மறவாதே இன்பக் கனவே 11(2)

ஆனால் இன்று உதயன் காயத்தோடு நின்ற தோற்றம் ஒருவாறு நெஞ்சை பிசைந்தது. இவ்வாறு அனைத்தையும் இழந்து நிற்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை. நினைக்க, நினைக்க குற்றவுணர்வு அதிகமாகி நெஞ்சே கனப்பது போன்றிருந்தது. வேதைனையோடு இருப்பானே? உண்டிருக்க மாட்டான், உறங்கியிருக்க மாட்டான் சென்று பார்ப்போமா? என நினைத்தவள் மணியை பார்த்தால் இரவு பதினொன்று.

இருளில், இந்த நேரம் செல்வதும் சரியன்று ஆனால் கதவை மூடும் வரையும் உதயன் வீட்டிற்கு வரவில்லையே என தவிப்பாகவும் உணர்ந்தாள்.

எழிலரசி கல்லூரியில் சேர்ந்திருந்த முதல் வருடம், ஊர் திருவிழாவிற்கு உதயன் வந்திருந்த நேரம்.

“டேய் கதிரு, இடுப்புல கை வைக்காதே கூச்சமா இருக்குடா” உதயனின் குரலும், “டிஸ்கோ டான்சர்னு நினைப்பாடா உனக்கு? வேஷ்டியை கட்டுற வரைக்கும் கொஞ்ச நேரம் ஆடாம நில்லேன்” என பதில் குரலாய் கதிரின் குரலும் கேட்டது.

கதிரை அழைக்க வந்த எழில் இருவரின் குரல் கேட்டு வாசலிலே நின்றுவிட்டாள். “கதிர் மாமா…” என கத்தி அழைக்க, “என்ன எழில்?” எனக் கேட்டவாறு கதிரும் அவன் பின்னே உதயனும் வெளியே வந்தனர்.

“பச்சகலர் கண்ணாடி வளையல் வேணும் மாமா” எனக் கதிரிடம் கேட்டாள்.

‘நேரம் கெட்ட நேரத்துலையா வருவாள்’ என்ற எரிச்சலில் உதயனின் வாய் சும்மா இருக்காமல் “அப்படியே திருவிழா கடையில ஒருஜோடி பச்ச ரிப்பனும் வாங்கிக்கொடுடா அருக்காணி கொண்டையிலே சுத்திக்கிடட்டும்” என்றான். சிறுவயதிலிருந்தே எழிலுக்கு நீளாமான கருங்கூந்தல்.

அவன் பக்கம் முறைப்பாய் திரும்பியவள் அவனை கீழிருந்து மேல் வரை ஒருமுறை பார்க்க, ‘விட்டா வேஷ்டியை உருவி விட்டுட்டுவா போலிருக்கே’ என நினைத்தவன் கதிரின் பின் மறைந்தான்.

“அதை அவருக்கே வாங்கிக்கொடுங்க மாமா, வேஷ்டி அவுறாம இருக்க இடுப்புல சுத்திக்க உதவும்” என எழிலும் பட்டென்று பதில் கொடுத்துவிட, கதிர் சிரித்தான்.

கதிரின் முதுகில் உதயன் அடிக்க, “உனக்கு இது தேவையா உதய்?” என்றவன் எழிலிடம் திரும்பி, “நீ கோவிலுக்கு போ நான் வருகிறேன்” என்றான். அவளோ மறுப்பாய் தலையசைத்துவிட்டு கதிரின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

திருவிழா கடைகளில் சிறுபிள்ளை போன்று பொம்மை, பலூன், பஞ்சுமிட்டாய் என வேண்டியதையெல்லாம் கதிரிடம் பட்டியல் போட்டு வாங்கிவிட்டு அன்னையிடம் சொல்லிவிட வேண்டாமென்று வேண்டுதலையும் வைத்தாள். மஞ்சள் முகத்தில் சதைப்பற்றோடு பூசினார் போன்ற இரண்டு கன்னங்களும், சிவந்த இதழும், பட்டுத்தாவணியும் அவளை பருவ பெண்ணாகக் காட்டிய போதும் செயல்கள் என்னவோ சிறுமி போன்றிருந்தது.

கோவிலுக்குள் கூட செல்ல விடாது கதிரை கடைகடையா எழில் இழுத்துச் செல்ல வேறுவழியின்றி அவர்கள் பின்னே வந்துக்கொண்டிருந்தான் உதயன். ‘நான் என் பிரண்ட்டோட இருக்குறதே இந்த இரண்டுநாள் அதையும் விடுறாளா பாதகி’ என உச்ச எரிச்சலில் இருந்தான்.

திடீரென நின்றவள் கூட்டத்தில் தூரத்தில் ஒருவனை கைகாட்டி, “மாமா, அவன் தான் அருண். நான் சொல்லுவேன்ல காலேஜ்ல என் பின்னாடியே வருவான், காலேஜ் பஸ்ல, சுவர்ல எல்லாம் என் பெயரும் அவன் பெயரும் கிறுக்கி வைச்சிருக்கான்னு அவன் தான் அது, வந்து என்னனு கேளுங்க மாமா” என்றாள்.

“எழில் காலேஜ் லைப்ல இதெல்லாம் சகஜம்தான் நான் புரியிற மாதிரி சொல்லிக்கிடுறேன், நீ போம்மா” என்க, உதட்டை சுளித்துவிட்டுச் சென்றாள்.

“எலிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு பெரிய அழகின்னு தான் நினைப்பு உன் அக்கா மகளுக்கு” என்ற உதயனின் வார்த்தைகள் செல்லும் அவள் காதுகளில் நன்றாக விழுந்தது.

மறுநாள் கல்லூரிக்குச் செல்ல முகம் வீங்கி கையில் கட்டுகளுடன் வந்த அருண் டி.சி வாங்கிவிட்டு வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டான். அவன் நண்பன் எழிலிடன் உங்கள் ஊர் பெரியவர் மகனை வைத்து மிரட்டுகிறாயா? அவன் அடித்ததால் தான் அருணுக்கு காயம், போலீஸ் கேஸ் கொடுப்போம் என அவன் பங்கிற்கு எழிலை மிரட்டி விட்டுச் சென்றான்.

ஊர் பெரியவர் மகன் என்றதும் உதயன் மட்டுமே நினைவில் வர, உதயன் தான் தனக்காக அருணை அடித்ததாக இன்றுவரை நினைத்துக் கொண்டிருந்தவள் அதே நினைவுடன் விழிமூடினாள்.

மறுநாள் சூரியன் உச்சியில் நிலைத்து நிற்க, உஷ்ணக்காற்று முகத்தில் வீச, அனல் நீராய் மிதக்கும் தார் சாலையில் சற்றே நிழல் கொண்ட பேருந்து நிறுத்தத்தில் தங்கள் ஊர் பேருந்தை எதிர்நோக்கி இருந்தாள் எழிலரசி.

அவள் முன் சர்ரென பைக்கில் வந்து நின்றான் சிவச்சந்திரன். பைக்கில் அமர்ந்தவாறே, “என்ன எழிலு ஊருக்கா? எங்கூட வாயேன்” என்றான். வரமாட்டாள் என தெரிந்தே அழைத்தான்.

அடுத்த பக்கம்