மறவாதே இன்பக்கனவே 20 (2)

செல்வராஜூம் உதயனும் ஹாலில் பேசிக்கொண்டிருக்க, அபிராமி சமையலறையில் வேலையில் இருக்க, எழிலும் ப்ரதிக்ஷாவும் அவள் அறையில் விளையாடிக் கொண்டிருந்தார். எழில் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு ஒரு சாக்லேட்காக உதய் சொல்லிக்கொடுத்தபடியே எழிலை அழகென்றாள் ப்ரதிக்ஷா. அதுவும் உதய் தான் சொல்ல சொல்லிவிட எழிலுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஏதோ விளையாட்டாகக் கேட்டதையும் மறுக்காமல் சிரத்தை எடுத்துச் செய்திருக்கிறானே!

“அப்பறம் மாப்பிள்ளை, தோப்பு வேலையெல்லாம் எந்தளவுல இருக்கு? வேற எதுவும் தொழில் பண்ற ஐடியா இருக்கா? ஒரு மில்லு வருது வாங்கிடலாமா?” எனக் கேட்டார் செல்வராஜ்.

“இல்லை மாமா, இப்போதைக்கு வேண்டாம். குழிதோண்டி தொழுவுரம், ஆவாரை எல்லாம் போட்டுப் பதப்படுத்தி வைச்சிட்டோம், கண்ணுக்கும் ஆடர் கொடுத்து இருக்கேன். மா, எலுமிச்சை, தென்னை கொஞ்சம் தேக்கு இப்போதைக்கு இது தான் வைக்கப் போறேன். இதை பராமரிச்சி விளைச்சல் எடுக்க ஐந்து, ஆறு வருஷமாகிடும்.  இதுக்கும் மேல வாழை, கொய்யா எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். அது மட்டுமில்லை மாமா ஒரு இன்ஜீனியரிங் காலேஜ்ல கெஸ்ட் லேக்ட்சரா இன்வைட் பண்ணியிருக்காங்க, மன்த்லி நல்ல சேலரி ஆஃபர் பண்றாங்க. வீக்லி த்ரீ டேஸ் மட்டும் போற மாதிரியிருக்கும் சோ ஜாயின் பண்ணிடலாம்னு இருக்கேன். இப்போதைக்கு இது போதும் மாமா” என்றான் உதயன்.

“ரொம்ப நல்லது மாப்பிள்ளை, இந்த காலத்துல விவசாயத்தை மட்டுமே பிரதானமா நம்பிக்கிட்டு இருக்க முடியாதுலே” என அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார் செல்வராஜ்.  உள்ளே அறையிலிருந்த அபிராமியும், எழிலும் கேட்டுக்கொண்டே தானிருந்தனர்.

பின் அபிராமி விருந்து வைக்க அனைவரும் உண்டனர். மாலை வரை அவர்கள் வீட்டில் நேரம் கழிய, கிளம்பும் நேரம் தாம்பூலத்தில் இருவருக்கும் பட்டும், பழமும், பாக்கு வெற்றிலையோடு வைத்துக் கொடுக்க, உதயனும் எழிலும் இருவரிடமும் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டு தாம்பூலம் வாங்கிக்கொண்டனர்.

விடைபெற்றுக் கிளம்பியவர்கள் வரும் வழியில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு வந்து சேர்ந்தனர்.

காலையில் அழகனின் கடைப்பக்கம் செல்ல, கடை அன்று விடுமுறை. கடையின் முன் பகுதியிலிருந்த கொட்டகைகள் அனைத்தையும் பிரித்துக்கொண்டிருக்க, ஒரு கொத்தனாரும் மற்றொரு ஆளும் பக்கத்து காலியன இடத்தில் அளந்து கொண்டிருந்தார். அழகன் நின்று அவர்கள் வேலையைப் பார்ப்பதை கவனித்துக் கொண்டிருக்க, அருகே வந்த உதயன், “மச்சான் என்னாச்சு?” என்றான்.

“வாடா நல்லவனே நான் கேட்க வேண்டியது நீ கேட்கிற?” என்றான் முறைப்புடன். “அடேய் என்ன நடந்துச்சின்னு கேட்டா இது என்ன லுக்?” எனப் புரியாது உதயன் கேட்டான்.

“இரண்டு வாரம் முன்னாடியே ஊருக்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி கவெர்மென்ட்ல இருந்து நோட்டிஸ் விட்டதா ஊர்த் தலைவரு அன்னைக்கே சொன்னாரு. அவரே ஸ்கூல் கிரவுண்ட், குடோன்னு ஒதுக்கும் போது நானெல்லாம் எம்மாத்திரம்?” என்றான்.

நம்பயியலாது அதிர்ச்சியானவன் “அதுக்கு, கடைய காலி செய்றியா?” என்றான்.

