மறவாதே இன்பக்கனவே 20

உற்சாகமாக வீட்டிற்குள் வந்தவன் மெல்ல உள்ளே வந்து எட்டிப்பார்த்தான். எழில் சமையலறைக்குள் இருக்க, சத்தமின்றி அவளருகில் வந்து நின்றவன் ஒரு ரசனையான பார்வையால் தேகம் தீண்டினான்.

மெல்லிய குரலில், “உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?” எனப் பாட ஆரம்பிக்க, “மிளகாப்பொடி” என்றாள் பட்டென.

உதயன் அதிர்ந்து விழிக்க, “அந்த மிளகாப்பொடி டப்பாவை எடுங்க” என்றாள் மீண்டும்.

‘அப்பாடா நம்மள இல்லை’ என நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டவன் எடுத்துக்கொடுத்தபடி, “ஒரு பொய்யாவது சொல் கண்ணே..” என ஆரம்பிக்கச் சத்தமாகச் சிரித்தபடி அவன் புறம் திரும்பியவள், “ஏங்க இப்போ வடிவேல் மாட்லேஷன்ல பாடி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள்.

காமெடியா என அதிர்ந்த உதய், ‘பெர்பாமன்ஸ் பண்ண விடுடி’ என மனதில் புலம்பினான். அவன் முகம் பார்த்த எழில் சிரிப்புடனே, “பாத்ரூம்ல தான் பாடுவீங்க, இப்போ கிட்சனிலும் பாட ஆரம்பிச்சாச? சரி என்ன வேணும் காஃபியா?” என்க, தலையாட்டிவிட்டு வெளியே வந்தான்.

‘சூப்பர்சிங்கர் ரேஞ்சுக்கு உருகி உருகி பாடுனா, பாத்ரூம் சிங்கர்ன்னு பால்பு கொடுக்குறா! இதுக்கு தான் ஹிந்தியில பாடச்சொல்லி அப்போவே என் ஏழாம் அறிவு சொல்லுச்சி, கேட்டேனே’ எனப் புலம்ப, ‘நீ ஹிந்தியில பாடின அவளுக்கு எப்படிடா புரியும்?’ என்றது மனசாட்சி.

எப்படியும் பாட விடமாட்டாள் எனப் புரிந்துகொண்டவன் தன்னறைக்குச் சென்றான். அடுத்து என்ன செய்வதென யோசித்தபடி அறைக்குள்ளே நடந்தான். மேசையிலிருந்த டைரி கண்ணில் பட, எடுத்தவன் கவிதை ஒன்றை எழுதி அதை மடித்து எடுத்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான்.

சில நிமிடங்கள் கையில் காஃபியோடு வந்தவள், அவனிடம் நீட்ட அமைதியாக வாங்கிக்கொண்டவன், “அதென்ன உன் கால் அடியில ஏதோ பேப்பர் மாதிரி கிடக்கு?” என கை நீட்டினான்.

சட்டெனக் குனிந்து பார்த்தவள் கீழே கிடந்த பேப்பரை எடுக்க, உதயன் காஃபியோடு எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான். கதவருகே மறைந்து நின்று அவள் வாசிக்கிறாளா எனப் பார்க்க, பேப்பரை பிரித்துப் படித்துக்கொண்டிருந்த எழிலின் முகம் மலர, மெல்லியதாய் சிரித்தாள்.

“லேசர் விழியோ அதன் மின்சாரப் பார்வையோ!

பைதகோரஸ் மூக்கோ அதில் கதிர்வீசும் மூக்குத்தியோ!

பாஸ்பரஸ் கன்னமோ அதில் கந்தக கோபமோ!

மேக்னட் இதழோ அதன் நனோ மீட்டர் சிரிப்போ!

அறிவியலும் அதிசகிக்கும் அழகியடி நீ!

அதில் எதுவோ எதுவோ என்னை ஈர்க்குதடி!”

