மறவாதே இன்பக்கனவே 18 (2)

அவள் முறைப்போடு சென்று படுத்துவிட, உதயனுக்கு பெரும் கூவலோடு குத்துப்பாட்டிற்கு ஆடவேண்டும் போன்றிருந்தது. அந்தளவிற்குச் சந்தோஷத்தில் மனம் நிறைந்திருந்தான். காலையிலிருந்தே உற்சாகமாக இருந்தவனுக்கு தற்போது இந்த நாள் மேலும் இனிமையானது போன்றிருந்தது. அந்த சந்தோஷத்தில் வெகுநேரம் உறக்கம் வராமல் புரண்டவன் நேற்றைய நாளின் உறக்கமின்மையும் இன்றைய அசதியும் அழுத்தியதில் உறங்கிவிட்டான்.

காலையில் வெகு தாமதமாக எழுந்து வந்தான். அவன் அறையிலிருந்து வெளியே வரும் போதே குளித்து முடித்து, அளவான அலங்காரத்துடன் பளிச்சென்று கழுத்தில் மஞ்சள் கயிறும் நெற்றியில் செந்நிற குங்குமமும் மின்ன வந்து காஃபி கொடுத்தாள் எழில்.

“காளியம்மன் கோவில்ல இன்னைக்கு பொங்கல் வைத்து சாமி கூம்பிடணுமாம் அம்மா சொன்னாங்க, சீக்கிரம் தயாராகி வாங்க” என்றாள் சிரித்த முகமாக.

எழிலா தன்னிடம் சிரித்துப் பேசுகிறாள்! தான் காண்பதும் கனவு தானா? என அதிர்ந்து நிற்க, “மாப்பிள்ளை மசமசன்னு நிற்காமல் சீக்கிரம் கிளம்புடா” என்றார் கோவிந்தசாமி.

காஃபியை பருகியவாறு மேலே தன்னறைக்குச் செல்ல, “என்னண்ணே புதுமாப்பிள்ளைக்கு இப்போ தான் விடிச்சிருக்கா?” என்றபடி வினோத் வர, உடன் அழகனும் வந்தான்.

உதயனும் முகம் மலர, இதழ் விரியச் சிரிக்க, “பாருடா, என் மாப்பிள்ளைக்கு வெட்கத்தை!” என அழகன் கேலி செய்ய, அவன் முதுகில் தட்டினான்.

“இந்தாங்கண்ணே மொய் நோட்டு, வரவு செலவு கணக்கை முடிச்சு மொய்ப் பணத்தை உங்க அக்கௌன்ட்ல போட்டுட்டேன்” என நோட்டை நீட்டினான் வினோத்.

வாங்கிப்பார்த்த உதயனுக்குத் தலை சுற்றுவது போன்றிருந்தது. “என்னங்கடா இது, தப்பா பேங்க்ல ப்ரின்ட் பண்ணிட்டாங்களா? லட்சத்துல வருது?” என்றான் வியப்புடன்.

“அடேய் சரி தான்டா, இதெல்லாம் உனக்கெங்க தெரியப்போகுது? உங்க அப்பா அங்காளி பங்காளி, பழக்கம் வைச்சவன், தொழிலாளி, சொந்தக்காரன், உள்ளூர், வெளியூருன்னு இத்தனை வருஷமா செஞ்சி வைச்ச மொய் தான் மொத்தமா உனக்கு இப்போ திருப்பி வந்திருக்கு. அடேய் மொய் பணங்குறது விசேஷம் வைக்கிறவன் கடனாளியாகிடக் கூடாதுன்னு பெரியவுங்க வைச்ச வழக்கம்டா. சுருக்கமா சொல்லும்னா வட்டியில்லாத கடன்! மவனே இவங்க எல்லார் வீட்டுலையும் விசேஷம் வரும் போது நீ போய் திருப்பிச் செய்யணும், அப்போ தான் உறவு விடாம தொடரும்” என்றான் அழகன்.

உதயன் தலையாட்ட இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர். தனது உடைகளை எடுத்துக்கொண்டு கீழே சென்றவன் கிளம்பி வர, எழில் காலை உணவு பரிமாறினாள்.

