மறவாதே இன்பக்கனவே 2

எங்கும் பசுமை தழைத்து, இன்றும் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் கொஞ்சும் பொன்வயல் கிராமத்தில் இயற்கையின் சத்தங்கள் தவிர, இரைச்சல் என்பதேயில்லை. இயற்கையை அழிக்காது காலத்தின் தேவையாய் சில அத்தியாவசிக வசதிகளை மட்டும் செய்துக் கொண்டனர் குடிமக்கள். அவ்வூரின் பாதிக்கும் மேலான நிலங்களையும், பண்ணை தொழிலையும், ஊர் நிர்வாக அதிகாரத்தையும் கொண்டவர் ரெங்கநாதன்.

வாழ்வே வெறுமையாகிய உணர்வில் பட்டாலை ஊஞ்சலில் படுத்தவாறு உத்திரத்தை வெறித்துக்கொண்டிருந்தான் உதயன். இன்னும் கதிரின் நினைவுகளே அவன் நெஞ்சில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. கையில் உணவு தட்டோடு அவன் அருகே வந்தார் பரமேஸ்வரி.

“உதய், பெரியம்மா உனக்கு பிடிச்ச ஐயிரமீன் குழப்பு வச்சி கொண்டு வந்திருக்கேன். சூடா ரெண்டு வாய் சாப்பிடு கண்ணு” என்றார் கொஞ்சலாக. எழுந்து அமர்ந்தவன் சோர்ந்த குரலில், “எனக்கு வேண்டாம் பெரியம்மா” என மறுத்தான்.

“நேத்து இராத்திரி வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒரு வாய் கூட சாப்பிடலை, உடம்பு என்னத்துக்காகுறது? உங்கம்மா இருந்திருந்தா இப்படி விடுவாளா?” என்ற அதட்டலோடு அவன் அருகே அமர்ந்தவர் சாதத்தை பிசைந்து உருண்டை உருட்டிக்கொண்டு ஊட்ட வர, கையில் வாங்கிக்கொண்டான்.

“உங்கப்பா இறந்த போது கூட உன்னை இப்படி பார்க்கலை கண்ணு, அந்த புள்ளைய கடவுள் கூப்பிட்டுகிட்டான் அது விதி, இதுல நாம செய்றதுக்கு என்ன இருக்கு? கலங்கக்கூடாது கண்ணு” என ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

அதேநேரம் முழுக்கை சட்டையை மடித்துவிட்டவாறு தனது அறையிலிருந்து வெளியே வந்த சிவச்சந்திரன் இருவரையும் பார்த்தான். அவர்கள் அருகே வந்தவன் தூணில் சாய்ந்தவாறு, “என்னமா விருந்து நடக்குது போல, அட மீன் குழம்பா அதான் வாசனை இழுத்துட்டு வந்திருச்சு. சரி வா, வந்து எனக்கு சோத்தப்போடு” என்றான்.

“ராக்காயிக்கிட்ட சொல்லு போடுவா” என்றவர் உதயனுக்கு உருண்டை பிடித்துக்கொடுப்பதிலே கவனமாக இருந்தார்.

“பாருடா, பெத்தபிள்ளைய விட வந்த விருந்தாளி தான் உனக்கு உசத்தியா போயிட்டானோ?” என்றவன் முறைப்புடன் உதயை பார்த்தான். பரமேஸ்வரிக்கு சினம் வர, “யாராலே விருந்தாளினு சொல்லுற? முட்டாப் பைய மவனே இப்படி தரக்கேட்டத்தனமா பேசாதடா” என்றார் அதட்டலாக.

“ஏன் இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி பொங்குற? என்னைவிட உனக்கு அவன் மேல தான் பாசம் பொங்குது?” என்றான் கடுகடுப்புடன்.

“இங்க பாரு, ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பு வைக்கிற ஆளில்லை நான். எனக்கும் சரி, இந்த வீட்டுலையும் சரி நீ எப்படியோ அதே மாதிரி தான் அவனும் புரிஞ்சதா? காரணமில்லாம கத்தாத, உங்க அப்பா காதுக்கு கேட்டுட போகுது” என கட்டிப்புடன் உரைத்தார்.

அதற்கும் உதயை முறைதத்தவன், “அது எப்படி நானும் அவனும் சமமாக முடியும்? எங்கையோ போய் வேலை பார்த்து கைநீட்டி சம்பளம் வாங்குறான் அவன், அதை இத்தனை வருஷத்துல ஒருநாளும் இந்த வீட்டுக்குக் கொடுத்ததில்லை, நினைச்ச நேரம் விருந்தாளியா வாறான், போறான். நான் இந்த வீட்டுக்காக வயலையும், தோப்புலையும் மாடா உழைக்கிறேன். ஆனால் என் உழைப்புல பரம்பரை செத்துனு அவனுக்கும் பங்கு இதென்ன நியாயம்? அவன் நிலத்தையும் சேர்த்து நான் பார்க்கணுமாம், ஆனால் நானும் அவனும் சமமாம். இதென்ன கணக்குனு எனக்கு புரியலை, கொஞ்சம் தெளிவா தான் சொல்லேம்மா” என உதயை பார்த்தவாறு குத்தலாகக் கேட்டான்.

