மறவாதே இன்பக் கனவே 12

கிராமத்தின் தெற்கு எல்லையில் இருக்கும் காவல் தெய்வம் காளியம்மனின் சிறு கோவில். அன்று செவ்வாய்க்கிழமை ஆகையால் மாலைநேரம் பரமேஸ்வரி கோவிலுக்கு வந்திருந்தார். அதே நேரம் குணசுந்தரியும் கோவிலிருந்து வெளியே வர, இருவரும் நேருக்கு நேராக கோவில் மரத்தடியில் சந்தித்துக் கொண்டனர்.

ஏற்கனவே கணவனுடன் சட்டையிட்டு ஆற்றாமையில் இருந்த பரமேஸ்வரி சுந்தரியை கண்டதும் வேகமா அருகே வந்தார். கதிர் இல்லாத பட்சத்தில் பரமேஸ்வரியை பொறுத்தவரை அத்தனை பிரச்சனைக்கும் ஆரம்பப்புள்ளி சுந்தரி தான்.

“ஏன்டி நீயெல்லாம் நல்லாயிருப்பியா? ஒரு குடும்பத்தை கெடுக்கணும்னே கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறையா? இதுக்கு தான் அந்த ஆத்தா உன் தம்பியை அல்பாயுசுல பறிச்சிக்கிட்டா?” என சீற்றமாக ஆரம்பித்தவர் முடிப்பதற்குள், “இந்தா நிறுத்து, தேவையில்லாம எங்ககிட்ட வம்பு வைச்சிக்கிட்ட உன் மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ” என்றார் சுந்தரி.

“யாரு வம்பு பண்ணுறா? உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஆகாது தானே? அப்படியிருந்தும் எம்பிள்ளைய உன் வீட்டுல தங்க வைச்சி, அவன் மனசை கலச்சி, எங்களுக்கு எதிரா தூண்டிவிடுறீயா? உன் எண்ணமெல்லாம் பலிக்காதுடி” என விரல் நீட்டி எச்சரித்தார்.

அதற்குள் வேடிக்கை பார்க்கவென சுற்றிலும் சிலர் கூடி விட, அழகனின் கடையிலிருந்து கிளம்பிய உதயன் வேகவேகமாக கோவிலுக்குள் வந்தான்.

“ஆகா! பலிசொல்ல வந்துட்டா பரமேஸ்வரி, பெத்தவுங்க இல்லாத பிள்ளையோட சொத்துபத்தையும் புடுங்கிக்கிட்டு வீட்டைவிட்டு தூரத்திவிட்ட நீயெல்லாம், பாவம் பார்த்து வீடு கொடுத்த என்னை குறை சொல்ல தகுதியே இல்லை. செய்யுறதையும் செஞ்சிட்டு இப்போ ஊருக்கு முன்னாடி நல்லவா வேஷம் வேறயா? க்கும்” என முகத்தை நொடிந்தார் சுந்தரி.

“ஐயோ போதும் நிறுத்துங்களேன் இரண்டுபேரும், சுந்தரியக்கா நானா தான் வீட்டை விட்டு வந்தேன்” என உதயன் உரைத்ததை இருவரும் கண்டுகொள்வதாய் இல்லை.

“ஏன், நீ என்ன வீட்டையே எழுதியா கொடுத்துட்டியா? மாசமான வாடகை வாங்குற தானே, ஒன்னுமறியாத எம்பிள்ளைய ஏமாத்தி ஒன்னுக்கு இரண்டா கூட்டி தானே வாங்குற?” என பரமேஸ்வரி எகிற, “ஐயோ பெரியம்மா அப்படியெல்லாம் இல்லை, சரியா தான் வாடகை கொடுக்குறேன்” என உதய் இடையில் வந்தான்.

“நீ சும்மாயிரு கண்ணு” என உதய்யை பரமேஸ்வரி அதட்ட, “நீ பெத்த பிள்ளையாக்கும்? பிள்ளை மாதிரி நடத்தியிருந்தா அவன் ஏன் உங்களை விட்டு வந்து உங்களுக்கு எதிராவே தேர்தல்ல நிற்கப் போறான்? உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ?” என்றார் சுந்தரி.

உதயனால் இருவரையும் கட்டுப்படுத்த இயலாது தலையில் கை வைத்தபடி பரிதாபமாகப் பார்த்தான்.

“எங்களுக்கு எதிரா தேர்தல்ல நிற்க சொல்லி தூண்டி விட்டதே நீ தானடி. அது மட்டுமா ஒத்தப்பிள்ளை, பெத்தவங்க இல்லாதவன், வசதியானவன்னு வளச்சிடலாம்னு எதிர்பார்த்தியா? உன் தம்பி இல்லைன்னு உன் பொண்ணை வைச்சு உதயனை உறவாக்கிக்க நினைக்கிறியா? ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாங்க, அதுக்கு தான் சொத்தெல்லாம் நாங்க பாதுகாத்து வைச்சிருக்கோம் இனி உன் எண்ணம் நிறைவேறாதுடி” என பரமேஸ்வரி உரைக்க, “பெரியம்மா போதும் நிறுத்துங்க” என உதயன் பெரும் குரலில் கத்தினான்.

