே எதனால சொல்லு? இதெல்லாம் சிவா செய்யலை பின்ன எப்படி நீயும் சிவாவும் ஒன்னாவிங்க அதையும் சொல்லு? இதெல்லாம் காதல் இல்லைன்னா இதுக்குப் பெயர் என்ன சொல்லு?” என உதயனின் சட்டையைப்பிடித்து பதில் சொல்லும்படி உலுக்கியவள் அவன் கன்னத்தில் அறைந்தாள்.

சுகமாகத் தாங்கியவன் மனதில் உள்ளதெல்லாம் அவள் பேசட்டுமே என மௌனமாய் இருக்க, “என்ன இதெல்லாம் அனுதாபம் தான்னு சொல்லப் போறீயா? அப்பறம் எப்படி என் மேல ஆசை வந்துச்சி? கொஞ்ச நாளா உங்கிட்ட உள்ள தடுமாற்றத்தை நான் கவனிக்காம இல்லை, உங்கிட்ட வந்து விழாதா குறையா பேசுற விமலாக்கிட்ட கூட தள்ளி நிற்கிற உன் கண்ணியத்தை கவனிச்சிருக்கேனே, ஆனால் எங்கிட்ட காட்டுற நெருக்கம் எதனால? சிவாவை ஏன் அடிச்சா? சிவாவைப் பத்தி உங்கிட்ட சொல்லலைன்னு ஏன் கோபப்பட்ட? இந்த உரிமை எதனால சொல்லு?” என அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி கண்ணீரோடு கேட்டாள்.

உதய் அவள் கைகளைப் பிரிக்க வாடிய பூங்கொடியாய் அவன் நெஞ்சிலே சாய்ந்தவள் மெல்ல விசும்பியபடியே “உண்மையிலே இதெல்லாம் என்மேல உள்ள அனுதாபத்துல கூட நீங்க செஞ்சிருக்கலாம், ஆனால் எனக்கு அப்படித் தெரியலை. தேர்தல்ல நிக்க வேண்டாம்னு நான் சொன்னபோது கதிர் மாமா கூட கேட்கலை, ஆனால் நீங்க கேட்டீங்க, யாருமே எனக்குத் தராத முக்கியத்துவத்தை என் வார்த்தைக்கு நீங்க தரும் போது சிவாவை விட உயர்வா கதிர் மாமாவை விட நெருக்கமா தான் தெரிஞ்சிங்க! அன்னைக்கு உங்க சொத்தெல்லாம் இழந்து சிவா கையாள அடிவாங்கி இரத்தத்தோட நின்ன போது என்னையே அடிச்ச மாதிரி நெஞ்செல்லாம் வலிச்சது. இதனால தான் உங்களுடனான கல்யாணத்தை முழுமனசா என்னால ஏற்க முடித்தது. ஒருபோதும் சிவாவை உங்களோட ஒப்பிட்டு சொல்லாதீங்க, முத்தம் கொடுத்துக்கிறதும் கட்டிபிடிச்சிக்கிறதும் தான் காதலா? ஆனால் எனக்கு நீங்க செஞ்சதெல்லாம் காதலா தெரிஞ்சதே! இல்லைன்னு சொல்லி என் மனசை நோகடிச்சிடாதீங்க ப்ளீஸ்” என்றாள்.

உதயன் அந்த நொடி சிறகில்லாமல் விண்ணில் பறந்துகொண்டிருந்தான். நேசத்தை சொல்ல வந்த நொடி அவள் நேசத்தை அறிந்ததில் அளவில்லா ஆனந்தம்! எழிலின் கோபத்தை மட்டுமே பார்த்திருந்தவன் முதல் முறை அவள் அன்பைக்கண்டு தன்னை மறந்திருந்தான். தன்னோடு இறுக்கி அணைக்க அவள் இதழ்கள் அவன் நெஞ்சில் உரச, அவன் இதழ் அவள் உச்சியில் பதிந்தது.

அதில் சற்று மயக்கம் கொண்டவள் மேலும் அவன் மேல் அழுத்தமாய் சாய அவன் கட்டிலில் விழுந்திருந்தான். உதயின் கைகள் அவள் இடை வளைக்க, அவன் மேல் கிடந்தவள் கன்னத்தில் கிள்ளியபடி, “அதான் என் மேல காதலில்லை, ஆசையில்லைன்னு சொல்லிட்டீங்களே அப்பறம் என்ன இதெல்லாம்?” என்றாள் அதட்டலாக.

அடுத்த பக்கம்

Advertisements