மறவாதே இன்பக்கனவே 19 (3)

உதயன் எழுந்து செல்ல, சில நிமிடங்களில் கோவிந்தசாமியும் வந்துவிட, அனைவருமாக இரவு உணவினை உண்டனர். பின் இருவரும் வீட்டிற்குக் கிளம்பி வர, எழில் எதுவும் அவனிடம் பேசவில்லை.

வீட்டிற்குள் வந்தவள் பூஜையறைக்குள் சென்று பிரசாதத்தை வைத்துவிட்டு படுக்கையைச் சரிப்படுத்தி ஒருபுறம் அமைதியாகப் படுத்துவிட்டாள். வந்ததிலிருந்து பேசவேண்டுமென அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் உடைமாற்றி விட்டு படுத்தான்.

“எழில்..எழில் உறங்கிட்டியா?” என்க, அவளிடம் சத்தங்களே இல்லை. மெல்ல அருகில் நெருங்கிப் படுத்தான், அப்போதும் அவளிடம் அசைவுகளே இல்லாமல் இருக்க மேலும் நெருங்கினான்.

எழில் உறங்கவேயில்லை, கோபத்திலிருந்தவள் தன் முதுகின் பின் அவன் மூச்சுக்காற்றை உணர்ந்து சட்டெனத் திரும்பிப் படுத்தாள். அதிர்ந்த உதய் ஒருநொடி பதறி சற்று விலகிப்படுக்க, முறைப்புடன், “என்ன..?” என்றாள்.

“இல்லை உங்கிட்ட ஒன்னு கேட்கணும்” என அவன் மென்குரலில் கேட்க, பார்வை மாற, புரியாத பார்வையோடு மீண்டும் என்னவென்றாள்.

“அபிராமியக்கா கால் பண்ணாங்க, நம்மளை விருந்துக்கு கூப்பிட்டாங்க” என்க, “என்னைக்கு போகணும்..?” என்றாள்.

“சண்டே, அன்னைக்குத் தான் மாமாவும் பாப்பாவும் வீட்டில் இருப்பாங்க” என்க, சரியென்பது தலையாட்டியவள் சில நொடி அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

தன்னை ரசிக்கிறாளோ என தோன்றவும், அவள் பார்வை உதயனுக்கு புது வெட்கத்தைத் தந்தது, முகம் மலர்ந்தவன் மெல்லிய சிரிப்போடு ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்றான்.

“என்னை விட உங்க குட்டியம்மா தான் அழகாயிருக்காளா?” மெல்லிய சிணுங்கல் குரலில் கேட்க, உதயன் வாய்விட்டுச் சிரித்தான். என்ன தான் சிரித்த போதும் உள்ளுக்குள் ‘இவ்வளவு நேரம் அவ என்னை சைட் அடிக்கவேயில்லையா?’ என ஏக்கமாக நினைத்தான்.

பிறைநெற்றியும், தன் பதிலுக்கான எதிர்பார்ப்போடு பார்க்கும் கருவிழியும், குட்டி முக்கோண மூக்கும், மொழுமொழுக்கன்னமும், சிவந்த வடிவான தேனுரும் சிறு இதழும் என நொடி நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அதுவரை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அதை ருசிக்கும் ஆசையும் தோன்றியது.

அவனையும் அறியாது பெருமூச்சோடு, “பேரழகு..!” என்க, அவள் இதழிலிருந்த மோனாலிசா புன்னகை மேலும் விரிந்தது.

“இதை நாளானைக்கு ப்ரிதிக்ஷாகிட்டையும் சொல்லணும்” மாறா சிரிப்புடன் கட்டளையிட்டவள் விழிகளை மூடினாள்.

உதயனுக்கு மூச்சு முட்டுவது போன்றிருந்தது. அவளருகில் படுக்கவே முடியவில்லை எழுந்து அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். ‘அழுக்கு மூஞ்சியா, மூக்கொழுகியா சின்ன வயசுல இருந்து கதிரோட இவளை பார்த்திருக்கேனே, வினோத் கல்யாணத்துல கூட அவ்வளவு அலங்காரத்தோட நின்றாலே அப்போ எல்லாம் இந்த அழகு என் கண்ணுக்குத் தெரியலையே! ஒருவேளை இப்போ ஓவர் மேக்கப்போ?’ என நினைத்தவாறு  நடந்தவன் கண்ணாடி முன் பார்க்க, ஒரு கண்மை டப்பா, பவுடர் டப்பா, ஸ்ட்கர் பொட்டு அவ்வளவு தான் இருந்தது.

