மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (2)

பிஜு அம்மா சொன்ன எல்லா காரியத்தைவிட, அவர் சொன்ன ‘சண்டை போட்டால் முன்பை விட அன்யோன்யமாய் சேர்ந்து கொள்வோம் என்பது புரிந்துவிடும்’ என்ற விஷயம் அவளை ரொம்பவே தொட்டு வைத்திருந்ததுதான் காரணம்.

இனி எப்போதுமே அவன்  முன்பு போல் அன்பும் ஆசையுமாய் இவளிடம் அன்யோன்யப்பட மாட்டானோ? நம்மப் போய் இப்படி நினைச்சுட்டாளே என அதை மனதில் வைத்துக் கொண்டே விலக்கத்தை காண்பிப்பானோ என்றெல்லாம் தவித்துப் போய் கிடந்தாளே அங்கு இந்த தொடுதல் விடியல் செய்திருந்தது.

அனுபவஸ்தரும் வயதில் பெரியவருமான மாமியார் சண்டைக்குப் பின் இன்னுமே அன்யோன்யமாய்த்தான் இருப்போம் எனச் சொல்லவும் வெகுவாகவே நிம்மதியாய் இருக்கிறது அவளுக்கு.

அப்படின்னா இந்த சண்டைல்லாம் இதுவும் கடந்து போகும் கேட்டகிரிதானா?

பாலூறும் வெண் பூக்கள் சில பன்னீர் சேர்க்கின்ற குழம்பி தவித்திருந்த இவள் மனவெளிகளில்.

ஆக அவளின் இயல்பான மகிழ்ச்சியோடே பதில் சொன்னாள்.

“நிஜமா இவ்ளவு எல்லாம் எனக்குத் தெரியாது அத்தை, ஆனா பொதுவா 22 வயசுல இருந்து 24 வயசுக்குள்ள முதல் ப்ரசவம் வச்சுகிறவங்களுக்கு, பின்னால எப்பவுமே உடம்பு அவ்ளவா படுத்றது இல்ல,

சிசேரியன் ஆனா கூட அடுத்து அவங்க உடம்பு பழைய ஆரோக்யத்தை அப்படியே ரீகெய்ன் செஞ்சுருது.

ஆனா முதல் பிரசவம் இதைவிட தள்ளிப் போக போக, அவங்க கரியர் ப்ரமோஷன்க்கு வேணும்னா அது நல்லதா இருக்குமே தவிர, அவங்க பிரசவம் மட்டும் கஷ்டமாகுறது இல்ல, டெலிவரிக்கு பிறகு உடம்பு பழைய ஆரோக்யத்துக்கு திரும்புறதே இல்ல,

ஓவர் வெயிட், ஹார்மோன் இம்பேலன்ஸ், பேக் பெய்ன், அது இதுன்னு எப்பவுமே பலவீனமான உடம்போட நோயாளி போல ஒரு வாழ்க்கை. டெலிவரி ஏஜ் இன்னும் பின்னால போகப் போக அதுக்கேத்த போல இன்னும் பெரிய இஷ்யூஸ்.

அதுக்கு முதல்ல குழந்தை வச்சுகிட்டு, கொஞ்சம் லேட்டானாலும் நல்ல ஹெல்த்தோடயே  என் கரியர பார்த்துக்கலாம்னுதான் அத்தை நான் நினைச்சுருக்கேன்”

விளக்கம் கேட்கும் நோயாளி குடும்பத்தினரிடம் சொல்லும் தொனியில் வெகு இயல்பாகவே சொல்லிவிட்டாள் ராதி.

ஆனால் “ஆனா இதெல்லாம் நாங்க இன்னும் பேசிக்கல அத்தை” எனும் போது பெண்மைக்குரிய எதோ ஒன்று அவள் குரலையும் பார்வையையும் கொஞ்சமாய் இறக்கிப் போட்டது.

“அதான் அவங்க நெக்ஸ்ட் இயர்னு நீங்க கேட்டதும்” என்பதற்கு மேல் இவள் எதையும் சொல்லவிலை.

பெரியவரும் எதையும் கேட்கவில்லை.

