மறவாதே இன்பக் கனவே 12 (2)

“ஆளு யாரும் வராததால இன்னைக்கு தோசை மட்டும் தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்ற அழகன் பரிமாற அமைதியாக உண்டான் உதயன்.

கிரமங்களில் தெருவிற்கு தெரு ரெஸ்ட்டாரன்ட் இருப்பதில்லை, ஊரிலே ஒன்று அல்லது இரண்டு சிறிய உணவகம் தான். அதிலும் அவர்கள் வைக்கும் பதார்த்தங்கள் மட்டுமே, தான் வேண்டியதை ஆடர் கொடுத்து காத்திருந்து உண்ணும் முறையெல்லாம் இல்லை. பணமிருந்தும் சமையல் தெரியாததால் உணவுக்கு சற்று திண்டாட்டம் தான். உதயனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அழகன் உரைப்பதற்கு முதல் காரணமும் உணவு தான்.

சிவச்சந்திரனின் தோப்பிற்கு சற்று தொலைவில் அவர்கள் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட மாடசாமி கோவில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் கிடாவெட்டி ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது அவர்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.

அதுவும் தேர்தல் நேரமென்றால் கோவிலில் ஊருக்கு ஒருநாள் விருந்தும், தோப்பில் சுத்தமான கள்ளும் என கட்சிவேட்டிகளுக்கு பத்துநாள் கொண்டாட்டமாக இருக்கும். ஐந்து வருடத்திற்கு முன் கடந்தமுறை ரெங்கநாதன் தேர்தலில் நின்ற போது உதயனுமே பந்தி பரிமாறிக் கொண்டிருந்தவன் தான்.

இதுவரை போட்டியாளர்கள் யாருமில்லாததால் ஒரு விருந்திற்கே ஒட்டுமொத்த வோட்டும் விழுந்தது. இம்முறை உதயனை போட்டியாக நினைத்தனர். ரெங்கநாதனால் உதயனை சாதாரணமா எண்ணிவிட முடியவில்லை.

விருந்தும் கொண்டாட்டங்களும் ஒருபுறமிருக்க, பண்ணைவீட்டிற்கு ராஜா மொத்த வாக்களர் பட்டியலையும் கொண்டு வர, சிவா அவர்களுக்கான பரிசுப்பொருளாக வெள்ளிக்குடங்களை கொண்டு வந்து இறங்கினான். நம்பிக்கையான பெரிய தலைகள் சிலர், ரெங்கநாதன் கொடுத்தனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை ரெங்கநாதன் அதிகமாக செலவு செய்து கொண்டிருக்க, ராஜா ஒருபுறம் கணக்கிட்டுக்கொள்ளவும் தவறவில்லை. இன்னும் பத்தே நாளில் தேர்தல் இருக்க முழுமூச்சாக தயாராகிக் கொண்டிருந்தனர்.

உதயன் உண்டு முடிக்கவும் அவனுக்கு எதிரே அழகன், மணி, கரிச்சட்டி மூன்றுபேரும் வந்தமர்ந்தனர்.

“டேய் மாப்பிள்ளை நாமளும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கணும்” என அழகன் ஆரம்பிக்க, “ஆமாண்ணே….” என்ற கரிச்சட்டி அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி விவரித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த உதயன் அவர்கள் அலப்பறையை பார்த்து லேசாக சிரிக்க, “மாப்பிள்ளை, கையில எவ்வளவு வைச்சிருக்க?” என்றான் அழகன். “எதுக்குடா…?” என்க, “அடேய் அவங்க வெள்ளிக்குடம் கொடுக்கும்போது விளக்கெண்ணைய் கிண்ணமாவது நாம கொடுக்க வேண்டாமா?” என்றான் அழகன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என மறுக்க, “எதுக்குடா? ஜெயிக்கிற எண்ணமில்லையா?” என்றான்.

“பணம், பொருள் கொடுக்குறதெல்லாம் தப்பு, இதுவே கதிரா இருந்தா இப்படி செய்வானா?” என உதயன் கேட்க, நொந்துபோய் தன் நெற்றியில் அடித்துக்கொண்டான் அழகன்.

“இவனை வைச்சி எப்படிடா தேர் இழுக்க? அடேய் கதிர இந்த ஊருல எல்லாருக்கும் நல்லாவே தெரியும், எல்லாருக்கும் நல்லது செஞ்சிருக்கான் ஆனால் உன் மூச்சியை எங்க நாலுபேரை தவிர யாருக்கும் தெரியாதுடா. இவன் வேலைக்கு ஆக மாட்டான், நீங்க ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கடா” என்றான். உதயனை ஓரளவிற்கு ஊர் மக்களுக்கு தெரியும்.

“அண்ணே எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என கரிச்சட்டி உற்ச்சாகமாக, “என்னுன்னு சொல்லு” என்றான் அழகன்.

“உதயன் அண்ணாவை ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரிய வைக்கணும் அவ்வளவு தானே? நாளைக்கே நம்ம கடையில அண்ணன் தலைமையிலே, இலவசமா பரோட்டா, இட்லி திங்கிற போட்டி நடத்தலாம். எல்லா பயலுகளும் கண்டிப்பா கலந்துக்க வருவாங்க அப்போ நாம வோட்டுக் கேட்கலாம்” என்றான் உற்ச்சாகமா.

பதிலுக்கு உசிலமணியும் “அப்போ நான் இப்போவே போய் ஆறுகிலோ கடலைப்பருப்பு, ஏழுகிலோ உளுந்து ஊறவைக்கிறேன்” என்றான்.

“அடேய் வீணாப் போனவங்களா, அவனை அடையாளப் படுத்துறேன்னு என் அட்ரெசஸ்ஸை குளோஸ் பண்ணப் பார்க்குறீங்களாடா” என அழகன் கத்தியவாறே எழுவதற்குள் பெஞ்சில் மறுபுறம் அமர்ந்திருந்த இருவரும் எழுந்து ஓடிவிட்டனர்.

சமதளமற்ற தளத்தில் இருந்த மரப்பலகை உசிலமணியும் கரிச்சட்டியும் திடீரென எழுந்ததில் எடை சமம் தவற, அழகன் நொடிப்பொழுதில் கீழே கவிழ்ந்தான். நொந்து போய் எழுந்து அமர்ந்த அழகன் தலையில் துண்டைப்போட உதயன் பார்த்து பார்த்து சிரித்தான்.

மறுநாள் காலை பேருந்து வர தாமதமாகிக் கொண்டிருங்க வேலைக்குச் செல்லும் பயணிகள் அனைவரும் கூட்டமாக நின்று வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தனர். கையில் டீ கிளாஸுடன் அழகனின் கடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த உதயனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.

எழுந்து அவர்கள் அருகில் சென்றவன் முதியவர்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தான். தந்தையையும் கதிரையும் வைத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் இந்த இடத்தில் ஒரு பேருந்து நிலையம் இருந்திருந்தால் முதியவர்கள், பயணிகள் அமர்வதற்கு எவ்வளவு வசதியாக இருக்கும் என பேச்சை ஆரம்பித்தான்.

ஊருக்குள் இருக்கும் பிரச்சனைகளை குறிப்பிட்டு அதை சரி செய்வதற்கான அவர்கள் கருத்தை கூறும்படியும் கேட்டு அவர்களையும் பேச வைத்தான்.

அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்கள் சலிப்புத் தட்டி விலகி ஓடிவிட மாட்டார்கள்! ஆகையால் தான் அவர்கள் கருத்தை கேட்டான். கடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அழகனுக்கு கையசைத்து சைகை காட்டினான்.

தன் கருத்தையும் ஒருவன் வந்து கேட்கிறான் என்ற ஆர்வத்தோடு அருகருகே வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்த சிறு கூட்டமும் உதயனை நோக்கி திரும்பியது. ஒரு டீக்கேனோடு வந்த அழகனும் கரிச்சட்டியும் அனைவரும் டீயும் வடையும் உதயனின் பெயர் சொல்லி இலவசமாகக் கொடுத்தனர். ஓசி டீயோடும் வடையோடும் அரசியல் பேசுவதென்றால் யாருக்கு தான் இனிக்காது!

அடுத்த பக்கம்