மறவாதே இன்பக் கனவே 11

கதிரின் இழப்பில் இருந்து அத்தனையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான். பெற்றவர்கள் இல்லை, உயிர் நண்பன் இல்லை, நேற்றுவரை இருந்த உடைமைகள் இல்லை, உரிமையான உறவுகள் இல்லை அப்படியிருந்தும் அவன் கலங்கவில்லை. ஆனால் ஒரு விரக்தி, தனிமை நெஞ்சை அழுத்தியது. தனக்கான தனித்துவமான அன்பிற்கான ஏக்கம் இன்றும் பரவியிருந்தது.

அவன் சொத்துக்களை வேண்டாம் என்றதிற்கு காரணம் ராஜாவிற்கு அதன் மீதிருக்கும் ஆசைகளை அறிந்திருந்ததால். சொத்துக்கள் என்பது பொருள்செல்வம் மட்டுமல்ல, அவன் உரிமைகள். பரம்பரை சொத்துக்கள் என்பது அந்த பரம்பரையில் வந்தவன், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற அடையாளத்தைத் தருவது. தந்தைக்கு பின் தான் என்ற அடையாளம் தற்போது இல்லாமல் போனது. தெரிந்தே இழந்திருந்தான், இல்லையில்லை விட்டுக்கொடுத்திருந்தான்.

கதிரின் ஆசைகளை நிறைவேற்ற முடியுமா என்று எழில் கேட்ட வார்த்தைகளை செய்து முடிக்கச் சொல்லி பெயரறியாத விசை உந்த, தேர்தலில் அவன் பெரியப்பாவை எதிர்ந்து நின்றான். எதிர்த்து நின்றானே தவிர அவர்களை எதிரியாக நினைக்கவில்லை.

சிறுவயதிலிருந்து அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் இல்லை தான், ஆனால் இன்று மொத்த குடும்பமும் அவனை எதிரியாகப் பார்ப்பதை ஏற்க முடியவில்லை. சொத்துக்களை விட்டுக்கொடுத்தால் ராஜாவேணும் விலகிச் செல்வான் என எதிர்பார்த்தான்.

ராஜா சொத்துக்களில் அவனை எதிரியாக நினைக்க, ரெங்கநாதன் அரசியலில் அவனை எதிராக நினைக்க, சிவா காதலில் அவனை எதிரியாக நினைத்தான். ஆக மொத்த குடும்பத்திற்கும் அவனை எதிரியாக்கி வைத்து விதி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது.

நடுக்கூடத்தில் முந்தியை விரித்து நெஞ்சில் அடித்து அழுது கொண்டிருந்தார் பரமேஸ்வரி. அபிராமி தன் வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக அன்னைக்கு அழைத்து ஆதங்கத்துடன் நடந்த அனைத்தையும் உரைத்து, இனி அவளுக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லை என்று வைத்துவிட்டாள்.

தொலைக்காட்சியை பார்த்தவாறு சோஃபாவில் அமர்ந்திருந்தான் சிவச்சந்திரன். உதயனுக்கான அன்னையின் அழுகுரல் எரிச்சலை அதிகரிக்க மேலும் தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்தான். ‘அடேய் ராஜா செய்யுறதையும் செஞ்சிட்டு வீட்டுக்கு வந்தா அம்மாகிட்ட வாங்கிக்கட்டிக்க வேண்டியிருக்கும்னு வீட்டுக்கு வராமையே தப்பிச்சிட்டையேடா’ என நினைத்தான்.

பரமேஸ்வரியின் புலம்பல் மேலும் அதிகரிக்க, தொலைக்காட்சியை அணைத்து விட்டு அவர் அருகில் வந்து தரையில் அமர்ந்தான் சிவா.

“எம்மோவ் உசுரோட இருக்குற உம்புள்ளைக்கு ஒப்பாரி வைச்சு ஏன் இப்படி உடம்பை கெடுத்துக்கிடுற?” என்றான்.

Advertisements

அவன் புறம் சீற்றமாக திரும்பியவர் “பேசாதலே நீ, பேசின பல்லைத் தட்டிப்புடுவேன்” என்றார் மிரட்டலாக.

