மறவாதே இன்பக் கனவே 12 (3)

அந்த கூச்சல் கூட்டத்திற்கு மத்தியில் சில நிமிடங்களிலே உதயனும் அவன் பேச்சால் அனைவரையும் கவர்த்திருந்தான். பின் பேருந்து வர அனைவரும் சென்றுவிட்டனர்.

அடுத்ததாக ஒன்பது மணி பேருந்திற்கு கல்லூரி செல்லும் இளசுகள் ஒரு கூட்டமாக நிற்க, அவர்களோடு பேச ஆரம்பித்தான். பெண்பிள்ளைகளும் ஒரு ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அதில் எழிலும் இருந்தாள்.

இலவச இணைய வசதியுடன் ஒரு பயிற்சி மையம் ஊருக்குள் இருந்தால் அரசு வேலைக்காக பரிட்சை எழுதும் பிள்ளைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என அவர்கள் கருத்தை கேட்டவாறு பேச்சை ஆரம்பித்தான். உயர்கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பெறியியல் துறை, விளையாட்டுத் துறை பற்றி உதயன் அறிந்ததை உரைக்க முந்தைய கூட்டதை விட இம்முறை ஆர்வமாக அவனிடம் பேசினர்.

ஊர் திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளில் எப்போதும் உதயன் தான் முதலில் நிற்பான் ஆகையால் இவர்கள் அனைவருக்கும் உதயன் பிரபலமானவன். அவரவர்கள் அவனிடம் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் போட்டிபோட்டுக் கொண்டு உற்ச்சாகமாகக் கேட்டனர். மச்சான், அண்ணே, உதயண்ணே, மாமா என பல குரல்கள் பேரொளியாய் உதயனை சூழ்ந்தது.

பேருந்து வந்து அனைவரும் சென்ற பின்னே அவ்விடம் நிசப்த்தமானது. எழிலும் அவனை ஒரு பார்வை பார்த்தாவாறே செல்ல, “என்ன லுக் இது?” என புரியாது நின்ற உதயனின் முதுகில் தட்டியவாறு அருகே வந்தான் அழகன்.

”கரிச்சட்டி, ஸ்டாங்கா மாப்பிள்ளைக்கு ஒரு டீ போடு போ, ஒரு மணி நேரமா மூச்சுவிடாம பேசியிருக்கான்” என்று விரட்டிய அழகன் உதயனின் பக்கம் திரும்பினான்.

“எப்படி மாப்பிள்ளை இப்படியெல்லாம்? நீ பிரச்சனைய பேசுனது உனக்கு பேசுன பிரச்சாரம் தான்னு தெரியாத மாதிரியே செஞ்சிட்டியேடா!” என்ற அழகன் உற்ச்சாகம் பொங்க உதயனை அணைத்துக் கொண்டான்.

உதயன் சிரிப்புடன் விலக்கிவிட, “வெள்ளை வேட்டி, சட்டை மட்டும் போடு அரசியல்வாதிக்கான அத்தனை அம்சமும் உனக்கு வந்திடும்” என்றான்.

அதே நேரம் நான்கு பெண்கள் வந்தனர். பேருந்து சென்ற பின் சாப்பாட்டு பையுடன் வருபவர்களின் அருகே சென்ற உதயன், “என்னக்கா கொஞ்சம் விரசா வரக்கூடாது இப்போ தானே பஸ் போச்சி” என்றான்.

“எங்க தம்பி? இன்னைக்கு பார்த்து தெருக்குழாய்யில குடி தண்ணீர் வந்திடுச்சி, தண்ணீர் எடுத்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதுக்குள்ள பஸ் போகிடுச்சி” என்றனர் அனைவருமாக.

“இதுக்கு தான் தண்ணீர் வண்டியில கொண்டு வந்து வரிசையா ஒவ்வொரு வீட்டுக்கா ஊத்தணும், இல்லை வீட்டுவீட்டு குழாய் போட்டு விட்டுடணும். இப்படி இருந்தா உங்களுக்கு வசதியா இருக்குமில்லையா அக்கா?” என பேச்சை ஆரம்பிக்க, அழகன் சிரிப்போடு தன் கடையை நோக்கிச் சென்றான். அடுத்து வந்த நாட்களில் காலை நேரம் இப்படியே கழிந்தது உதயனுக்கு.

அன்று எழிலரசி தாமதமாக வந்து பேருந்தை விட்டுவிட, தந்தையின் கடைக்குச் சென்றாள். கோவிந்தசாமியை அழைக்க, அவரோ வேலையிருப்பதாக மறுத்து உதயனோடு பைக்கில் சொல்லுமாறு உரைத்தார்.

அவள் மறுக்க, பக்கத்து ஊர் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் அதற்குள் சென்று பிடித்து விடலாம் அது வரையாவது அவனுடன் செல்லுமாறு உரைக்க வேறு வழியன்றி அவன் பைக்கில் ஏறினாள்.

ஏற்கனவே ஊருக்குள் உதயனின் பரப்புரைகள் கேள்வியுற்று கோபத்தில் இருந்த சிவா, எழில் உதயனோடு பைக்கில் எதிரே வருவதைப் பார்க்க கொதிக்கும் எரிமலையானான். அன்று தான் அழைத்ததற்கு வரமாட்டேன் என மறுத்தவள், கதிரை தவிர வேற யாருடனும் பைக்கில் செல்லமாட்டேன் என்றவள் இன்று உதயனுடன் செல்லவதை சிவாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவ்வளவு நெருக்கமாகி விட்டானா உதயன்? என நினைத்தவனின் மொத்த சினமும் தற்போது எழிலின் மீது திரும்ப எளிதாக விட்டுவிட மாட்டான் சிவச்சந்திரன்.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி