மறவாதே இன்பக் கனவே 11 (3)

அவளை தவிர அங்கு யாறுமில்லாமல் இருக்க, இறங்கி அவள் அருகே வந்தவன், “ஊருக்கு தானே கூப்பிடுறேன், என்னவோ சினிமாவுக்கு கூப்பிட்ட மாதிரி முகத்தை திருப்பிக்கிற” என்றான்.

வேகு நிதானமாக “நான் கதிர் மாமாவை தவிர வேற யார் கூடவும் பைக்கில போறதில்லை” என தவிர்த்தவளின் கண்கள் அங்குமிக்கும் சுழன்றது. அவளுக்கா பொய்யுரைக்க வராது!

அவள் தன்னை தவிர்கிறாள் என அறிந்ததும் சினம் எழ, “கதிரு, கதிரு….இன்னும் செத்துப்போனவன் பெயரையே எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டு இருக்கப்போற? என்னை கட்டிக்கோடி பெயருக்கு ஏத்த மாதிரி உன்னை அரசியா வாழ வைக்கிறேன்” என்றான்.

அவன் சொல்லிய விதம் அருவருப்பைத் தர அற்பமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அருகே வரும் ஆட்டோவை நோக்கி கை நீட்டினாள்.

“எத்தனை வருஷமாடி உன் பின்னாடி சுத்த? எழில் கொஞ்சம் நில்லு” என்றவன் எட்டி அவள் கைகளை பிடிக்க முயல, கொதிக்கும் எரிமலையானவள் தன் காலடியில் இருக்கும் செங்கலை அவனை நோக்கி எத்திவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டாள். பலமாக காலில் மோதிவிட, காலை உதறிக்கொண்டு வெயிலில் நின்றான்.

ஒரே ஊரில் இருந்தும் சிறுவயதில் பெரிதாக எழிலை கவனித்ததில்லை. கதிருடனான பிரச்சனையின் போது தான் கவனித்தான் சிவா. இளம்பெண்ணாய் இருந்த எழிலின் எழில்மிகுந்த அழகு சிவாவை பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு முறை எழிலை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகை தனக்கே உரிமையாக்கிக் கொள்ளும் ஆசை துளிர்விட்டுக்கொண்டே இருந்தது. எழிலிடம் தோன்றியதை போன்ற ஈர்ப்பு வேறு பெண்களிடம் துளியும் தோன்றவில்லை.

எழில் வளர, வளர அவள் அழகு சிவாவின் மனதில் இருந்த ஆசையை பெருந்தீயாய் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. அந்தத் தீ தன் ஆசைக்கு தடையாக யாராகயிருந்தாலும் எரித்துவிட தயாராக இருந்தது. அவள் குடும்பம், கதிர், ஏன் அவன் குடும்பமாக இருந்தாலும் சரி.

அப்படி தான் மூன்று வருடங்களுக்கு முன் திருவிழாவில் கதிரிடம் எழில் அருணை கைக்காட்டியதை கண்டுகொண்டான். அருணிடம் சென்ற கதிர் எழிலின் மாமா என்றும் தானே எழிலை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அவளை இனி தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் கூறிவிட்டு விலகிச் சென்று விட்டான்.

ஆனால் சிவா விடுவதாய் இல்லை, அன்றிரவு கலைநிகழ்ச்சி பார்க்க வந்திருந்த அருணை சத்தமில்லாது ஆள்கள் வைத்து தூக்கிச் சென்றான். மாந்தோப்பில் வைத்து தங்கள் ஊர் பெண்ணிடம் வம்பு செய்வாயா என்று தன் வெறி தீர அடித்துத் துவைத்து விட்டு, எழில் இருக்கும் கல்லூரியில் இனி படிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடனே அவனை உயிரோடு விட்டான். சிவாவின் பெயர் அறியாத அருணின் நண்பன் எழிலிடம் அவர்கள் ஊர் பெரியவர் மகன் என்றே சொல்லியிருந்தான்.

குடும்ப பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாது எழிலின் மீது தீராத ஆசையை வளர்த்துக்கொண்ட சிவா, அந்த காரணத்தினாலே அன்னையும், அக்காவும் தன் திருமணத்திற்காக பார்க்கும் பெண்கள் அனைத்தையும் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து கொண்டிருந்தான்.

மாலை நேரம் வழக்கம் போல அழகனின் டீக்கடையில் மரப்பெஞ்சில் படுத்துக்கிடந்தான் உதயன்.

“என்ன ஓனர் அண்ணா நாளைக்கு லீவு தானே? எல்லாரும் ஜாலியா சினிமாவுக்கு போயிட்டு வருவோமா?” என பாத்திரங்களை கழுவியவாறு அழகனிடம் கேட்டான் கரிச்சட்டி.

“நாளைக்கு என்னலே லீவு?” என அழகன் கேட்க, “விஷியமே தெரியாதுங்களா அழகண்ணா. நாளைக்கு பெரியவர் மாடசாமி கோவில்ல கிடா விருந்து போடுறாரு, தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாரு போல. அப்பறம் நாளைக்கு ஊருக்குள்ள எவன் இந்த ஊசிப்போன சாம்பார் சோத்தை திங்க வருவான்? நானே கறிசோறு திங்க தான் போறேன்” என்றான் சிறு சிரிப்புடன்.

“நீ மட்டும் போயிட்டு வா, உனக்கு சோத்துல எலி மருந்தை வைக்கிறேன்” என முறைப்போடு மிரட்டிவிட்டு உதயனின் அருகே வந்ததான்.

உதயன் எழுந்து அமர, “என்னடா நீ என்ன பில்கேட்ஸ் பேரனாடா எதுவும் வேண்டாம்னு சொல்லுறதுக்கு?” என்றான் அழகன்.

“விடு அழகா, சொத்து தானே சம்பாதிச்சிக்கலாம் உடம்புல தெம்பிருக்கு” என்றவனின் குரலில் விரக்தி நிறைந்திருந்தது.

“தேர்தல் செலவுக்கு?” எனக் கேட்ட அழகனை மௌனமாய் நோக்கினான் உதயன். அதே நேரம் பைக் நிற்கும் சத்தம் கேட்டு அழகன் திரும்ப உதயனும் எட்டிப் பார்த்தான்.

தன் புதுமனைவி துளசியுடன் பைக்கில் அமர்ந்திருந்த வினோத், “உதய் அண்ணா, இப்போ தான் காளியம்மன் கோவில்ல இருந்து வாரோம். அங்க உங்க பெரியம்மாவும் சுந்தரியக்காவும் சண்டை கட்டிக்கிட்டு இருக்காங்க சீக்கிரம் போங்க” என்றான்.

பதறி எழுந்த உதய் எதிரே இருந்த அழகனை அவசரத்தில் தள்ளிவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

“போச்சி போ, இரண்டும் சரியான சண்டக்கோழிகளே! யாரு யாரை பிச்சி எறியப் போறாங்களோ? இரத்தக்காயம் இல்லாம இருந்தா சரி தான்” என்ற புலம்பலோடு எழுந்து அமர்ந்த அழகன் தலையில் கை வைக்க இரத்தம்.

சிறு கல் நெற்றில் கீறியிருந்தது, “இவனை மாப்பிள்ளையா பெத்ததுக்கு இன்னும் என்னத்தை எல்லாம் அனுபவிக்கப் போறேனோ!” எனப் புலம்ப, சிரிப்போடு கரிச்சட்டி அவனை கடந்து சென்றான்.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி