மறவாதே இன்பக்கனவே 20 (3)

“சிவா எங்க மாமா? இன்னும் ஊருக்குள்ள வராம இருக்கான்?” என்க, அவரோ அவன் கேட்பதன் காரணமறியாது ராஜாவுக்கு அடிபட்டது அவனுக்கு உதவியா சிவா இருப்பது அனைத்தையும் உரைத்தார்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், “ஆமா மாமா தோப்பு வீட்டுல ரொம்ப நாளா ஒரு குட்டியானை வண்டி நின்னிக்கிட்டு இருந்தது, நான் அங்க வரவும் திடீர்னு ஒருநாள் வண்டியை காணும், எதுக்கு வண்டி அங்கிருந்துச்சி? யார் எடுத்துட்டுப் போனா?” என்றான்.

“அதுவா தம்பி, நம்ம ட்ரைவர் காளி தான் வண்டி ரிப்பேர்ன்னு அங்க நிறுத்தினான். மாமியார் வீட்டுக்குப் போனவனை இன்னும் காணும், எடுத்து மெக்கானிக் செட்டுல விட ஆளில்லாம ஐயாவும் தேர்தல் நேரம் மும்மரமா இருக்க மறந்துட்டாரு போல, நீங்க அந்த வீட்டுக்குப் போகவும் உங்களுக்கு விட்டுக்கொடுத்திட கூடாதுன்னு ஆள்விட்டு எடுத்துப்பார். பெரிய மனுஷனும் சில நேரம் சில்லறைத்தனமா தான் நடந்துகிடுறாங்க” என்றார் மனம் தாங்காமல்.

“நானே இப்போ தான் தோப்பு வைக்கிறேன், அது உருவாக ஐந்தாறு வருஷமாவது ஆகும். வண்டி தேவையே இல்லையே மாமா, அப்பறம் எனக்கு எதுக்கு?” என்றவன் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி வந்தான்.

அன்று காலையிருந்து வீட்டையே இரண்டாக்கியபடி பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தான் உதயன். கல்லூரி விரிவுரையாளராக வேலையில் சேர்ந்திருக்க, முதல் நாள் வேலைக்கு கிளம்புகிறான். தயாராகத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் தன் தேவைகளுக்கு எழிலை அழைக்க, எழில் நாமம் தான் மூச்சுக்கு இணையாக ஒவ்வொரு நொடியும் அவன் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது.

எழில் அவன் சட்டையை அயன் செய்துகொண்டிருக்க, குளியலறையிலிருந்து இடையில் கட்டிய டவலோடு ஈரத்தலையை துடைத்தபடி வெளியே வந்தான். அவன் வெற்றுடலை பார்க்காது அவனிடம் சட்டையை நீட்டியவள் பரபரப்போடு சமையலறை நோக்கிச் சென்றாள்.

அறைவாசல் வரை சென்றவள் படிகளில் கால் தட்டிவிட, “அம்மா..!” என்ற அலறலோடு தரையில் அமர, உதய் பதறி வந்து அவள் கால்களைப் பிடித்தான்.

காயமேதும் இல்லாத போதும் சிவந்திருந்த அவள் கால்களை அழுத்தித் தேய்த்தவன், “மெல்ல நடக்க வேண்டியதுதானே? என்ன அவசரம் உனக்கு?” எனக் கடிந்தான்.

ஆனால் எழிலுக்கு தான் அவன் வார்த்தைகள் காதுகளுக்குள் ஏறவில்லை, தான் உள்ளங்கால்களைப் பற்றியிருந்த ஈரக்கைகளின் வழி சில்லென்ற குளுமை பரவ, அவனிடமிருந்து வந்த இனிய நறுமணம் அவளை மயங்கியது. அதை விட நேற்று வரை அவன் வைத்திருந்த குறுந்தாடி காணாமல் போய் பளிச்சென்ற கன்னமும், அளவாக ட்ரீம் செய்திருந்த கருகரு மீசையும் அவன் முகத்திற்கு மேலும் வசீகரத்தைக் கூட்டியது. புதிதாகப் பார்ப்பது போன்று பார்த்தவள் தன்னையும் மறந்து அவன் கன்னம் வருடினாள்.

அவள் ஸ்பரிசம் உணர்ந்தவன், “ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போவோமா?” என்றபடி நிமிர்ந்து அவள் முகம் நோக்க, விரிந்த கண்களுள் மின்னிய துளி மையலை அடையாளம் கண்டவன் லேசாகச் சிரித்தான். அதே நேரம் சமையலறையிலிருந்து கேட்ட குக்கர் சத்தத்தில் தெளிந்தவள் கைகளை எடுத்துவிட்டு எழுந்து ஓடினாள்.

கிளம்பி வந்தவன் காலை உணவிற்கு விரித்த வாழையிலையின் முன் தரையில் அமர்ந்தான். உணவு பரிமாறியபடி, “ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா? ஊருக்குள்ள குளமெல்லாம் கிளீன் பண்ணுறாங்க, ஆக்கிரமிப்பு எல்லாம் அகற்றிட்டாங்க. அது மட்டுமில்ல கோவில் குளத்தைக் கூட சுத்தம் பண்ணி தூர்வாருறாங்களாம். நேத்து அம்மா வந்திருந்த போது சொன்னாங்க” என்றாள்.

தெரியும் என்பது போல் தலையாட்டியவன் உண்டு முடித்து கைகழுவி எழுந்துவர, அவன் பின்னே சுற்றிக்கொண்டிருந்தவள், “இது தாங்க, கதிர் மாமா செய்ய நினைச்சாரு. அவர் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று முகம் மலர்ந்தாள்.

அவள் ஒற்றை வார்த்தையில் அவனுக்கும் சந்தோஷம் பற்றிக்கொண்டது, அன்று செய்ய முடியுமா என்று கேட்டவள் இன்று செய்துவிட்டீர்களே எனப் பாராட்டவும் பெரிதாய் சாதித்ததை போன்ற திருப்தியில் தேகம் குளிர்ந்தது. புது இரத்தம் பாய்ந்தது போல் புது உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது.

தன்னை நெருங்கி நின்றிருந்தவளின் இடைவளைத்து தன்னோடு இழுத்து இறுக்கி அணைத்தவன், “என்ன சொன்ன?” என்றான். அதுவரை அறிந்திராத இதமான அழுத்தம் தரும் அணைப்பு கூச்சமூட்ட, கன்னங்களில் அனல் கதிர்கள் பரவுவது போன்றிருக்க நாணுமுடன் அவன் கைகளை விலக்கிவிட முயன்றாள்.

“எதிர்பார்க்கவே இல்லை, நான் கேட்டதை செஞ்சிட்டீங்க சந்தோஷம், விடுங்க” என மெல்லிய சிணுங்கலோடு கைகளை விலக்க முயன்றாள். என்ன முயன்றும் அவன் இறுக்கிய விரல்களை விலக்க முடியவில்லை.

தன் விழிபார்க்க தவிர்ப்பவளின் சிவந்த செம்முகம் தாபம் கூட்ட, “அதான் நீ சொன்னதைச் செஞ்சிட்டு வந்திருக்கேனே ஒரு சின்ன பரிசு எதுவுமில்லையா?” என அவள் இதழ்களில் பார்வை பதித்தபடி கேட்டான்.

முகம் மலர, புன்சிரிப்போடு அவன் நெஞ்சில் கைவைத்து, “பரிசு தானே உங்களுக்கு பிடிச்ச பாதாம் ஹல்வா செஞ்சி வைக்கிறேன், இப்போ டைமாச்சி கிளம்புங்க” என சமையலறையிலிருந்து தள்ளி விட்டாள். பாதாம் ஹல்வாவா! தலையில் அடித்துக் கொள்ளாலாம் போலிருக்க பெருமூச்சோடு கிளம்பினான்.

உதயன் மனம் நிறைந்திருந்தது, திருமணத்தின் போது கூட எழிலோடு இத்தனை நெருக்கம் உருவாகுமென நினைக்கவில்லை. என்னவோ செய்கிறாள் எழில், அவள் எண்ணியதை எல்லாம் தன்னை செய்ய வைக்கிறாள்! இருந்தும் அவளைப் பிடித்திருந்தது. மெல்லிய காதல் பாடலும், மல்லிகை மணமும் ரசிக்கத் தொடங்கி இருந்தான்.

ராஜாவிற்கு அன்று கை கட்டுகள் அவிழ்க்கப்பட மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்ட சிவா வாசலோடு கிளம்பிவிட்டான். ராஜாவிடமும் ரெங்கநாதனிடமும் சொல்லிக்கொள்ளாமல் கோபமுடன் ஊருக்கு தான் கிளம்பி வந்தான்.

காலையில் சொல்லியபடியே பாதாம் ஹல்வா செய்து முடித்து, பொன்மாலை நேரம் குளித்து, கருமை வண்ண புடவையில் மெல்லிய அலங்காரத்தோடு வாசலில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தாள் எழிலரசி. அப்போதே முல்லை கோடியில் மலரவிருந்த மலர்கள் கண்ணில் படப் பறிக்கத் தொடங்கினாள்.

ஊருக்குள் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த சிவா மாந்தோப்பு வீட்டை நெருங்கும் போது உதய்யும் எழிலும் அங்கு குடியிருப்பது நினைவிற்கு வந்தது. ஊருக்குச் சற்று தள்ளி இருக்கும் தோப்பு ஆகையால் ஆள் நடமாட்டமில்லாத பகுதி, அதுவும் மாலை நேரம் யாரும் வரப்போவதில்லை.

தோப்பு வீட்டை நெருங்கிய சிவா சாலையில் மறைவான இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்துச் சென்றான். நெருங்கும் போதே முன்புறமாக திரும்பி நின்று பூ பறித்துக்கொண்டிருந்த எழில் பார்வையில் விழ, மேலும் வேகமுடன் நெருங்கினான் சிவச்சந்திரன்.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

Advertisements