“டேய் கொஞ்சமாவது நல்ல வார்த்தை சொல்லேன்டா, முன்னாடி உள்ள கொட்டகை பதினஞ்சி அடி தான்டா நடைபாதை, அதுக்கு பின்னே கடை என் இடம் தான். அதான் கொட்டகையை பிரிஞ்சி பக்கத்து இடத்துல நாலடி சுவத்தைக் கட்டி கொட்டகையை போட்டு, மேற்கால இருக்குற வாசலை தெக்கால போடப்போறேன்” என விவரித்தான் அழகன்.

“இரண்டு நாள் வேலை தானே செஞ்சிடு, இனி போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கும்” என உதயன் உரைக்க மேலும் முறைத்தான் அழகன்.

“என்னடா மச்சான்?” எனச் சிரிப்புடன் கேட்க, “நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்டில, தேர்தல்ல ஜெயிக்காட்டியும் நீ ஆக்கிரமிப்புகளெல்லாம் அகற்றிட்டில, சிரிக்காத ஏதோ செஞ்சிருக்கடா நீ!” என்றான் அழகன்.

“நாலு பேருக்கு நல்லது நடக்குன்னா எது செஞ்சாலும் தப்பில்லைடா” என மேலும் சிரிப்புடன் டயலாக் விட்டவன் கிளம்ப, கடுப்பானான் அழகன்.

“சரி சரி, வேலையப்பாரு. வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” எனக் கிளப்பினான்.

பைக்கில் சென்று கொண்டிருந்த உதயன் ஊர் தாண்டிச் செல்கையில் குளக்கரை ஓர அரசமரத்து நிழலில் ரெங்கநாதன் நின்றிருக்க, வேலையாட்கள் குளத்திலிருந்த கருவேல மரங்களை வெட்டி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். பெரியப்பாவைப் பார்த்தபடி மௌனமாகக் கடந்து சென்றான். ஏதோ தன்னால் இயன்ற நல்லதை ஊருக்குச் செய்ததால் மனம் நிறைந்திருந்தது.

ஊரில் நடப்பவைகளை அறிந்த சிவா தந்தைக்கு அழைத்து கத்த, இரண்டாம் முறையாக வந்திருந்த புகார் ஆகையால் அதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடக்க வேண்டுமென அது குறித்து தங்கள் வழக்கறிஞரிடம் உதயன் விவரம் கேட்டதாகவும், அதை அவர் தெரிவித்ததாகவும் உரைத்தார். அது மட்டுமின்றி இம்முறை வட்டாட்சியர் மாறிவிட்டதால் புதிதாக வந்தவர் அவன் புகாரைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் படி ஆணையிட்டதையும் உரைத்தார்.

ஊருக்குள் அதுவரை போட்டியில்லாமல் இருந்தவர் தற்போது போட்டியிருக்க தற்போது மக்களிடம் ஒரு நற்பெயர் தேவையாக உள்ளதால் தன் செயல்களில் தலையிட வேண்டாமென்று கடித்து வைத்தார். தன் தந்தையே ஆட்டிப்படைக்கிறானா உதயன் என அவன் மேலிருந்த கோபத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டான்.

ஆடர் கொடுத்திருந்த மரக்கன்றுகள் அனைத்தும் வந்திறங்க மீண்டும் ஆட்களை வைத்து தோப்பு வேலையை ஆரம்பித்தான் உதயன். மரங்கள் நட்டு முடிய ஒரு வாரங்களுக்கும் மேலானது. அதே நேரம் குளத்திலும் ஊருக்குள்ளும் ஆங்காங்கிருந்த ஆக்கிரமிப்புகள் முழுதும் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தியிருந்தனர். அழகனும் கடையை விரிவுபடுத்தி திறந்ததிருந்தான்.

உதயன் எழிலை நெருங்கவில்லையே தவிர அவள் மேல் படிந்த பார்வையைத் திருப்ப முடியவில்லை. தற்போது இருவரும் வெகு இயல்பாகப் பேசிக்கொண்டனர். முன் ஒரு வார்த்தை பேசுவதற்கே தயங்கி பயந்து கொண்டிருந்தவன் தற்போது எழில் அமைதியாக இருக்கும் சமயங்களில் கூட அவனாக உரையாடலை உருவாக்கி பேச்சை வளர்த்தான்.  அத்தனைக்கும் இடையில் வழக்கம் போலே அவளை, அவள் செயலை, அவள் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். தன்னை அவள் பார்க்கிறாளா? என்றும் ஆராய ஆரம்பித்திருந்தான்.

டவுனுக்குச்சென்றிருந்தவன் வேலையை முடித்து பைக்கில் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்க தோப்பிலிருந்து எதிரே வந்து கொண்டிருந்தார் வேலுமாணிக்கம்.

அவரை பார்த்தும் வண்டியைச் சாலையோரம் நிறுத்தியவன், “என்ன வேலுமாமா நல்லாயிருக்கீங்களா?” என நலம் விசாரிக்க, அவரும் நலம் விசாரித்தார்.

அடுத்த பக்கம்

Advertisements