கேட்டுக்கொண்டிருந்த சுந்தரி அதிர்ந்து கலங்கினார். தங்கள் புறம் தவறே இல்லை எனும் போது நியமான கோபம் எழ, “என் பொண்ணு கறந்தப் பால விட சுத்தம்னு எனக்கு தெரியும், தரக்கெட்டத் தனமா பேசுற உங்கிட்டையும் இறங்கி வந்து பேசுனேன் பாரு என்னை அடிச்சிக்கணும்” என்ற சுந்தரி அற்பமான பார்வையோடு திரும்பி நடக்கத் தொடங்கினர்.

“என்ன பெரியம்மா இதெல்லாம்? கோவில்ல வைச்சி இப்படி சண்டை கட்டுறது உங்களுக்கு அழகா?” எனக் கேட்டான் உதய். அவரே அவனை வீட்டிற்கு அழைத்தார். அவர் அன்பில் நெகிழ்ந்தவன் அவர் மனம் நோகாதவாறு மறுத்தான்.

வளர்த்தவர் ஆகையால் உதயனின் பிடிவாதம் நன்கு அறிந்தவர். பிடிவாதம் என்பதை விட, எடுத்த முடிவில் நிலையாக நின்று, நினைத்த செயலை முடிப்பவன் என்பது தான் சரி.

காலை உணவு நேரம் அழகனின் கடை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் உதயன். காலை நேரமே வீதிகள் அனைத்தும் வெறிச்சோடியிருக்க, அழகனின் கடையிலும் அவனையும் மணியையும் தவிர யாருமில்லை. சைக்கிளில் வந்த கரிச்சட்டி சைக்கிளை நிறுத்திவிட்டு, ஆடியவாறே உள்ளே வந்தான்.

வந்தவன் அழகனின் முகத்திற்கு முன் கைகளை நீட்டி, “அண்ணே ஏதாவது வித்தியாசம் தெரியுதா?” என்றான்.

கணக்கு எழுதிக்கொண்டிருந்த அழகன், “இல்லையே, என்னடா?” என்றான்.

“நல்லா பாருங்கண்ணே…” என மூக்கில் இடிப்பதை போன்றே நீட்ட, முறைப்போடு நிமிர்ந்தான் அழகன்.

“இதுல இருந்து இப்போ நீ சொல்லவாரது என்ன…?” எனக் கேட்டுக்கொண்டே தன் முன்னிருந்த அவன் கைகளை முறிக்கினான்.

“ஐயோ விடுங்கண்ணே, நான் விருந்துக்குப் போகவேயில்லை. இல்லைண்ணே இல்லை, அதாவது நம்ம சாம்பாரை விட ருசியாவா அவனுங்க மட்டன் சால்னா வைச்சிடுவாங்ன்னு பார்க்கப் போனேன்” எனக் கதறினார்.

“தின்னுட்டு வந்தது மட்டுமில்லாம எனக்கே வாசம் காட்டுறையா? மணி அந்த கரண்டியை அடுப்புல வையிடா” என்றான்.

“அழகண்ணே விடுண்ணே, விடுண்ணே. அவனுங்க கிடாக்கறியே போடலை நாய்க்கறியை போட்டு ஊர ஏமாத்துறாங்க, நான் கண்டுபிடிச்சிட்டேன் நம்ம சாம்பாரு தான் ருஷி அண்ணே” எனக் கதற, கைகளை தளர்த்தியவன் அவன் முதுகில் சுளீரென அறையொன்றை வைத்தான்.

“போடா போய், வேலையைப் பாரு” என உதயன் காப்பாற்ற, “ஆளே இல்லாத கடையில யாருக்கு டீயாத்த?” என்ற கரிச்சட்டி, அழகன் எழுந்து வருவதைக் கண்டு உள்ளே ஓடிவிட்டான்.

“சாப்பிட வாடா மாப்பிள்ளை?” என்ற அழகன் உதயனை அழைத்தவாறு அருகே வர, வாசலில் சிவச்சந்திரன் பைக்கில் வந்து நின்றான்.

“என்ன மச்சான், ஊரே நம்ம விருந்துல தான் இருக்கு. நீ மட்டும் இங்க இருக்க? ஒருவேளை  சாப்பாட்டுக்கும் வழியில்லாம இருக்கிறவனுங்க எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு நீயும் வந்திடு” என்றான். உதயனை தான் சாடுகிறான் என அனைவருக்கும் புரிந்தது.

அழகனுக்கே கோபம் வந்தது, அருகில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் ஒரு செம்பை எடுத்து சிவாவின் முகத்தில் ஊற்றிவிடலாமா என அவன் நினைத்துக் கொண்டிருக்க, அதற்குள் சிவா சென்றிருந்தான்.

“போடா போ, முள்ளப்பன்றி மூக்கா. ஜெஸ்ட்ல தப்பிச்சிடான்” என்ற அழகனின் உதயனின் பக்கம் திரும்பி, “நீ சாப்பிட வாடா மாப்பிள்ளை” என அழைக்க அமைதியாக எழுந்து சென்றான்.

அடுத்த பக்கம்