 

மடித்து வைத்தவள் மீண்டும் நினைத்து நினைத்துச் சிரித்தாள். சமையலின் போதும் சிரித்துக்கொண்டே செய்தாள். மணி நேரங்கள் கடந்தும் அவளிடம் பெரிதான பிரதிபலிப்பு எதுவும் இல்லாது போக மீண்டும் ஹாலில் வந்தமர்ந்து கவனித்தான்.

இரவு உணவின் போது, “அப்போ ஏதோ பேப்பர் கையில எடுத்தியே என்ன அது?” என உதய் கேட்க, சென்று அந்த கடிதத்தை எடுத்து வந்து அவன் முன் கோபமுடன் விரித்து வைத்தாள். உதயனுக்குப் பக்கென்று இருந்தது, கடிதத்தை உற்றுப் பார்க்க ஆங்காகங்கு சிவப்பு மையால் வட்டமிட்டிருந்தது.

நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, “இன்னைக்கு சாயந்தரம் வசந்த் பையன் வந்து செம்பருத்தி பூ படம் வரைஞ்சி தரச்சொல்லி ப்ரக்ட்டிகல் நோட் கொடுத்தான். அதுல இருந்து விழுந்திருக்கும் போல, ரொம்ப நாளா அவனுக்கு வள்ளியக்கா மகள் ரோகிணி மேல விருப்பங்க. ஆனா பாருங்க கழுதைக்கு ஒரு லெட்டர் கூட ஒழுங்கா எழுதத் தெரியலை, எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். பதினாறு வயசுலையே லவ் லெட்டரா நாளைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு” என புலம்ப உதயன் ஞே என முழித்துக் கொண்டிருந்தான்.

“ஆனால் ஒன்னு உறுதி இந்த பையன்  இன்ஜீனியரா வருவான், இருங்க தோசை எடுத்துட்டு வரேன்” எனச் சமையலறைக்குள் சென்றாள்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இடது கையால் தன் நெற்றியில் தானே அறைந்து கொண்டான். ‘ஐயோ சொதப்பிடையேடா, இதுக்கு இங்கிலீஷ்ல எழுதியிருந்த அவளால் தப்புக் கண்டுபிடிக்க முடியாம போயிருக்கும்’ என லெட்டரை ஒருமுறை பார்த்தவன், ‘கரெக்ஷன் வேற பண்ணி வைச்சிருக்கா இனி போய் இந்த லெட்டரை நான் தான் உனக்காக எழுதுனேன்னு சொல்லவும் முடியாதே! இப்படி ஒரே பால்ல அவுட்டாக்குனா நானும் என்ன தான் செய்றது’ என முகத்தில் அறைந்து புலம்பிக் கொண்டிருந்தான்.

சமையலறை வாசலிருந்து பார்த்துக்கொண்டிருந்த எழிலுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தமாகச் சிரிக்க முடியாததால் மௌனமாகக் குலுங்கி குலுங்கி சிரித்தாள். வாசிக்கும் போதே அவளுக்குப் புரிந்தது இன்ஜீனியரிங் ஸ்டுடன்ட்டானா உதயனின் கிறுக்கல் தான் இவைகள் என. எப்படியிருந்தாலும் அவளைப் பொறுத்தவரை இந்த கடிதம் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டிய பொக்கிஷம்.

என் அழகைத் தான் புகழ்ந்தான், எதற்காக? என்மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்தவா? என் மீது அவனுக்கு நேசமா? என நினைக்கையில் நெஞ்செங்கும் இதமான குளுமை பரவுவது போன்றிருந்தது.

மறுநாள் அபிராமியின் வீட்டு விருத்திற்குச் சென்றிருந்தனர். அனைவரும் உள்ளே செல்ல வழக்கம் போலே அவன் தோள்களில் தொற்றிக்கொண்ட ப்ரதிக்ஷா எதிர்பார்ப்போடு சாக்லேட் கேட்க, தன்னை விட எழில் அழகு என அவளிடம் சொன்னால் மேலும் இரு சாக்லேட் தருவதாக ரகசியமாக டீல் பேசிக்கொண்டான்.

அடுத்த பக்கம்

Advertisements