மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (4)

வளாகத்தைவிட்டு வெளியே வந்தவள், தன் திட்டப்படி வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு எதிர்திசையில் வண்ணாரப் பேட்டைப் பகுதியைப் பார்த்து ஸ்கூட்டியைத் திருப்ப,

அடுத்த முறையாய் வாயைத் திறந்தான் அவன். அதே காஞ்சு போன இரும்பு போல குரல்.

“ஏன் என்ன என்னாச்சு? இங்க என்ன?” என விசாரித்தான்.

“ஷாப்பிங் போகணும், அதான் ஸ்கூட்டில வந்தேன்” இவளும் அவனைப் போல எதையும் குரலில் காட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்தாள்.

அவனிடமிருந்து பதில் எதுவும் அடுத்து வரவில்லை.

கண்ணாடியில் கவனித்தால், தன் மொபைலில் எதையோ நோண்டத் துவங்கி இருந்தான் அவன்.

சற்று நேரம் அந்த நோண்டலில் கழிய, அடுத்து ஒரு பீங்க் பீங்க் இவள் மொபைலில்.

‘டேய் மூனு மில்லிமீட்டர் தூரத்தில் இருக்க காதுல பேசாம மூன் பக்கத்தில இருக்க சேட்டிலைட் வழியா தூது விடுறியே’ என மனதுக்குள் சின்னதாய் நொந்த படியே அங்கிருந்த பிரபல ஜவுளிக்கடை வளாக பார்க்கிங்கில் போய் வண்டியை நிறுத்தினாள் இவள்.

கடை நுழை வாசலை நோக்கி நடந்தபடியே மொபைலில் என்ன அனுப்பி இருக்கிறான் என எடுத்துப் பார்த்தால், நெட் ட்ரான்ஸ்ஃபர் முறையில் 20,000 ரூபாய் இவள் அக்கவ்ண்டிற்கு மாற்றி இருந்தான்.

உடன் நடந்து கொண்டிருந்த அவன் முகத்தை புரியாமல் இவள் பார்க்க,

இவளைப் பாராமலே “ஷாப்பிங் போறேன்னு சொன்ன” என வந்தது அவனது பதில்.

இன்னும் கண்ணோடு கண் பார்க்கவில்லை. ஆனால் கணவன் கடமையை நிறைவேற்றுகிறாராம்.

சிரிப்பு வந்தது இவளுக்கு.

“உங்க பட்ஜெட் ரொம்ப சின்னதா இருக்கே பாஸ்” வாய்விட்டே சொன்னாள். இவள் சொன்னது கிண்டலுக்குத்தான்.

ஆனால் அதில் நகைக்கடையும் ஜவுளிக்கடையுமாய் இரு பிரிவாய் இருக்கும் அந்தக் கட்டிட முகப்பை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவன்,

இப்போது பர்ஸை திறந்து தன் இரண்டு டெபிட்காடை எடுத்து அவளிடம் நீட்டினான்.

இவள் நகை எதுவும் வாங்க எண்ணுகிறாள் எனப் புரிந்துவிட்டான் போலும்.

இன்னுமே தழையத்தான் வருகிறது இவளுக்கு. விளையாடவும்தான்.

“கல்யாணம் செய்துட்டாலே, உங்களுடையது எல்லாம் என்னுடையதாகவே இருக்கிறது” என்றபடி உரிமையாய் அவன் கையிலிருந்த பர்ஸ் மற்றும் டெபிட்காட் இரண்டையுமே வாங்கிக் கொண்டவள்,

“அந்த என்னுடைய எல்லாவற்றையும் சுமந்து வரும் கடமை மட்டும் உங்களுடையதாகவே இருக்கிறது” என்றபடி கார்டை பர்ஸில் வைத்து திரும்ப அவன் கையிலேயே திணித்தாள்.

அவனை மீறி வருகின்ற சிரிப்பை அடக்கி வைக்கிறானோ?! ஒரு கணம் அப்படித்தான் தோன்றிவிட்டது இவளுக்கு.

ஓரக் கண்ணால் அவனை ஒரு நொடித்துளி ரசித்துக் கொண்டவள்,

துள்ளலாகவே கடைக்குள் நுழைந்தாள்.

பிஜுவின் அம்மா வீட்டிலும் புடவை கட்டும் பழக்கமுடையவர்.

வீட்டிற்கு வெகு எளிமையான காட்டன் புடவைகள், வெளியே செல்ல மற்ற அலங்கார வகை புடவைகள் என்பது அவர் வழக்கம் என்பது இவளுக்குத் தெரியும்.

இப்போது வரும் அவசரத்தில் காட்டன் புடவை இரண்டு மட்டுமாய் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் போலும், அதை கவனித்திருந்த இவள் இன்னுமாய் இரண்டு மூன்று புடவைகள் எடுத்துக் கொடுக்கலாம் எனதான் இன்று கடைக்கு வந்ததே!

கடையின் தரை தள முகப்பு பகுதியிலேயே நீள நீள வரிசையில் இடுப்புயர கம்பி ஸ்டாண்டில்  காட்டன் புடவைகள் அடுக்கடுக்காய் தொங்கவிடப் பட்டிருக்க,

இவள் சற்றாய் குனிந்து அந்த புடவைகளை ஆராய, சற்று நேரத்தில் புடவை யாருக்கென புரிந்துவிட்டது போலும் பிஜுவுக்கு.

“இப்ப எதுக்கு இது?” என்றான். அதே கோபமேறிய குரல்.

ஓ இவன் இன்னும் கொஞ்சமும் இறங்கி வரலையா?

இவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனை ஏன்? என்பது போல் திரும்பிப் பார்த்தாள் இவள்.

“அவங்களால நீ ஹர்ட் ஆகி இருக்க டைம் இப்படில்லாம் செய்தா, நீங்க என்ன செஞ்சாலும் உங்க பின்னால இப்படி கெஞ்சிகிட்டே வருவேன்னு சொல்ற போல இருக்கும், வேற எதாச்சும் டைம்  வாங்கு” அவனிடமிருந்து இப்படி ஒரு விளக்கம்.

சுள்ளென்றது இவளுக்கு.

முன்பும் இவளை ஐஸ் வைப்பதாக அவன் சொன்னதுண்டுதானே. அதுவும் நினைவில் வந்து குத்தியதுதான். ஆனாலும் கோபத்தில் இருக்கும் அவனிடம் கோபம் கொள்ள முடியவில்லை இவளால். முடிந்த மட்டும் மென்மையாக விசாரித்தாள்.

“ஐஸ் வைக்கிறேன்றீங்களா?” .

“இல்ல வைக்காதன்னு சொல்றேன்” இறுகலாய் வந்த அவனது பதில் இது.

அடுத்த பக்கம்

Advertisements