மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20

இவள் முகத்தைப் பார்த்த பிஜுவின் அம்மா,

“எல்லா நேரமும் பிசியா இருக்கமா அதான் இப்ப பேசிடலாம்னு நினச்சேன்” என விஷயத்துக்கு வந்தார்.

“பார்த்துட்டுதானமா இருக்கேன் நைட்டும் பகலுமா நீ ஓடிட்டு இருக்றத, இதுல போய் இப்ப குழந்தை வச்சுகோங்களேன்னு எல்லாம் பேசமாட்டேன்மா” சொல்லியபடியே இவளது கையில் வளையலை வைத்தார்.

“அளவு சரியா இருக்குதான்னு ஒருதடவ போட்டு காமியேன்” கேட்டுக் கொண்டார்.

“தேங்க்ஸ் அத்தை, அழகா இருக்கு, அளவும் சரியா இருக்கு” வளையலை கையில் அணிவித்தபடி இவள் அதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

அவர் மனதில் இருப்பதை பேசட்டும் என்பது இவளுக்கு.

“அடுத்த வருஷமாவது குழந்தை வச்சுக்கிற எண்ணம் இருக்குதான்னு கேட்டா அவன் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறான் ஆரா” எனத் துவங்கினார் அவர்.

“மூனு வருஷம் கழிச்சுதான் குழந்தைக்கு ட்ரைப் பண்றதுன்னா, அப்படி இப்படின்னு எப்படியும் முதல் ப்ரசவமே உனக்கு 27 வயசுலன்னு ஆகிடும்லமா அது நல்லதுதானா?” முதல் கவலையை வெளியிட்டார்.

“இப்பல்லாம் முப்பது முப்பத்ரெண்ட்ல கூட வச்சுக்கிறாங்கதான்” அதற்கு பதில் போல் அவரே சொல்லிக் கொண்டவர்,

“ஆனா என் வயசுல நான் பார்த்த அனுபவங்கள வச்சு சொல்றேன்மா, கல்யாணம் ஆகி முதல் ஆறு மாசம் கண்டிப்பா குழந்தை வேண்டாம்தான்.

கணவன் மனைவிக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் எதுல கோபம் வரும், எது பிடிக்கும்,

ரெண்டு பேருக்கும் எவ்ளவு கோபம் சண்டைனாலும் ஒவ்வொரு தடவையும் அடுத்து முன்னப் போல, ஏன் அதவிடவும் இன்னும் அன்யோன்யமாவே இரண்டு பேரும் சேர்ந்துக்கத்தான் செய்வோம் அப்படின்றதுலாம் அனுபவத்தில் புரிய அவ்ளவு நாளாவது வேணும்.

அதோட கல்யாண வாழ்க்கைன்றது புதுசு, கமிட்மென்டும் அதிகம், பையனும் பொண்ணும் அவங்க அவங்க வேலையோட சேர்த்து இதையும் கையாளப் பழகணுமே,

ஆஃபீஸ் மட்டும் போய்கிட்டு ஹாஸ்டல் மெஸ்னு பழகினவங்கள திடீர்னு ரெண்டையும் பாருன்னு சொல்றமே,

அதெல்லாம் இல்லாம, எடுத்ததும் குழந்தையும் உண்டாகி வச்சுகிட்டு, அதுக்கான உடல் ரீதியான பலவீனம், மன ரீதியான குழப்பம், ஏக்கம்னு எல்லாத்தோட,

பையனும் பொண்ணும் ஒருத்தர ஒருத்தர் புரியாம சண்டையும் போட்டுகிட்டு,

கூடவே ஆஃபீஸ் வேலையும் வீட்டு பொறுப்பையும் பார்க்கணும்னு சொன்னா அந்தப் பொண்ணு நிலமை நரகமாகிடும். அந்தப் பையனும்தான் எப்படி நல்லா இருக்க முடியும்?

இப்படி ஒரு சூழல்ல வயித்ல இருக்க குழந்தையும்தான் என்னதா வளரும்?

அதனால கண்டிப்பா இந்த காலத்துக்கு முதல்ல கொஞ்ச மாசம் குழந்தை உண்டாக வேண்டாம்னுதான் தெரியுது.

