மறவாதே இன்பக்கனவே 19

முதலில் வீட்டைச் சுத்தப்படுத்திவிட்டு ஒரு நன்னாளில் எழிலின் பெற்றோர், அழகனின் குடும்பம், கரிச்சட்டி, மணியை மட்டும் அழைத்துப் பால்காய்ச்சி விட்டு பண்ணை வீட்டிற்கு மாறினர். ஒருபெரிய தானிய களஞ்சிய அறை, ஒற்றை படுக்கையறை, ஒரு சமையலறை, நடுவில் சிறு கூடம் என்றிருந்த வீடு இருவருக்கும் போதுமானதாக இருந்தது. தனிக்குடித்தனம் செல்கிறார்கள் என்றதும் சுந்தரி மகளுக்குச் செய்வதாகச் சொல்லி வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் புதிதாக வாங்கி வைத்தார்.

மாலையிலே அனைவரும் கிளம்பியிருக்க, அன்று முழுவதும் வேலையிருந்ததால் சற்று அசதியிலிருந்த எழில் இரவு உணவிற்குத் தோசை மட்டும் ஊற்றி விட்டு அவனை உண்ண அழைத்தாள். அமைதியாக எழில் பரிமாறியதைத் தட்டை பார்த்து உண்டு முடித்து விட்டுச்  சென்று விட்டான்.

திருமணமாகி இந்த பதிமூன்று நாட்களில் விரல்விட்டு எண்ணிவிடும் வகையில் நாளொன்றிற்கு இரண்டு மூன்று வார்த்தைகள் தான் எழிலிடம் பேசியிருப்பான். அதுமட்டுமின்றி வேலை செய்வோர்களைக் கவனிக்க வேண்டிய வேலைப்பளுவும் இருந்தது. இன்னும் அவளிடம் பேசுவதற்கு அவன் தயங்கியிருக்க இருவருக்குள்ளும் சகஜமான பேச்சு வார்த்தைகள் வரவில்லை. அவன் பேசினால் பதிலளிப்பாள் தான், அவள் தவிர்க்கவில்லை ஆனால் அவன் தயங்கினான்.

தோப்பில் பட்ட மரங்களை எல்லாம் ஆள்விட்டு வெட்டிக் கொண்டிருந்தான். விறகுகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு தோப்பில் உரமிட்டுப் பதப்படுத்திவிட்டு, புதிய மரக்கன்றுகளுக்கு ஆடர் கொடுக்க வேண்டும். வேலையாட்கள் வேலை செய்கையில் வேடிக்கை மட்டும் பார்க்காது அவனும் இறங்கி வேலை செய்யத் தொடங்கினான். உடல் உழைப்பு அவனுக்குப் பழக்கமில்லாதது தற்போது அதையும் பழகினான்.

எழிலிக்கும் வீட்டுவேலைகள் போக அங்கு வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு சிறிது நேரம் பாடம் சொல்லிக்கொடுக்க நேரம் சரியாக இருந்தது.

இரவு அவன் உணவுண்டு விட்டுச் சென்றபின் தானும் உண்டு அனைத்தையும் ஒதுங்கு வைத்துவிட்டு எழில் பால் கிளாஸ்ஸோடு அறைக்குள் வர, மடிக்கணினியோடு கட்டிலில் அமர்ந்திருந்தான் உதய். இன்று அவனுக்கும் சரியான வேலை தானே? அசதியிலிருக்க இன்னும் படுக்காமல் என்ன செய்கிறான்? என்ற எண்ணத்தில் அருகில் வந்தவள் கிளாஸை நீட்ட, “டேபிள்ல வைச்சிடு எழில் எடுத்துகிடுறேன்” என்றவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மேசையில் வைக்கையில் அவன் எதையோ டைப் செய்வதைக் கவனித்தவள் சற்று உற்றுப் பார்த்தாள். ஊருக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய மனுவை டைப் செய்துகொண்டிருக்க, கவனித்தவள், “நீங்க இன்னும் இந்த புகாரைக் கொடுக்கலையா?” என்றாள்.

அவன் அதைச் சற்றும் கவனிக்காது போக, உதட்டைச் சுளித்தவள் மறுபுறம் சென்று படுத்துவிட்டாள். தன் வேலைகளை முடித்து மடிக்கணினியை அணைத்து வைத்துவிட்டு பாலை அருந்தினான். பின் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் அவளைப் பார்த்தவனுக்கு அப்போதே அவள் கேட்டது நினைவில் வந்தது.

சட்டென கையூன்றி தலை நிமிர்த்தியவன் வேகமுடன் அவளையும் தன் பக்கம் திரும்பி, “என்ன கேட்ட?” என்றான்.

“இன்னும் அந்த புகாரை கொடுக்கலையான்னு கேட்டேன்?” என்க, “ஆமா அது எப்படி உனக்குத் தெரியும்?” என விசாரித்தான்.

முகத்தைச் சுருக்கி ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்தாள். தானே உளறியதை நினைக்கையில் நெற்றியில் அறைந்து கொள்ளாலாம் போல் இருந்தது.

“எனக்குத் தூக்கம் வருது” என அவன் கேள்வியைத் தவிர்த்துவிட்டு திரும்ப, மீண்டும் வேகமுடன் அவளை தன்புறம் திருப்பியவன், “உண்மைய சொல்லுடி களவானி, நீ தான் ஏதோ செய்திருக்க?” என்றான் கன்னத்தைக் கிள்ளியபடி!

அழுத்திக் கிள்ளியதில் கன்னம் வலிக்க, உதய்யின் கைகளைத் தட்டிவிட்டவள் முகத்தைச் சுருக்கினாள். அந்த மஞ்சள் விடிவிளக்கின் மெல்லிய ஒளியில் சிவந்த கன்னம் வண்ணக்கோலமாய் மின்ன தான் விசாரணையை ஒரு நொடி மறந்து போனான்.

“அது கதிர் மாமா ஆக்கிரமிப்பு பத்தின டீட்டைல்ஸ் மட்டும் தான் கலெக்ட் பண்ணி வைச்சிருந்தாங்க, நான் தான் அது எல்லாத்தையும் புகாரா ரெடி பண்ணி உங்க பார்வையில படுறமாதிரி உங்க ரூம்ல வைச்சேன்” என மெல்லிய சிணுங்கள் குரலில் அவன் முகம் பார்த்து உரைத்தாள்.

“அதுக்கு தான் கிளீன் பண்ணுறேன்னு என் ரூம்குள்ள வந்திருக்க?” என அதட்டலாகக் கேட்க, சிரிப்போடு சமாளித்தவள், “கதிர் மாமா தேர்தல்ல நிக்கிறதா முடிவு மட்டும் தான் செஞ்சிருந்தாரு யார்க்கிட்டையும் சொல்லலை, நான் தான் வேட்புமனு எல்லாம் உங்க பார்வையில படுறமாதிரி வைச்சேன், அதை நீங்க நிரப்பி கொடுத்திட்டீங்களான்னு செக் பண்ண தான் இரண்டாவது தடவை நீங்க இல்லாத போது வந்தேன். மற்றபடி உங்க ரூம்ல எதுவும் திருட வரலை” என்றாள்.

உண்மையை உளறி மாட்டிக்கொண்டோமே என எழிலுக்கு இதயம் பயத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கோபம் கொள்வானோ, திட்டுவானோ எனப் பயந்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements