மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15

ந்த உறவிலும் அன்பு பாசம் என்பதற்கெல்லாம் முன்பாக இடம் பெற வேண்டிய முதல் விஷயம் ஒருவர் மேல் ஒருவருக்கான பரஸ்பர மரியாதை. நம்பிக்கையும் சரி ஏன் காதலே கூட அந்த மரியாதையிலிருந்தே பிறக்கிறது என்பது ஆராதனாவின் புரிதல்.

இவள் மீது அந்த அடிப்படை மரியாதை கூட பிஜுவுக்கு இல்லை எனும் போது இன்னும் இந்த உறவில் சிந்திக்க என்ன இருக்கிறது என்று தோன்றுகிறது அவளுக்கு.

திருமணத்துக்குப் பின் தம்பதிக்குள் வரும் முதல் சண்டை எப்போதுமே மிகப் பெரிதாக அவர்களை மனதளவில் தாக்கும் அதோடு குழப்பும்.

எந்த ஒரு நட்போ உறவோ நம்மை முகத்துக்கு நேராக அந்த அளவு காயப் படுத்தினால் உறவை முறித்துக் கொண்டு போய்விடுவோம் எனும் வகையில் பேசிவிட்ட வாழ்க்கைத் துணையை சட்டென ஏற்கவும் முடியாமல்,

துளி கூட பிரியவும் மனம் வராத அந்தச் சண்டை பெரும்பாலும் சுபமாக சுகமாக முடிந்து போய்விடும் என்றாலும், அனுபவிக்கும் ஆரம்ப நேரம் மிகப் பெரிய வாழ்க்கைப் ப்ரச்சனையில் இருப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தைக் கொடுக்கும்.

இங்கு ஆராதனா விஷயத்தில் அதுவும் சேர, அவளுக்கு ஏதோ பிஜுவோடு உள்ள வாழ்க்கையே முடிந்து போனதாக எண்ணுகிறது அறிவு. கடும் கோபம்.

ஆனால் காதல் கொண்ட அவள் மனமோ அவன் இவளை விலக்குவதையும் ஏற்க முடியாமல், அவனை விலக்கி நிறுத்தவும் இயலாமல், அடிபட்டு துடிக்கும் சுயத்தையும் தாங்க முடியாமல் அறிவின் கண்டு பிடிப்பை ஆமோதிக்கவும் வழி தெரியாமல் முழு மொத்தமாய் தவிக்கிறது. கோர வலி.

இந்த நிலையில் மறுநாள் காலை பிஜு அவன் அறையை திறக்கும் முன்பாகக் கூட கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள் ஆராதனா. வேறு எங்கு செல்லவென தெரியவில்லையே!

இதில் மாலை வரையும் பிஜுவிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. ஆனால் மாலை இவளது எண்ணை அழைத்தான் அவன்.

அதை ஏற்று பேசும் மனநிலையிலா இருக்கிறாள் இவள்?

இணைப்பை ஏற்கவில்லை இவள். அப்போது மட்டுமல்ல அடுத்து எப்போதுமே!

அவனும் ஐம்பது முறை தொடர்ந்து அழைத்தான் அறுபத்து ஏழு முறை விடாது கூப்பிட்டான் என்று இல்லாமல் ஒவ்வொரு முறையும் இரண்டு ரிங் கொடுத்துவிட்டு நிறுத்திக் கொண்டான்.

டாக்டராக வேலை செய்து கொண்டிருப்பவளை எத்தனை தடவை தொந்தரவு செய்வது என யோசிப்பானில்லையா?!

இதில் அன்று இரவு அவள் வீட்டுக்குச் செல்லவில்லை.

அவன் ஒன்றிரண்டு முறை அழைத்தவன் அடுத்து அழைக்கவும் இல்லை.

இவள் இரவு முழுவதும் இப்படி மருத்துவமனையில் தங்கிவிடும் நிலை அவ்வப் போது ஏற்படுவதுதானே! அப்படி ஒரு தினமாக நினைத்திருப்பான் அல்லவா?

காலை 11 மணி முதல் மாலை 3 வரை பிஜு அவனது வேலை நடக்கும் இடத்திற்குச் செல்வது வழக்கம். ஆக அதை மனதில் கொண்டு பிஜு அறியாமல் மறுநாள் காலை 11 மணி போல் வீட்டிற்குச் சென்று அவன் இல்லாத நேரம் குளித்து உடை மாற்றிவிட்டு வந்துவிட்டாள் ஆராதனா.

கிடைக்கும் நாற்காலி மேஜை, சின்ன பெஞ்ச் இதிலெல்லாம் மருத்துவமனையில் தூங்கி பழக்கம்தானே. அப்படியே இப்போது நாளை சமாளித்தாள்.

இதில் அன்றும் இரவும் அவள் வீட்டுக்குச் செல்லவில்லை.

இப்போது பிஜுவுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் அவள் வீட்டிற்கு வருவதை வேண்டும் என்றே தவிர்க்கிறாள் என.

அடுத்த நாளையும் இதே போல் மதியம் 1 மணி போல் வீட்டுக்கு சென்று குளித்து வந்து சமாளித்தாள் ராதி.

நேற்று சென்ற நேரத்திற்கே சென்றால் அபித் வழியாய் தகவல் தெரிந்து பிஜு அந்நேரம் வீட்டில் இருந்துவிட்டால் என்ன செய்வது? அதுதான் இந்த 1 மணித் திட்டம்.

இப்படியே எத்தனை நாள் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் முகத்தில் விழிப்பதாய் இல்லை இவள்.

ஆனாலும் அப்படியெல்லாம் அபித்திடம் கேட்டு இவளுக்காக காத்திருப்பானாமா இவளை இத்தனை கேவலமாய் நினைக்கும் பிஜு? இப்படி நினைக்கையில் அவளை மீறி அதுவாக கொட்டுகிறது சுடச் சுட கண்ணீர்.

அடுத்த பக்கம்

Advertisements