மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19(4)

அன்று இவள் வேலை செய்து கொண்டிருந்தது அப்டெமன் பிரிவு.

இவள் பார்த்துக் கொண்டிருந்த சில நோயாளிகளுக்கு அன்றுதான் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது,

ஒரு பெண்ணுக்கு நாளை காலை அறுவை சிகிச்சை இருக்கிறது,

இன்னொரு பெண்ணுக்கு கடும் வயிறுவலி காரணமாக இன்ஃபேஷன்ட் அனுமதி கொடுக்கப்பட்டு பரிசோதனைகள் சென்று கொண்டிருக்கின்றனவே தவிர எதுவும் முடிவாகவில்லை.

ஆக இவள் இங்கு தங்கியாக வேண்டிய சூழல் எதுவும் இல்லை.

அதோடு எதுவும் அவசரம் என்றால் பார்த்துக் கொள்ளச் சொல்லி நட்பு வட்டத்தைக் கேட்டுக் கொண்டால் சீக்கிரமும் கிளம்பிவிட முடியும்.

மாலை ஆறு முப்பதுக்கு இவள் ஷிப்ட் முடிந்தாலும், அந்த பரிசோதனைகள் சென்று கொண்டிருக்கும் பெண், பெண் என்பதைவிட சிறுமி எனச் சொல்ல வேண்டுமோ 13 வயதுதான் அவளுக்கு,

எந்த மருந்துக்கும் வலி அடங்காமல் துடித்துக் கொண்டிருக்க, 8 மணி வரைக்குமாய் அவள் விஷயமாக சுற்றி அலைந்தாள் இவள்.

இனி எந்த பரிசோதனையும் எமெர்ஜென்சி காரணம் தவிர காலைதான் செய்யப்படும் என்ற நிலையில், அந்த சிறு பெண்ணும் தூங்கிவிட,

ஆராதனா தான் யோசித்திருந்தபடி இரவு தங்க இருக்கும் உடன் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரையாய்  சந்தித்து இவளது நோயாளிகளைப் பற்றிச் சொல்லி ஒரு கவனம் வைத்துக் கொள்ளும்படி கேட்டுவிட்டு,

வீட்டுக்குக் கிளம்ப,

“கல்யாணம் செய்துட்டா சீக்கிரம் போய்டலாமோ? ஒழுங்கா படிப்பு வேலைனு இருக்க நாம சாப்டாம தூங்காம இங்க கிடக்றோம், காதல் கத்தரிக்கான்னு அவசரப் பட்டவள்லாம் ஜாலியா வீட்டுக்கு போய்டுறா” என காதில் விழுகிறது இவள் வகுப்பு மாணவி மிருதுளாவின் குரல்.

கல்லூரியில் சேர்ந்த காலத்தில் மிருதுளா இவளிடம் நன்றாகவே ஒட்டிக் கொண்டவள்தான்.

அப்போது எதோ ஒரு உரையாடலில் அவள் ஒரு அரசியல் கட்சியை சிலாகிக்க,

ஆராதனா யதார்த்தமாக “எந்த அரசியல்வாதி இங்க நியாயமா இருக்காங்க, எனக்கு தெரிஞ்சி நீ சொல்ற கட்சியெல்லாம் ஒரே ஊழல்தான்” என்க,

அதற்கு மிருதுளா அக்கட்சியின் சற்றான பிரபல பிரமுகர் ஒருவர் பெயரைச் சொல்லி,

“உனக்கு அவரத் தெரியுமா? நீ அவரப் பார்த்திருக்கியா? எப்படி எல்லாரும் ஊழல்வாதின்னு சொல்லுவ, அது என் சொந்தகாரராங்கும், நாங்கல்லாம் உனக்கு திருடங்க மாதிரியா தெரியுறோம்” என பெர்சனலாக எடுத்துக் கொள்ள,

அடுத்து “நான் யாரையும் பெர்சனலா சொல்லவே இல்ல” என இவள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இன்று வரை மிருதுளா இவளிடம் இப்படித்தான்.

பொதுவாக ஆராதனா “உண்மைய சொல்லணும்னா நான் ஒரு சோம்பேறி” என தன்னையே கலாய்த்துக் கொள்ளும் ரகம் என்றாலும், உண்மையில் தனக்கான வேலை மட்டுமல்ல அடுத்தவர் வேலையையும் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு உதவும் ஜீவன்,

அது உடன் இருக்கும் அனைவருக்கும் தெரியவும் செய்யும்,

ஆனால் இப்போது திருமணத்திற்குப் பின் ஒரு வகையில் மற்றவரை விட மூன்று நாள் விடுப்பு, ஒரு நாள் விழா அனுமதி, ஒரு நாள் ஷிப்ட் முடியவுமே கிளம்புதல் என ஒருவகையில் அதிகமாய்த்தான் போய் இருக்கிறது இவளது ஓய்வுகள்.

அந்த மூன்று நாள் விடுப்பெல்லாம் இவள் திருமணத்துடன் தொடர்புடையது இல்லை எனினும் மற்றவைக்கு காரணம் திருமண வாழ்வுதான்.

ஆக வெகுவாகவே குத்தப்பட்டாலும் எதுவும் சொல்லாமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டு குமுறும் உள்ளத்துடன் இவள் வெளியேறினாள்.

“நான் காதலிச்சனா உனக்கு தெரியுமா?” என எகிற முடியும்தான் இவள். ஆனால் இதிலெல்லாம் விளக்கம் கொடுக்க முனைந்தால் அது சொந்த வாழ்வை அடுத்தவர் முன்பு கடை பரப்பியதாகுமே தவிர வேறு என்னதைச் சாதித்துவிட முடியும் என்பது இவளுக்கு.

ஆக மௌனமாகவே வந்துவிட்டாள்.

வாய்க்குத்தானே மௌனம், ஆனால் ஏற்கனவே இழுபட்டுக் கொண்டிருக்கும் இதயத்துக்குள் இது என்னவெல்லாம் செய்யும்?

காந்தும் வாதை, சீறும் கோபம், தவிடு பொடியாக்கும் வலி, எதுவும் செய்ய முடியா இயலாமை!

இவள் இப்படியெல்லாம் வசை கேட்டு, இவளவனை பார்க்கவென மாமனார் அழைக்க வந்திருந்த காரில் அடித்து பிடித்து வீட்டிற்குச் செல்ல,

அங்கு பிஜு ஏற்கனவே சாப்பிட்டுத் தூங்கி இருந்தான்.

இத்தனைக்கும் வெகு தாமதமாக சென்றாள் என்றும் இல்லை. மணி 8.30 தான் ஆகி இருந்தது.

அவன் இழுத்து வைத்து அறைந்திருந்தான் என்றால் கூட இவளுக்கு இப்படி இருந்திருக்காதாய் இருக்கும்.

அடுத்த பக்கம்

Advertisements