மறவாதே இன்பக்கனவே 21

செவ்வண்ண கதிர்கள் வீசும் பொன்மாலை நேரம், முல்லை மலர்கள் மலர்ந்து வாசம் கமழ்ந்து கொண்டிருந்தது. மலர் பறித்துக்கொண்டிருந்த எழிலரசி தன் பின்னே மிக மெல்லிய காலடியோசை கேட்க, உதயன் தான் வந்துவிட்டதாக நினைத்தாள்.

“எப்படி இருக்க எழிலரசி?” என்ற குரலின் அடையாளம் உணர்ந்தவள் அதிர்ந்து திரும்பினாள். சிவந்த முகத்தோடு கைக்கட்டியபடி சிவா நின்றுகொண்டிருக்க, பார்த்தவளுக்கு மெல்லிய பயம் எழ, நொடி நேரத்தில் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது.

கழுத்தில் புது மஞ்சள் தாலியும், நெற்றியில் செந்நிறக்குங்குமமும் மிளிர, உதயனின் மனைவியாய் நிற்கும் எழிலை சிவாவால் சிறிதும் ரசிக்க முடியவில்லை. பருவ வயதிலிருந்து அவள் வளர்ச்சியை சிறுக சிறுக ரசித்தவனுக்கு அவளின் புதுத்தோற்றம் பிடிக்கவில்லை. ஏற்க இயலாத நெஞ்சம் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. எழிலையிழந்த கவலை மலையளவு இருக்க அதுவும் கோபமாகத் தான் வெளிவந்தது.

“இங்க எதுக்கு வந்த? முதல்ல வெளிய போ” என எழில் வாசல் நோக்கி கை நீட்ட, அவனோ சிறு சிரிப்புடன் அவளை நெருங்கினான். எழில் பதட்டத்தோடு இரண்டடி பின் நகர, “என்ன கேட்ட? எதுக்கு வந்தேன்னா?” என்றவன் அருகிலிருந்த செடியிலிருந்த மலரைப் பறித்து தரையில் எறிந்தான்.

அவள் முகம் பார்த்து மெல்லிய சிரிப்போடு, “பயப்படாத மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் பறிக்கிற அளவுக்கு நான் தரம் கெட்டவனில்லை, அது போல எனக்கு உரிமையானதையும் விட்டுக்கொடுத்திட மாட்டேன்” என்றான்.

அவன் செயலில் எழிலுக்கு சினமேறியது. பயத்தையும் மறைத்துக்கொண்டவள் ‘எங்கிட்ட இவ்வளவு வாங்கியும் திருந்துறானா பார்’ என நினைத்து கோபமுடன் முறைத்தாள்.

“யார் நீங்க! என் புருஷனுக்கு உரிமையான சொத்தையே பறிச்சிக்கிட்ட கேவலமான ஆளுங்க தானே!” என்றாள் எழில்.

“உன் புருஷனா? ஹோ உதய்யா! அவனா தான் எழுதிக்கொடுத்துத் தேர்தலையும் தோத்து நிக்கிறான். ஆமா உன் புருஷனா இந்த பாசம் எப்போதுல இருந்து உனக்கு வந்துச்சு? அப்போ ஊருக்குள்ள பேசிக்கிட்டதெல்லாம் உண்மை அப்படி தானே! அவனை காதலிச்சது மட்டுமில்லாம ப்ரைன் வாஷ் பண்ணி எங்களுக்கு எதிராவும் செயல்படத்தூண்டி விட்டுருக்க? ச்சீ..கல்யாணத்துக்கு முன்னையே அவனோட காதல், அன்னைக்கு தோப்புல நான் சொன்னதெல்லாம் உண்மை தான் இல்லை? என்ன பொண்ணு நீயெல்லாம்?” என்றான் ஆத்திரமாக.