இவளது நாடியோடு இரு கன்னங்களையுமாய் பிடித்து சின்னதாய் ஆட்டியவர்,

“ரத்தி சொன்னாமா, ஆராவே டாக்டர்தான் அவளுக்கு எல்லாம் தெரியும், நீங்க போய் இதெல்லாம் பேசாதீங்கம்மான்னு, ஆனா எனக்குதான் மனசு கேட்கல” என்றவர்,

“பையனோ பொண்ணோ எதுனாலும் ஆரோக்யமா பிறந்து…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“ம்மா” என கடும் கண்டனத்துடன் உள்ளே வந்தான் பிஜு.

எதேச்சையாய் அறைக்குள் வந்தவனுக்கு அப்போதுதான் இங்கு நடக்கும் பேச்சு வார்த்தையே காதில் விழுந்திருக்கிறது.

“இதெல்லாம் அவட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்லமா” கண்டிப்பாகவே தொடர்ந்தவன்,

அதற்கு மேல் அம்மாவை மனைவியின் முன்பு பேச மனம் வராமல்,

அது அம்மாவுக்கு அவமானமாய் இருக்குமே, அதோடு, அவர் மனதில் மனைவியின் மேல் விலக்க உணர்வை, கசப்பை உண்டு செய்யும் ஒன்றுமாயும் ஆக முடியுமே!

ஆக தனியாய் பேசிக் கொள்ளலாம் என பேச்சை நிறுத்தினான்.

அதே நேரம் இவன் அம்மாவின் செயலை கண்டு கொள்ளாமல்விட்டது போல்,

ராதியின் மனதை அவர் கஷ்டப்படுத்தினால் அது இவனுக்கு ஒன்றும் இல்லை என இவன் இருந்து கொண்டது போல்,

ராதியை இந்தப் ப்ரச்சனையில் அவன் கைவிட்டது போல் இவனவளுக்குத் தோன்றிவிடக் கூடாதே,

ஆக “இதையெல்லாம் நினைச்சு மனச குழப்பிக்காத, நீ கிளம்பு” என்று அவளிடமும் சொல்லி வைத்தான். அவள் முகம் பார்க்காமல்தான்.

ராதிக்கு அவன் நோக்கம் சட்டென புரிகிறதுதான், அதோ பாலை பஞ்சம் கண்டிருந்த அவள் காதல்வெளிகளில் சர்க்கரை பீறிடல்கள்.

அதில் வெடித்து முளைத்துக் கொண்டு வருகிறது அவளது இயல்பான வால்தனங்கள்

இவ்ளவு அக்கறைய வச்சுகிட்டுதான் இவ்ளவு சீனாமா இந்த அபூர்வசிந்தாமணிக்கு?

பையனை படையலே போடும் அளவுக்கு ஃபார்முக்கு வந்திருந்தாள் அவள்.

ஆனால் சார் இன்னும் கோபத்துல இருக்காராமே! இவள் முகத்தைப் பார்க்கவில்லையே அவன்.

ஆக இவள் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவன் புரிந்து கொண்டது போல் இங்கு வருத்தப்படும்படியாய் எதுவும் நடந்துவிடவில்லை என்பதை மட்டும் சொல்லிவிடும் பொருட்டு

“அப்படில்லாம்…” என இவள் மறுப்பாய் சொல்லத் தொடங்க,

இவள் எதாவது சொல்ல, அவன் அம்மா எதாவது பேச என வாக்குவாதம் போல் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பது அவனுக்கு. அதோடு ஏற்கனவே அவள் மீது இருக்கும் கோபமும் சேர,

“நீ கிளம்புன்னு சொன்னேன்ல” என சீறினான் அவன்.

பொங்கு பால் தன் மேல் நீர் துளிகள் விழவும் அடங்குவது போல வற்றித்தான் போனது இவள் உற்சாகம். ஆனாலும் சற்று முன்வரை உடைந்து கிடந்ததே இவள் மனவெளி அப்படியான நிலை இப்போதும் இல்லை.

சரி அவன் அம்மாவிடம் பேசினாலேயே புரிந்து கொள்வான் என நிமிர்ந்தே பார்க்காமல் வெளியே வந்துவிட்டாள் இவள்.

அடுத்த பக்கம்

Advertisements