உதயன் வேகமாக எழுத்து சென்றுவிட, பரமேஸ்வரி பேசயியலாது வாய்யடைத்த நிலையில் மகனை முறைத்தார். உதயன் எழுந்து செல்வதைப் பார்த்து நிம்மதியாய் சிரித்துக்கொண்டான் சிவச்சந்திரன். இதுவே வேறு நாளாக இருந்திருந்தால் உதயன் இத்தனை அமைதியாய் செல்பவனில்லை!

வீட்டிற்குள் இருக்க பிடிக்காமல் ஊருக்குள் சென்றான் உதயன். ஊரின் மையத்தில் அரசமரம், அதற்கு அருகில் இருக்கும் சிறு டீக்கடையில் சென்று அமர்ந்தான். “டேய் மாப்பிள்ளை, வாடா” என்றவாறு கையில் டீகப்போடு வந்தான் உரிமையாளன் அழகன். எழாம்வகுப்பு வரை ஒன்றாக படித்தவன் தான் படிப்பில் ஈடுபாடில்லாமல் போக, தந்தையோடு சொந்தவயலில் இறங்கினான். பின் சற்றே வளர்ந்ததும் டீக்கடையொன்றை சொந்த முயற்சியில் ஆரம்பித்தவன் மெல்ல அதை உணவகமாக மாற்றிக்கொண்டான்.

“வேண்டாம் அழகா” என மறுக்க, “அட குடிடா, காசெல்லாம் கேட்க மாட்டேன் நீயா உன் எ.டி.எம் கார்ட் கொடுத்துட்டு போவியாம் என்ன?” என்றான்.

அதில் சிரித்துக்கொண்ட, உதய் அவன் முதுகில் அடிக்க சற்றே தடுமாறியவாறு, “பார்த்துடா சூடானடீ மூச்சில கொட்டிடப்போறேன். அப்பறம் ஊருல ஒருபையன் உன் வெத்துபோன மூஞ்சிக்கு பொண்ணு தர மாட்டான்” என்றவாறு அவன் கைகளில் கப்பை திணித்தான்.

வாங்கிக்கொண்டு உறுஞ்சியவாறு, “வீட்டுல மருமகமக்கா, தங்கச்சியெல்லாம் நல்லாயிருக்குறாங்களா?” என்றான்.

“அதுகளுக்கு என்ன ஒன்னொன்னும் குட்டிப்பிசாசாட்டம் என் தலையில ஏறியாடுதுக. அது மட்டுமா நல்லா ஏத்திவிடுறதுக்குனே திண்ணைய காத்துக்கிட்டு கிடக்கா எங்க ஆத்தா”

“ஏன்டா பிள்ளைகளையும் அத்தையும் இப்படி சொல்லுற?”

“அதெல்லாம் குடுபம்பஷ்தன் கஷ்டம், நீ அனுபவிக்கும் போது உனக்கும் புரியும் மாப்பிள்ளை. போன வராம் தையக்காரி வாண்டியில போகும் போது இராத்திரிக்கு புரட்டா பார்சல் கேட்டா, நானும் வீட்டுக்கு போகும் போது கொண்டு போனேன், எங்க தெரு முக்குலையே எதுக்கால வந்தவ வாங்கிட்டு போயிட்டா. உனக்கு தான் தெரியுமே எங்காத்தாளுக்கு சாந்திரமானா சரியா கண்ணு தெரியாதுன்னு, திண்ணையிலே உக்காத்திருந்தவ அதை பார்த்துட்டு ரத்தனத்துக்கிட்ட உன் புருஷன் தையக்காரி கையப்பிடிச்சு கொஞ்சிக்கிட்டு இருக்கானு பத்தவச்சிட்டா. அவ்வளவு தான்டா எம்பொண்டாட்டி பத்திரகாளி அவதாரமெடுத்து அடிபின்னி எடுத்துட்டா”

கண்களில் நீர் கட்டும் அளவிற்கு சிரித்த உதயன், “அப்பறம் என்னடாச்சு?” என்க, “அப்பறம் எம்பொண்டாட்டி அடிக்கிற பார்த்து விளையாட்டுன்னு நினைச்சு எம்புள்ளைகளும் தலைமுடிய பிடிச்சிழுக்க, முதுகுல ஏறி குதிக்கனு உடம்பா புண்ணாக்கிட்டு தான் விட்டதுக” என்றான் பெருமூச்சுடன்.

அடுத்த பக்கம்

 

Advertisements