‘மேக்கப்பும் இல்லை, அப்படின்னா என்னாச்சு எனக்கு? இந்த அழகு ரசிச்சிக்கிட்டு இருந்த என்னை ஏன் தடுமாற வைக்குது? அழகு தானா? இல்லை அழகைத் தான்டி அவகிட்ட வேற எதுவும் ஈர்ப்பா? ஆனால் அவ என்னை இப்படி பார்க்கலையே? ஒருவேளை பார்க்கிற மாதிரி இல்லையோ நான்? ச்சே! அது இல்லை, அன்னைக்குத் தான் சொன்னாலே அவளால கதிரை மறக்க முடியலைன்னு, சோ இனி அவளை தொந்தரவு செய்யக்கூடாது. இவளை தனிக்குடித்தனம் கூட்டிட்டு வந்ததே தப்பாப் போச்சு, கடைசியில நான் தான் தவிக்க வேண்டியதா இருக்கு’ எனக் குழம்பியவன் இறுதியில் ஒரு முடிவு கிடைக்கவும் உறங்கினான்.

காலையில் வெகுநேரமாகிய பின்னும் உதயன் எழாமல் இருக்க, தொட்டு உலுக்கி எழுப்பினாள் எழில். அந்த அதிர்வில் உதய் விழிக்க, “ஏங்க இங்க வந்து எப்போ படுத்தீங்க?” என்றாள்.  அப்போதே ஹாலில் படுத்திருப்பதை கவனித்தவன், “உள்ள காத்து பத்தலை, நைட்டே வந்து படுத்துட்டேன்” என்று அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்து விலகிச் சென்றான்.

பல்துலக்கியபடி வெளிமுற்றத்தில் நடந்து கொண்டிருந்தவனுக்கு திடீரென அந்த இடமே வெறிச்சோடித் தெரிய, “எழில்..!” என உரக்க அழைத்தான்.

சமையலறையில் இருந்தவள் பதறி வர, “இங்க ஒரு டாட்டா ஏசி வண்டி நின்னுக்கிட்டு இருந்திச்சே யார் எடுத்தா? பார்த்தியா?” என்றான். அப்போதே அவளும் அதை கவனித்தாள். அவர்கள் வந்த நாட்களிலிருந்து அங்கு தான் நின்று கொண்டிருந்தது, பழுதாகி பயன்பாட்டிற்கு அற்றதோ என எண்ணினர்.

அவள் மறுப்பாய் தலையசைக்க, “சரி விடு, வேற யாரு எடுக்கப்போறா பெரியப்பா தான் எடுத்திருப்பாரா இருக்கும்” என்றவன் அவள் முகம் பாராது விலகிச் சென்றான்.

அன்றைய நாள் முழுவதும் அவளைத் தவிர்க்க, நேற்றிருந்த உற்சாகம் இன்றில்லாமல் அவன் வேலைகள் தேங்கின. வெட்டிய விறகுகளை ஏற்றியிருக்க நேற்றோடு தோப்பு வேலைகள் முடிந்திருந்தது.  வாட்டாச்சியாளர் அலுவலகம் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய புகார் மனுவை கொடுத்திவிட்டு மாலை அழகனின் கடையில் வந்தமர்ந்தான்.

“இங்க பாருங்கண்ணே அதிசயத்தை! புதுமாப்பிள்ளை இங்க வந்து உக்கார்ந்திருக்காரு” என அழகனை அழைத்தான் கரிச்சட்டி.

“பக்கத்து அரிசிக்கடையில இரண்டு டீ கேட்டாங்க, கொண்டு போய் கொடு போ” என விரட்டியபடி அருகே வந்தான் அழகன்.

உதயனின் தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் இருபுறமும் திருப்பிப் பார்த்தபடி, “என்னடா மாப்பிள்ளை, ஒருவாரம் கழிச்சி இங்க வந்து உக்கார்ந்திருக்க?” என்றான்.

“ச்சு..,வீட்டுலையே நாலு சுவத்தை பார்த்துகிட்டே எவ்வளவு நேரம் தான் இருக்கிறது?” எனச் சலித்துக்கொண்டான் உதயன்.

“சுவத்தைப் பார்க்க முடியலைனா எழிலைப் பாரு” என்க, “நான் மட்டும் பார்த்து..? அவ என்ன திரும்பிக் கூடப் பார்க்க மாட்டிக்கா, பார்த்தாலும் சேர், டேபுள்ன்னு பொருளைப் பார்க்கிற மாதிரி தான் பார்குறா!” என பதின்வயது பையன் போலே குறைப்பட்டான்.

அழகனோ பொங்கிய சிரிப்பை அடக்க முடியாது குலுங்கி குலுங்கி சிரிக்க, “எதுக்குடா சிரிக்கிற?” என்றான் முறைத்தபடி.

அடுத்த பக்கம்

Advertisements