வந்த சிரிப்பை இதழுக்குள் சிறை படுத்திக்கொண்டு, “அங்கேயும் நான் எதுவும் பேசலையேம்மா. கொத்தமல்லிக்கட்டை தூக்கி எறியிற மாதிரி கொத்தா தூக்கி ஏறிச்சிட்டானுங்க. அங்க பேசினதெல்லாம் ராஜாவும் அப்பாவும் தான்” என்றான். அப்போதும் பரமேஸ்வரியின் புலம்பல் நின்றபாடில்லை.

“சரி விஷேசத்துக்கு போனியே, மீனாச்சிபுரத்துல எத்தனை பொண்ணுங்க இருக்குன்னு விசாரிச்சிருப்பியே? எனக்கு பொண்ணு எதுவும் பார்த்தியா?” என்றான்.

முறைப்போடு அவன் புறம் திரும்பியவர் முந்தானையில் மூக்கை கசக்கியவாறு, “நீ செஞ்சிட்டு வந்திருக்கிற வேலைக்கு உனக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடு, கல்யாணம்னு வாய்யத் திறந்த உரிச்சி உத்தரத்துல தொங்க விட்டுவேன் பார்த்துக்கோ” என்றார் பட்டாசாக படபடத்து.

அதே நேரம் உள்ளே வந்த ரெங்கநாதன், “ஈஸ்வரி என்ன சத்தம்? தெருமுக்கு வரைக்கும் கேட்குது?” என்றார் அதட்டலாக.

‘அப்பாடா அப்பா வந்து காப்பாத்திட்டார்’ என சிவா மனதில் நினைத்துக்கொண்டு பெருமூச்சோடு விலகிச்சென்றான்.

பெற்றோர்கள் இல்லாத உதயனுக்கு அந்த இடத்தில் தாம் நின்று நல்லது செய்ய வேண்டும் அதை விடுத்து அவனுக்கு உரிமையான சொத்தையும் பறித்துவிட்டு, தங்கள் மாப்பிள்ளையையும் சபையில் குறைவாக பேசி விட்டீர்களே என கணவரோடு வாதடி சண்டையிட்டார் பரமேஸ்வரி.

“நம்ம மாப்பிள்ளை தான் ஆனால் நமக்கு சாதகமா பேசலையே அவரு, நாங்க எல்லாம் காரணமா தான் செஞ்சிருக்கோம், சும்மா புலம்பிக்கிட்டு கிடக்காம போய் சாப்பாட்டை எடுத்து வை போ” என ரெங்கநாதன் அதட்டினார்.

அதற்கெல்லாம் அசராத பரமேஸ்வரி, “ராக்காயி வேலைக்கு வரலை, நானும் இப்போ தான் ஊருல இருந்து வந்திருக்கேன், இன்னைக்கு ஒரு நாள் இராத்திக்கு பட்னியாகிடங்க, அப்போ தான் பசின்னா என்னன்னு புரியும்” என்றவர் முந்திச் சேலையை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

அழகனின் கடையும் இன்று விடுமுறையே என்ற எண்ணத்தில் தந்தையும் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பரிதாபமாக நின்றனர்.

என்ன தான் உருண்டு உருண்டு படுத்த போதும் எழிலிக்கு உறக்கம் என்பதே வரவில்லை. கதிரோடு காதல் இல்லாவிடினும் அவன் மீது அளவு கடந்த பாசமுண்டு. சிறுவயதில் இருந்த அதிக பொறுப்போடு தனக்கு வேண்டியதை எல்லாம் செய்த கதிருக்கு எழில் செல்லப்பிள்ளை!

அன்னையிடம் கூட எதுவும் எதிர்பார்க்க மாட்டாள் அனைத்தும் கதிர் தான். அதே போல் கதிரை யாராவது ஒரு வார்த்தை குறைவாக சொன்னால் அத்தனை எளிதாக விட்டுவிட மாட்டாள். அன்னையாக இருந்தாலும் சண்டைக்கு தயாராக நிற்பாள்.

அடுத்த பக்கம்

Advertisements