மறவாதே இன்பக்கனவே 18

மெல்லிய இரவு விளக்கின் ஒளி மட்டும் அறைக்குள் நிறைந்திருக்க, உள்ளே விரைந்து வந்தான் உதய். அவன் காலடி சத்தத்தில் கீழே குனிந்திருந்தவள் சட்டென நிமிர்ந்து திரும்பினாள்.

“என்னாச்சு எழில்..?” என பதறி அவளருகே வர, “செம்பு கை தவறி விழுந்துடுச்சி வேற ஒன்னுமில்லைங்க” என்றவளின் குரலே கரகரக்க, அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் முகத்தை ஆராய்ந்தான். அழுததிற்கான தடங்கள் அப்படியே இருந்தது, இன்னும் கலங்கிய கண்களில் நீர் கோர்த்திருந்தது.

அருகே வந்து ஒற்றை விரல் கொண்டு அவள் இடது கன்னத்தின் கண்ணீரைத் துடைத்தபடி, “நான் இதைத் தான் கேட்டேன், என்னாச்சு எழில்?” என்றான் மீண்டும். மெல்ல அவன் கைகளை விலக்கிவிட்டவள் பதிலேதும் சொல்லாது அமைதியாக நின்றாள்.

தன் தாலி கட்டிய முதல் நாளே தான் மனைவி அழுகிறாள் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அதை விடவும் இத்தனை நாளும் தன் கேள்வியை அலட்சியப்படுத்தியவள் இன்றும் அலட்சியப்படுத்த அவனால் தாங்க இயலவில்லை.

கோபத்தை கட்டுப்படுத்த கைகளை கட்டிக்கொண்டவன், “என்னன்னு சொல்லு, இன்னுமா என் மேல் நம்பிக்கை வரலை? அப்படி நம்பிக்கை இல்லைன்னா எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்ட? ஒருவேளை இந்த கல்யாணத்துலையே உனக்கு விரும்பமில்லையா?” என்றான்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுடீங்களே?” என்றவள் அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றாள்.

“அன்னைக்கு நீ அழுததை பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை, அதனால தான் அப்படி கேட்டேன், அதே நேரம் எடுத்த முடிவில் பின் வாங்குற பழக்கமும் எனக்கில்லை. இந்த கல்யாணத்தில் நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தலையே?” என்றான்.

“இதை தவிர எனக்கு வேற வாய்ப்புகளும் கொடுக்கப்படலையே..?” என்றாள் அவள். அது உண்மை தான் என்பதை அவன் மனமும் ஏற்க, “நடந்ததை பேச வேண்டாம். என் கூட வாழணும்னோ, கதிரை மறக்கணும்னோ நான் உன்னை கட்டாயப்படுத்த போறதில்லை” என்றான்.

அப்பறம் ஏன் இந்த திருமணம்? கேள்வி தோன்றிய போதும் தற்போதைய அவன் தேவை அவள் நிம்மதி தான். அவளிடம் பதிலோ, சத்தங்களோ இல்லாது போக, அவள் முன் சென்று நின்றான். தலை குனிந்திருந்தவளின் முகத்தை இரு கைகளிலும் தாங்கி நிமிர்த்திப் பார்க்க, கண்களின் இருந்து முத்து முத்தாய் கண்ணீர்த் துளிகள் வழிந்து கொண்டிருந்தது.

உதயனுக்கு மனம் தாங்கவே இல்லை, “என்ன கண்ணம்மா? அழாதடி எழிலு” என்றவனின் குரலே கலங்கி வர, சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்தவள் ஏங்கி ஏங்கி விம்பி அழுதாள். ஒருவேளை கதிரின் நினைவாக இருக்குமோ என நினைத்தான்.

தன் நெஞ்சில் சாய்ந்து சட்டை நனைய அவள் விசும்ப, காரணமறியாது உதயனும் கலங்கினான். இருந்தும் அழும் அவளை எவ்வாறு கொஞ்சி சமாதானப்படுத்த என்று தெரியாது முழித்தவன் மெல்ல கைகளை உயரத்தி தலையை தடவிக் கொடுத்தான். நேரங்கள் கடந்தும் அவள் அழுகையும் குறைவில்லை, அவனிடமிருந்து அணுவும் அசையவில்லை.

அவனுக்குத் தான் கால்கள் வலிக்க, “எழில்..எழிலு..” என்றபடி அவளை உலுக்கினான். சட்டென நிமிர்ந்தவள் அவன் கைகளை தட்டிவிட்டு விலகி நின்று, “ஆசையில்லாம தானே கட்டிக்கிட்டீங்க? அப்பறம் என்ன இதெல்லாம்?” என்றாள் மூக்கை உறிஞ்சி தேம்பியவாறு. என்னவோ அவன் தான் அணைத்தது போன்று குற்றம் சாட்டினாள்.

‘ஐயோ அண்டவா இந்த பொம்பளைங்களை புரிஞ்சிக்கவே முடியலையே, இதுக்கு புதுசா ஒரு டிக்ஸனரி சீக்கிரம் கொடுப்பா’ என மனதில் வேண்டியபடி, “எதுக்கு அழுதேன்னு இப்போ சொல்லப்போறீயா இல்லையா?” என்றான் அதட்டலாக.

“அது..அது என்னால தான் நீங்க உங்க வீட்டைவிட்டு வந்தீங்க, என்னால தான் உங்க குடும்பத்தை எதிர்த்தீங்க, என்னால தான் உங்க சொத்து எல்லாத்தையும் இழந்தீங்க, என்னால தான் தேர்தல்ல தோத்தீங்க, என்னால தான் உங்களுக்கு கெட்டபெயர், என்னால தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்றாள் அழுகை குறைந்த விசும்பலுடன்.

உதயனுக்குச் சிரிப்பு பொங்கியது, அழும் அவள் முன் சிரித்தாள் கோபம் கொள்வாள் என நினைத்து அடக்கினான். அவன் என்னென்னவோ நினைக்க, கடைசியில் அவனுக்காக அழுதாளாம்!

“லூசா நீ..? இதுக்கா அழுத..!” என்க, ஆமென்பது போல் தலையாட்டியவள், “இதுவே உங்க அக்கா பார்த்திருந்தா என்னை விட ரொம்ப படிச்ச, அழகான பொண்ணை பார்த்திருக்கும், இதுவே உங்க பெரியம்மா கல்யாணம் செஞ்சி வைச்சிருந்தா இதை விட சிறப்பா செஞ்சி வைச்சிருக்கும், இதுவே உங்க வீட்டுல இருந்திருந்தா நீங்க இன்னும் நல்லா இருந்திருப்பிங்க” என்றாள்.

தன்னை எண்ணியும் கவலை கொள்ள, தனக்காகக் கண்ணீர் விட ஒரு உறவு இருக்கிறது என நினைக்கையில் உதயனுக்கு சுகமாக இருந்தது. மனம் லேசானது போன்றிருக்க அவளை ஒருமுறை ஆரத்தழுவிக் கொள்ளும் ஆசையில் கைகள் பரபரத்தது.

கைகளைக் கஷ்டப்பட்டு அடக்கியவன், “இதுவே இதுவேன்னு இல்லாத ஒன்னை கற்பனை செஞ்சிக்கிட்டு கண்ணை கசக்காமல் போய் படு” என்றான் அதட்டலாக.

அடுத்த பக்கம்

Advertisements