மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 19(3)

அவனுமே இவளின் இந்த மனநிலையை சுட்டிக் காட்டத்தான் பேசிக் கொண்டிருக்கிறான் போலும்,

“நான் என்ன சொன்னாலும் அதை உண்மைனு உன்னால ஒத்துக்க முடியுமா ராதி?” நேரடியாகவே கேட்டான்.

“அப்படின்னா நீ குறஞ்ச பட்சம் நேத்து நைட்டாவது என்ட்ட உன்னை எந்த விஷயம் குடையுதுன்னு சொல்லி கேட்ருப்பல்ல?”

“ஏன்னா உன்ட்ட உண்மைய சொல்ல மாட்டேன்னு அப்படி ஒரு நம்பிக்கை”

“அதக் கூட என்னால ஏத்துக்க முடியுது, ஏன்னா சகுனம் பார்க்கிற ப்ரபாகர் அம்மாவ ஹேண்டில் செய்த போல உன்னையும் ஹேண்டில் செய்துடுவேன்னு நீ நினைக்கலாம்தான், அந்த அளவு உனக்கு என் வார்த்தையில் நம்பிக்கை வராம செய்தது எப்படிப் பார்த்தாலும் நான் தானே”

“ஆனா இப்ப சொன்ன பாரு மேரேஜ் ஏன் செய்தேன்னு குழப்பம்னு, ஆக இந்த விஷயத்துக்காக நீ ரெண்டு நாள் வீட்டுக்கு கூட வரலைனா, நான் உன்னை என்ன காரணத்துக்காக மேரேஜ் செய்திருப்பேன்னு நீ நினைச்சுருக்கணும்?”

“அவ்ளவு மோசமாவா ராதி உன்ன நான் நடத்திகிட்டு இருக்கேன்? உன்ன நான் மேரேஜ் செய்ததுக்கு ஒரு நல்ல காரணம் இருக்கும்னு கூடவா தோணல?”

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பேச்சில் இலகுத் தன்மை காணாமல் போன விதத்தில்தான் அவன் கோபத்தை எவ்வளவாய் அடக்கிக் கொண்டிருக்கிறான் என்பதே இவளுக்குப் புரிகிறது.

ஒரு கணம் என்ன சொல்லவெனத் தெரியவில்லை ராதிக்கு.

“உன் பக்கத்துல இருந்து பார்த்துக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக கல்யாணத்தை இப்பவே வச்சுப்போம்ன்னு சொன்னதெல்லாம் உனக்கு நாடகம்னு தோணிட்டு என்ன” முனுமுனுத்தபடியே இதற்குள் இவளைக் கடந்து போய்விட்டான் அவன்.

விக்கித்துப் போனாள் ஆராதனா.

அவசர அவசரமாய் இவள் உடை மாற்றி அவனைத் தேடிச் செல்லும் போது அவனது அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்திருந்தான்.

அடுத்து இவள் கிளம்பிச் சேர்க்கும் வரைக்குமே எத்தனையோ வகையில் அவனை தனிமையில் சந்தித்துவிட முயல அவனோ, அடுத்தவர் முன்னிலையில் இவளை  நேருக்கு நேராய் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிட்டான்.

வலித்தது. மனம் வெகுவாகவே வலித்தது இவளுக்கு.

தவிப்பும் ஏக்கமும் குற்ற உணர்ச்சியும் கூடவே தள்ளி வைக்கப்பட்டதுமான ஒரு உணர்வு.  இருட்டில் விளைந்த நெருஞ்சி வனமாய் மனம்.

ஆனால் என்ன செய்துவிட முடியும் இவள்?

வேறு வழியின்றி கிளம்பி ஸ்கூட்டி சாவியும் கையுமாய் வாசல் வரை வந்த போது, இவளது மாமனார்தான்

“எனக்கும் வெளிய போக வேண்டி இருக்குதுமா, நானே உன்னை கார்ல  ட்ராப் பண்றேன், நைட் நீ வர முன்ன பின்ன ஆகும்ன்றப்ப ஸ்கூட்டில திரும்பி வர்றாப்ல வேண்டாம், அப்ப நானோ இல்ல நம்ம ட்ரைவர் யாரோ பிக்கப் பண்ண வர்றோம்” என இவளை அழைத்து வந்தார்.

பிஜுவிடம் இருந்து அதற்கும் எந்த கருத்தும் வரவில்லை.

மருத்துவமனை வந்து சேர்ந்தாள் ராதி.

இதில் மதியம் சாப்பாடு நேரத்தில் திரும்பவும் ஃபோன்கால்.

“அபித்துக்கும் உனக்குமா சாப்பாடு அனுப்பி இருக்கேன் ஆரா, அபித்தையும் கொஞ்சம் பார்த்து சாப்ட சொல்லிடுமா” என இவளது மாமியாரின் அழைப்பு அது.

கொண்டு வருவது இவளது கணவனாய் இருக்குமோ என கொஞ்சமாய் ஆரம்பித்த ஏக்கம் ட்ரைவர்தான் அதை கொண்டு வந்தார் என அறியும் போது, ஏறத்தாழ கண்ணில் நீரை உண்டாக்கிவிட்டது.

பிஜுவுக்கு பிடித்த வெண்டைக்காய் பொரியல் மட்டுமல்ல, இவளுக்கு பிடித்த அவியலையுமே வைத்திருந்தார் பிஜுவின் அம்மா.

அதுவும் இவளது அம்மா செய்யும் வகையில் சற்றாய் மஞ்சள் தூள் போட்டு மாங்காவெல்லாம் போட்டு அம்சமாய் இருந்தது அது.

இவளது அம்மாவிடம் எப்போதாவது செய்முறை கேட்டிருப்பாராய் இருக்கும்.

ஆனால் இவளுக்கு சாப்பிடத்தான் முடியவில்லை.

மனதெல்லாம் வெறுமையும் அழுத்தமும் முட்டிக் கொண்டு நிற்கிறதே.

அவனுக்கு இவள் வேண்டாமாமே!

என்ன ஆனாலும் இரவு தூங்க அவன் இவளுடன் தனிமையில் வந்தாக வேண்டும்தானே! அப்போது எப்படியும் பேசி அவனை சமாதானம் செய்து விடுவது என ஒருவிதமாய் மனதை தேற்றிக் கொண்ட பின்தான் அந்த நாளை தள்ளவே முடிந்தது அவளால்.

அடுத்த பக்கம்

Advertisements