ஒருவழியாக அனைவரும் கிளம்பி காளியம்மன் கோவிலுக்குச் சென்றனர். அங்கே அழகனின் குடும்பமும், வினோத், துளசியும் வந்திருந்தனர். உச்சிவேளை பூஜைக்குள் பொங்கல் வைத்து விட வேண்டும் அதுவும் புதுமணத் தம்பதிகள் இருவரும் தான் செய்ய வேண்டும் என மற்றவர்கள் கோவில் மரத்தடியில் சென்று அமர்ந்து விட்டனர்.

உதயன் விறகுச்சுள்ளிகளை ஒடித்து, தண்ணீர் எடுத்துக்கொடுக்க, எழில் புதுப்பானையில் மஞ்சள் நூலோடு வெற்றிலையைச் சுற்றி, சந்தானம் குங்குமம் பூசி அடுப்பில் வைத்து, தேங்காய் உடைத்து, சூடமேற்றி வேண்டிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தாள். பால் பொங்குவதற்குள் உதயன் பச்சரியை அளந்து கொடுத்து, வெல்லத்தை தட்டிக்கொடுத்தான். உண்மையில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை ஒவ்வொன்றையும் எழிலிடம் கேட்டு தடுமாற்றத்தோடு அவள் முறைப்பையும் வாங்கிக்கொண்டு தான் செய்தான்.

அடுப்புப் புகையில் எழில் கண்ணைக் கசக்கும் போதெல்லாம் அவனாக உதவுதாக முன் வைத்து மேலும் புகையை அதிகப்படுத்தி அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். ஒரு வழியாக இருவரும் உச்சிவேளைக்குள் பொங்கல் வைத்து இறக்கி வர, பெரியவர்கள் படையல் தயார் செய்து விட்டிருக்க, மீண்டும் எழில் அமர்ந்து அவள் கைகளால் எலுமிச்சை மாலையும் கட்டி முடித்தாள்.

அம்மனுக்கு மாலை சாற்றி, படையலிட்டு அனைவருமாக வணங்கி, பின் பிரசாதம் உண்டு வீடு வந்தனர். உதயனுக்குக் கடவுளே வந்து ஆசி வழங்கி விட்டது போல் நிறைவாய் இருந்தது. இருளாய் இருந்த வாழ்வில் வெளிச்சம் பரவுவது போல் சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது.

சுந்தரி, கோவிந்தசாமியை வெகு ஆண்டுகளாகத் தெரியும் என்ற போதும், தற்போது உறவு என்ற கூடுதல் பாசத்தோடு அந்த வீட்டில் உரிமையோடு ஒட்டினான். திருமணம் முடித்த பின்னும் எழில் அவள் வீட்டில் இருக்க, அவளுக்குப் பெரிதாக வேறுபாடுகள் எதுவுமின்றி சகஜமாக இருந்தாள்.

எழிலைக் கடத்தும் நோக்கத்தில் மட்டுமே மறைந்திருந்த சிவா தற்போது அவளுக்கு திருமணம் முடித்துவிட்டது என்பதாலும், உதய் தேர்தலில் தோற்றதை அறிந்ததால் ஊருக்குள் இனி தங்கள் ராஜ்ஜியம் தான் என்பதாலும் உதய் மீது கோபத்தில் இருந்தவன் ஊருக்குக் கிளம்பினான். வாசல் வரை வர, ரெங்கநாதனும், பரமேஸ்வரியும் ஊரிலிருந்து ராஜாவை பார்க்க வந்தனர்.

சிவாவைப் பார்த்தவர், “டேய் நீ கோவா போயிருக்கேன்னு தானலே சொன்ன?” எனக் கேட்க, “ஆமாம்மா போயிட்டு நேத்து நைட்டு தான் வந்தான்” என ராஜா பதிலளித்தான். ‘நேத்து நான் காப்பாத்துனதுக்கு இன்னைக்கு நீ என்னை காப்பாத்திட்ட!’ என்பது போல் பார்த்தான் சிவா.

பவித்ரா பெரியவர்களை உபசரிக்க, அவர்களும் ராஜாவின் நலன் விசாரித்துவிட்டு போத்தியோடு கொஞ்சி விளையாடினர். ரெங்கநாதன் ஊரில் நடந்த நிகழ்வுகள் உதயனின் திருமணம் குறித்து உரைக்க, கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிவாவின் முகம் மேலும் இறுகியது. இரவு உணவுக்குப் பின் ரெங்கநாதன் கிளம்ப, சிவாவும் உடன் கிளம்பினான்.

அடுத்த பக்கம்

Advertisements