மறவாதே இன்பக்கனவே 2 (2)

சிரித்தவாறே குடித்து முடித்த உதயன் டம்ளரை அழகனிடம் கொடுத்தான். சுற்றிலும் வேடிக்கை பார்த்தவன் சாலைக்கு மறுபுறமிருக்கும் கடையை பார்த்தாவாறு, “ஏன்டா கோவிந்தமாமா இன்னுமா மெக்கானிக்செட்ட திறக்கலை?” என கேட்டான்.

“ஆமா மாப்பிள்ளை. கதிரு போனதுல இருந்து அவன் குடும்பமே மொத்தமா நொடிச்சு போச்சு, காரியம் முடிச்சு ரெண்டுநாளாச்சு இன்னும் அவங்க வீட்டுப்பக்கம் நடமாட்டமே இல்லைன்னு கடைக்கு வாரவுங்க சொல்லிக்கிடுறாங்க” என்றான் வருந்தம் நிறைந்த குரலில்.

“சரிடா நான் அப்படியே அவன் வீட்டு பக்கம் போயிட்டு சுந்தரியக்காவ பார்த்துட்டு வரேன்” என உதயன் கிளம்ப, “கொஞ்சம் நில்லுடா மாப்பிள்ளை” என்றவன், “மாஸ்டர் மூணு பார்சல் சாப்பாடு கட்டு” என குரல் கொடுத்தவாறு கடைக்குள் சென்றான்.

பார்சலோடு திரும்பி வந்தவன் உதயிடம் கொடுக்க, அதற்கான பணத்தை நீட்டினான். வாங்க மறுத்த அழகன், “ஏன் மாப்பிள்ளை ரிசர்வ் பேங்கையே உன் பாக்கெட்குள்ள வைச்சிருக்கியா என்ன? இங்க பாரு கதிரு உன்னை மாதிரியே எனக்கும் நண்பன் தான்டா. உன்விட எனக்கு தான் அதிக உரிமை இருக்கு, நீ பாட்டுக்கு மும்பை பக்கம் சப்பாத்தி சுட போயிட்ட, ஆனா அவன் கடைசி வரைக்கும் என் கூடவே இந்த ஊருலயே இருந்தவன் பார்த்துக்கோ” என மூச்சு வாங்க பேசி முடிப்பதற்குள் உதயன் சென்றிருந்தான்.

கதிர்வேல் எட்டாம் வயதில் பெற்றவர்களை இழந்துவிட, பக்கத்து ஊருளில் மணமுடித்து சென்றிருந்த குணசுந்தரி கணவர் கோவிந்தசாமியோடு தம்பியை வளர்க்கவென தன் பிறந்தகத்தில் தங்கிவிட்டார். சுந்தரிக்கு சிறுவயதிலே திருமணம் முடித்திருந்தனர் பெற்றவர்கள். எழிலரசி ஆறுமாத கைக்குழந்தையாக இருக்க, பெற்றவர்களை இழந்து சிறுவனாக இருக்கும் கதிர் அக்காவின் நிழலில் வளரத்தொடங்கினான். மனைவிக்காக அங்கு வந்த கோவிந்தசாமி அவ்வூரிலே மெக்கானிக்செட் ஒன்றை ஆரம்பித்து தொழில் தொடங்கினார்.

அன்னையின் அரவணைப்பை குணசுந்தரியும், தந்தையின் கடமையை கோவிந்தசாமியும் தந்து கதிரை மூத்தபிள்ளை போலே வளர்த்தனர். ஒரு வீடும் சிறிது நிலம் மட்டுமே கதிருக்கான உடமையாக பெற்றவர்கள் விட்டுச்சென்றிருக்க, நிலத்தை குத்தகைக்கு விட்டு கதிரின் கல்விச்செலவை கவனித்துக்கொண்டனர். படித்து முடித்தவன் வெளியில் வேலைக்குச் செல்வான் என எதிர்பார்த்திருக்க, அவனோ தன் நிலத்தை கைப்பற்றிக்கொண்டு விவசாயத்தில் இறங்கினான்.

அப்போதும் அவன் ஆசைக்கு தடை சொல்லாது அவ்வப்போது அவர்களும் கதிருக்கு உதவியாய் நிலத்தில் உழைத்தனர். ஊருக்குள் யார் உதவி என கேட்டாலும் மறுக்காமல் செய்பவன், அந்த அன்பே அவர்கள் வீட்டுப்பிள்ளை போலே அவனைரையும் நினைக்க வைத்தது. கேட்போருக்கு உதவி என்று மட்டுமில்லாது ஊர் பொதுநலனிலும் அக்கறை கொண்டு செயல்படுபவன். கதிருக்கு சிறுவயதிலிருந்தே அக்கா மகள் எழிலரசி மீது அதிக ப்ரியம். விளையாடும் வயதில் தோழனாய், கல்வி பயிலும் வயதில் வழிகாட்டியாய், பருவவயத்தில் நேசமோடும் அவளையே சுற்றி வந்தவன், இன்றும் அவள் சுவாசிக்கும் காற்றாயி அவளை சுற்றியே சுழன்றுக் கொண்டிருக்கிறான்.

சுந்தரியின் வீட்டிற்கு வந்த உதய், திண்ணையில் படுத்திருந்த கோவிந்தசாமியை எழுப்பினான். “கோவிந்தமாமா சுந்தரியக்கா எங்கே?” என்றான்.

“மேல கதிரு ரூம்ல தான் அழுதுகிட்டு கிடப்பா” என வெறுமையான குரலில் கூற, “இந்தா மாமா அக்காவுக்கு கொடுத்துட்டு நீயும் சாப்பிடு” என உணவு பார்சலை நீட்ட, அவர் மறுத்தார்.

“குடும்பத்தலைவன் நீயே இப்படி கிடந்த பொம்பளைங்க இன்னும் தான் துவண்டு போவாங்க, அக்கா பட்டினி கிடந்தா கதிரு தாங்குவானா? இப்படி பட்டினிபோடுறீரே எங்கக்காள?”

“நல்ல நாள்லையே அவ எனக்கு சாப்பாடு போட மாட்டா? இதுல நான் அவளை பட்டினி போடுறேனாம் கேட்க வந்துட்டான் கேள்வி! அதுக தான்டா ஆளுக்கொரு மூலையில் உக்காத்துக்கிட்டு, சமைக்காம விசும்பிக்கிட்டே கிடக்குதுங்க” என புலம்பினார்.

“நீ சாப்படலன்னு இப்போ யாரு அழுதா? இந்தா அக்காவை சாப்பிட வைச்சிட்டு செட்டுக்கு வா, என் பைக்குக்கு ஏதோ பிரச்சனை போல, ரொம்ப நாளா குப்பை மாதிரி போட்டு வைச்சிட்டாங்க வந்து என்னனு பாரு வா” என அழைத்தான்.

“நாளைக்கு பார்க்கலாம்” என அவர் எழ, “எழிலு எங்க? அவளுக்கும் தான் சாப்பாடு இருக்கு” என்றான்.

அடுத்த பக்கம்

Advertisements