மறவாதே இன்பக்கனவே 1

வெள்ளிக்கம்பிகளை போலே விண்துளிகள் மின்னலொளியில் மிதந்து புவியில் கொட்டிக்கொண்டிருந்த நள்ளிரவு வேலை. மும்பை நகரின் போக்குவரத்து நெரிசல்கள் சற்றே குறைந்திருந்தது. தலை முடிகளை கோதியவாறே பாதி நனைந்த ஈர உடையோடு தன் பிளாட்டிற்குள் நுழைந்தான் உதயன்.

 

குளித்து உடை மாற்றி கட்டிலில் கவிழ்ந்தவன் கைபேசியை கையில் எடுத்தான். காலையில் நண்பன் கதிர் அனுப்பியிருந்த புகைப்படங்களை பார்க்கத் தொடங்கினான். பளிச்சென்று புன்னகை முகத்தோடு நெற்றி நிறைய பெரியவர்கள் ஆசிர்வதித்து பூசிய விபூதியோடு கதிர் நின்றிருந்தான். அருகே மஞ்சள் பட்டில் தலைநிறைய மல்லிகையோடு முகமலர நின்றிருந்தாள் எழிலரசி.

 

“நிச்சியத்துக்கு வராம ஏமாத்திட்ட கல்யாணத்துக்கு வரல அப்பறம் கல்யாணமே நடக்காது பார்த்துகோ உதய்” காலையில் கதிர் மிரட்டியது நினைவில் வர சிரித்துக் கொண்டான்.

 

இவனுக்குனே பிறந்து வளர்ந்த அக்கா மகள் எழிலரசி இருக்காள். நமக்கும் தான் இருக்குதே அக்கா மகள்ன்னு இப்போ தான் நாலாவது படிக்குது அவ எப்போ வளர்ந்து நான் எப்போ கல்யாணம் பண்ண? ஆண்டவா! அத்தை, மாமா மகளுகளை பார்த்தாலும் ஒவ்வொரு தரம் ஊருக்கு போகும் போதும் ஆளுக்கொரு பங்காளியை கட்டிக்கிட்டு நமக்கே அண்ணியாகிடுறாளுக. ஆஃபீஸ்ல அந்த மாடல் அதீதியை கரெட் பண்ணலாம்னு பார்த்தா அவள் அந்த பெங்காலி பையனோட போயிட்டா!

 

வீட்டுல யாரு நம்மளை பத்தி நினைக்கப் போறா? பெரியம்மா நினைச்சாலும் சிவாவுக்கு பிறகுனு தான் சொல்லுவாங்க. ரெண்டுமாசம் முன்ன பிறந்து தொலைச்சிட்டான் அந்த பாவி. யம்மா நீ இருந்திருந்தா எனக்கு இரெண்டு கல்யாணம் கூட பண்ணி பார்த்து சந்தோஷப்பட்டுருந்திருப்பே ஆனாலும் ரொம்ப லேட்டானாலும் போன வருஷமே போய் சேர்ந்தாருல டாடி அவராவது எனக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டு போயிருக்கலாமே! இந்த வீட்டுல எனக்கு துணையா ஒரு பேய் கூட கிடையாது தெரியுமா?

 

மனதோடு புலம்பியவாறே படுத்துக்கிடந்தவன் அடுத்ததாக ஊர் திருவிழாவின் போது எடுத்த வீடியோவை பார்க்கத் தொடங்கினான். அத்தனை கூட்டத்துக்குள் எழிலரசியை காதலோடு பார்க்கும் கதிரின் பார்வை, தள்ளி முந்திக்கொண்டு நண்பர்களோடு வடம் பிடித்து தேர் இழுத்தது, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றது என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் தானாக களைப்பில் மூடியது.

 

பல வருடங்களாக பழகிவிட்ட தனிமை, என்றுமே வெறுக்காத தனிமை, கட்டுப்பாடுகள் இல்லாது இனிமை தரும் தனிமை. இன்றேனோ வெறுமை! மனம் ஏதோவொரு உறவை தேடியது. தன் வாழ்வின் அர்த்தமாய், வாழ்வதற்கான பிடிமானமாய் வேண்டியது ஒரு உறவை! பிரியும் உயிரை பற்றும் கயிறாய் உயிராய் ஒரு உறவு!

 

ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தவளை ஏதோவொரு விசை உலுக்கி எழும்பியது. உடலே கயிறு கொண்டு கட்டி இறுக்குவது போன்றே இறுகி அழுத்தியது. முகமெல்லாம் வியர்த்து முத்து துளிகளாக கழுத்தில் இறங்கி மார்பு வரை நனைந்திருக்க, மாயக்கட்டிற்குள் இருந்து விடுபடுவது போல் பதறி எழுந்தாள் எழிலரசி.

 

இன்னும் பொழுது புலரவில்லை, அதிகாலைக்கும் சற்று முந்திய நேரம் விழித்து விட்டவளுக்கு அதற்கு மேல் படுக்க மனம் வராது போக, எழுந்து சமையல்கட்டுக்குள் சென்று வேலைகளை பார்க்கத்தொடங்கினாள் எழில்.

 

கதிரவனின் இளம்வெப்ப கதிர்கள் முகத்தில் வீச, கூசிய கண்களை தேய்த்துக் கொண்டு திரும்பிப்படுத்தான் கதிர்வேல். “கதிர் மாமா எழுந்திருங்க காபி கொண்டு வந்திருக்கேன்” என கேட்ட அக்கா மகளின் குரலில் மட்டும் எழுந்து விட்டான்.

 

குளித்து முடித்து புதுப்பூவாய், பனிமறையாத வெண்பூவாய் எழிலின் முகம் காண தித்தித்தது. “அங்க வைச்சிரு எழில்” என்று தன்னறைக்குள் சென்று முகம் கழுவி வந்தவன் கையில் காபியை எடுத்துக் கொள்ள இன்னும் அங்கே நின்றிருந்தாள் எழிலரசி.

 

இன்றைக்கான வேலைகளை மனதில் திட்டமிட்டுக்கொண்டே, அவள் தன்னிடம் பேசத்தான் நிற்கிறாள் என அறிந்து, “என்ன எழில்?” என்றான்.

அடுத்த பக்கம்

Advertisements