அன்று தோப்பில் விட்டதையே மீண்டும் ஆரம்பிக்கிறானே என எரிச்சலுற்றவள், “ஆமா அது உண்மை தான். கல்யாணத்துக்கு முன்னே அவரை விரும்புனேன், விரும்பி தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். உன்னால என்ன செய்ய முடிஞ்சது? இல்லை இப்போ தான் உன்னால என்ன செஞ்சிட முடியும்? இப்போவும் அவரை தான் விரும்புறேன் உன்னால என்ன செய்ய முடியும்? சொல்லு, என்ன செய்ய முடியும்?” என கை நீட்டிக் கேட்டபடி சண்டைக்கு நின்றாள்.

“செய்றேன், ரணமா எரியிற என் வலியை உனக்கு உணர்த்துறேன். இனி ஒவ்வொரு நொடியும் உன் கழுத்தில் இருக்கிருற தாலி நிலைக்குமான்னு நினைச்சி நினைச்சி நீ துடிப்ப ஏற்கனவே கதிரை இழந்து இழப்போட வலியுணர்ந்த உனக்குத் திரும்பும் அந்த உயிர்வலியை நினைவுப்படுத்துறேன்” எனக் கைநீட்டி அவனும் எச்சரித்தான்.

எழிலுக்குச் சினம் எல்லை தாண்டிக்கொண்டிருந்தது. அதே சினத்துடன், “உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிப்பாரு, முயற்சி செய், நீ மூக்கொடையுறதை பார்க்க நானும் காத்துக்கிடக்கேன்” என்றாள்.

“ச்சே! உன்னைப் போய் உசுரா காதலிச்சேனே, என்னை ஏமாத்திட்டில்ல? ஆமா என்னை மட்டும் தானா, இல்லை கதிரையும் ஏமாத்திட்டீயா? கதிர் இருக்கும் போதே அவனை ஏமாத்தி உத்யனோட காதலா?” என்றவன் அற்பமாய் அவளைப் பார்க்க, எழிலுக்கு உடல் கூசியது, நெஞ்சே வெடித்துவிட்டது. கண்கள் கலங்க வார்த்தை வாராது வாய்யடைத்து கண்ணீரோடு நின்றாள்.

நான் என்ன ஏமாற்றினேனாம் இவனை ஆரம்பத்திலிருந்து எனக்குப் பிடிக்காது, கதிர் மீது தாய்மாமன் என்ற பாசமும் மரியாதையும் மட்டுமே உண்டு. இவ்விருவரும் அவர்களாக என் மீது காதலை வளர்த்துக்கொண்டால் நான் எவ்வாறு பெறுப்பாவேன்? எனக்கென்று ஒரு மனது விருப்பு, வெறுப்புகள் இருக்காதா? என்னை பேச இவனுக்கு என்ன உரிமை? முட்டாளே! என ஆற்றாமலையில் விம்பினாள்.

எழிலின் கண்ணீர் தன் நெஞ்சில் எரியும் தணலை மெல்லக் குளிர்விப்பது போன்றிருக்க சிரித்துக்கொண்டவன், “இப்போ அழு! எனக்கு இது பத்தாது, இன்னும் நீ அழ வேண்டியது நிறைய இருக்கு” என்றவன் திரும்ப, சட்டென ஒரு விசை தாக்கி நிலையில்லாது தள்ளாடி எழிலின் காலருகில் விழுந்தான்.

விழுந்தவன் தலை உயர்த்திப் பார்க்க, கைகளை உதறியபடி உதய் நின்றிருந்தான். தலைக்கு மேல் குருவி சுற்றுவது போல் கிர்ரென்ற ஓசையோடு தலையே சுற்ற விழிகளை இறுக்கி மூடி மீண்டும் திறந்தான்.

முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டபடி, “என்னடா சொன்ன? தைரியமிருந்தா திருப்பிச் சொல்லு” என்ற உதய் கொத்தாக சிவாவின் சட்டையைப் பற்றித் தூக்கினான். உதயனை சற்றும் எதிர்பாராத சிவா அத்தனை நாட்களாகச் சேமித்து வைத்திருந்த கோபத்தை வெளியிட ஓங்கி குத்தினான்.

அடுத்த பக்கம்

Advertisements