ஆனா கல்யாணமாகி ஆறு மாசம்லாம் தாண்டுறப்ப என்னதான் உனக்கும் பிஜுக்கும் இடையில் எல்லாம் நல்லா இருந்தாலும் மனசுல ஒரு வெறுமை தோணும்மா, அது இயற்கை.

குழந்தை வேணும்னு தோணும்னு நான் சொல்லல, கொஞ்சம் எம்ப்டியா இருக்கும்னுதான் சொல்றேன்.

அடிப்படையில் அந்த உறவு அதுக்கும் மேலான இன்னும் ஒரு நெருக்கத்தை பாண்டிங்கை எதிர்பார்க்கும்

அதே நேரம் குழந்தை வச்சுகிட்டீங்கன்னா அந்த எம்ப்டினெஸ் போயிடும். இப்பல்லாம் உள்ளதவிட அன்யோன்யம் நெருக்கம் நிறைவுன்னு எல்லாம் வரும். அதுதான் அந்த உறவுக்கு முழு பலமும் கூட.

அதைத்தான் குடும்பம்னு சொல்றோம். அது சராசரி மனிதர்கள் எல்லாருக்கும் தேவையானதாவும் இருக்கு.

அந்த வகையில் இந்த வருஷம் முடியவும் குழந்தைக்கு ட்ரைப் பண்ணுணீங்கன்னா நல்லா இருக்கும்னு படுதுமா”

தன் பேச்சை முடித்துவிட்டு மருமகளின் பதிலுக்காக அவளை ஆவலாகப் பார்த்தார் பிஜுவின் அம்மா.

அடுத்து இவள் எதுவும் சொல்லும் முன்,

“என்னமோ உங்களுக்காக சொல்ற மாதிரி சொல்றனேன்னு நினைக்காதமா எனக்காகவும்தான் சொல்றேன்”

“உன் வயசுல இருக்கப்ப எனக்கு இப்படில்லாம் தோணினது இல்ல, ஆனா இப்ப ரெண்டு மாசம் முன்ன என் ஃப்ரெண்ட் அம்புஜம் இறந்துட்டா, நல்லா பேசி சிரிச்சுட்டு தூங்கப் போனவதான்,

பெருசா எந்த ஹெல்த் கம்ப்ளெயின்டும் கிடையாது, கார்டியாக் அரெஸ்ட்ன்றாங்க, தூக்கத்துல போய்ட்டா, நேத்து அவளுக்கு, நாளைக்கு நமக்குன்னு தோணும்தானமா எனக்கு?

நான் வேலைக்கு போனவ இல்லமா, ஹவுஸ் வைஃப், என் பிள்ளைங்க ரெண்டு பேரும்தான் எனக்கு உலகமே!

ரத்தி பிள்ளைங்களப் பார்த்துட்டேன், ஒரு குடும்பமா வேரூன்றிட்டா, நான் போய்ட்டாலும் தனியா நிக்கோம்னு அவளுக்கு இருக்காதுன்னு இருக்குது.

அதே போல சின்னவன் பிள்ளையையும் பார்த்துட்டா அவன் குடும்பமாகிட்டான், நான் போனாலும் தனியா நிக்கோம்னு அவனுக்கு தோணாதுன்னு இருக்குது.

அதோட அவன குட்டி குழந்தையாப் பார்த்து, தூக்கி கொஞ்சில்லாம் எவ்ளவு நாளாச்சு, அந்தக் காலத்த திரும்ப பார்க்க அது என்னமோ ஒரு ஆசை.

பிள்ளைங்கள விடவும் கூட பேரப் பிள்ளைங்க மேல மனுஷ மனம் இன்னுமே இஷ்டப்படும்றதும் இயற்கை போல

ஆனா அதுக்காக நீயும் பிஜுவும் கஷ்டபடுன்னு கண்டிப்பா சொல்ல மாட்டேன்,

எங்க பக்கத்தையும் யோசிச்சுகோங்கன்னு சொல்றேன் அவ்ளவுதான்” இந்த முறை பேசி முடித்துவிட்ட திருப்தியுடன் மருமகளின் பதிலுக்காக ஆவலாகவே பார்த்தார் பிஜுவின் அம்மா.

முழு புன்னகை இருந்தது ராதியின் முகத்தில்.

அடுத்த பக்கம்

Advertisements