மறவாதே இன்பக்கனவே 19 (2)

அதிர்ந்த உதய் பற்களைக் கடித்தான். “செய்யுறதையும் செஞ்சிட்டு போட்டோவை எடுக்க வந்தேன்னு பொய் வேற..?” எனக் கேட்டவாறு அவள் கன்னத்தை மீண்டும் கிள்ள வந்தான். அதற்குள் சுதாரித்தவள் அவன் தோளில் குத்தி தள்ளிவிட்டாள். அது வரை வலது கைய மெத்தையில் ஊன்றி தலை தாங்கி அவள் புறமாகத் திரும்பிப் படுத்திருந்தவன் அவள் தள்ளியதும் நிலை தடுமாறி அவள் மேலே விழுந்தான்.

எழிலுக்கு இதயத்துடிப்பே ஒருநொடி நின்றுவிட்டது கண்களை இறுக்கி மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து நிறுத்திக்கொண்டாள். உதயனின் இதயம் வழக்கத்திற்கு மாறாகத் துடிக்க, அதிவேகமாக மூச்சுவிட்டான். கழுத்தில் அவன் முகம் புதைந்திருக்க, கல்யாண மஞ்சளின் வாசமும், கூந்தலிருந்த மல்லிகையின் வாசமும் அவனை மொத்தமாக மயங்கியது. தெளியாத மயக்கத்தில் தன்னை தொலைக்க விரும்பினான்.

அவள் முகம் பார்த்து பார்வையைத் திருப்ப, எழிலுக்கு முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்த்திருந்தது, அன்று அவனறையில் இருந்த போதும் இவ்வாறு தானே இருந்தாள் என்ற நினைவோடு துடைத்துவிட கைகளை உயர்த்தினான். அப்போதே அவள் மூச்சை பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன் சட்டென்று விலகிக்கொண்டான்.

எழில் உச்சத்தலை வரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மறுபுறம் திரும்பி விட்டாள். உதயனும் சங்கடத்தோடு தவிப்பாய் உணர்ந்தான். அவள் தள்ளிவிட்டதால் விழுந்தான் எனினும் தன்னைப் பற்றி என்ன நினைப்பாளோ எனத் தவித்தான்.

மறுநாள் காலையில் காஃபி கொடுக்கையில் எழில் வலது கை பெருவிரலிலிருந்த மச்சம் உதயனின் கண்ணில் பட்டது. வருடிப் பார்க்கும் ஆசை வந்த போதும் அமைதியாக கிளாஸை மட்டும் வாங்கிக்கொண்டான்.

அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் எழில் தலைக்குக் குளித்து ஈரத்தலையில் டவலை சுற்றியிருக்க, காதோரம் வெளிப்பட்ட முடியிலிருந்து நீர்த் துளிகளில் சொட்டி முதுகிலும் கழுத்திலும் முத்து முத்தாய் படிந்திருக்க, பார்ப்பதற்கு கவிதையாய் இருந்தது. முதல் முறையாக எழில் என்ன உணவு பரிமாறினாள் என்பதைக் கவனிக்காது அவளைக் கவனித்து உண்டு எழுந்து வந்திருந்தான் உதய்.

வேலையாட்கள் வந்துவிட எழுந்து தோப்பிற்குள் சென்றவன் வேலையின் போதும் இரண்டு மூன்று முறை தண்ணீர் அருந்துகிறேன் என வீட்டிற்கு வந்துவிட்டான். என்றுமில்லாத திருநாளாய் எழிலரசி அவன் கண்ணிற்கு அழகாய் தோன்ற, அதை விட அந்த அழகை ரசிக்கும் எண்ணம் தோன்றியது எதனால் என்றே தெரியவில்லை.

மாலை வேலை முடியவும் குளித்து வந்தவன் ஹாலில் அமர்ந்து விட்டான். எழில் பூஜையறை, வீடு சுத்தம் செய்கிறேன் என அங்குமிங்கும் நடமாட, உதயனின் பார்வை அவளை தொடர்ந்தது. தூக்கிச்சொருகிய புடவையில் வடிவழகாய் அங்குமிங்கும் நடமாடுகையில், வேலைகளுக்கு இடையில் நெற்றி வியர்வையைப் புறங்கையால் துடைக்கையில், லேசாகப் புடவை நழுவிய இடுப்பு மடிப்பு கண்ணில் படுகையில் எல்லாம் ஒவ்வொன்றையும் கவிதையாய் வடிக்கத் தோன்றியது, என்ன செய்ய அவனுக்குத் தான் கவிதை எழுதத் தெரியாதே!

பொதுவாக மாலைநேரம் அழகனின் கடைப்பக்கம், ஊருக்குள் சென்றுவிடுபவன் அன்று நிதானமாக அமர்ந்திருப்பதைக் கவனித்தவள் தன் வேலைகளை முடித்துவிட்டு அருகே வந்தாள்.

“ஏங்க என்ன செய்யறீங்க?” எனக் கேட்க, ‘ஒருவேளை நான் பார்த்ததை கண்டுகொண்டாளோ!’ என அதிர்ந்தவன் முழித்தான்.

அவன் பார்வையில் குழம்பியவள், “என்ன செய்றீங்கன்னு தானே கேட்டேன்? அதுக்கு எதுக்கு இந்த திருட்டு முழி?” என்றாள் அதட்டலாக.

தன் கையிலிருந்த பேப்பரை தூக்கிக்காட்டியவன், “பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்கிறேன்” என்றான்.

“அப்போ வெட்டியா தானே இருங்கீங்க! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் ரெடியாகி வந்துடுறேன். கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என அதிகாரமாய் அவள் உரைக்கச் சிறு சிரிப்போடு தலையாட்டினான் உதய்.

அறை வாசல் வரை சென்றிருந்தவளை, “எழில் ஒரு நிமிஷம் நில்லு” என நிறுத்த, திரும்பிப் பார்த்தாள்.

தன் சட்டையைக் குனிந்து பார்த்துக்கொண்டவன், “நீலக்கலர் புடவை கட்டிக்கிட்டு வா” என்க, கேட்டவள் சிறு சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

இருவரும் ஒன்றாக முருகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, சுந்தரியின் வீட்டிற்குச் சென்றனர். புதுமண ஜோடிகள் என்பதால் ஊருக்குள் அனைவரின் கண்ணும் அவர்கள் மேல் தான் இருக்கும். பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் அவர்களாகவே பேச்சுக்கொடுத்து ஆசிர்வதிப்பார்கள்.

பார்த்து இரு தினங்கள் தான் இருக்கும் என்னவோ வருடங்கள் ஆனது போல் சுந்தரியும், எழிலரசியும் நலம் விசாரித்துக்கொண்டு ஊர்க் கதைகள் பேசியபடி சமையலறைக்குள் சென்று விட்டனர். கோவிந்தசாமியும் வீட்டில் இல்லாது போக, திண்ணையில் அமர்ந்துவிட்டான் உதயன்.

எதிர்வீட்டிலிருந்து வந்த விமலா அவனிடம் பேச்சுக்கொடுத்தபடி உயர்கல்வி உதவித்தொகை பெறுவது குறித்து ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தாள். இரவு சமையல் முடித்து சாப்பிட அழைக்க வந்த எழில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“ஏங்கச் சாப்பிட வாங்க?” என அவன் முகம் பார்த்து அழைக்க, அவனுக்கு அவள் பார்வை முறைப்பாகத் தெரிந்தது.

அடுத்த பக்கம்

Advertisements