மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(4)

அடுத்து அந்த பெண்ணின் தந்தை அங்கிருந்து நகரவும், அந்தச் சிறு பெண்ணை இனி யாரெல்லாம் எவ்வளவு நேரத்திற்கு ஒருவர் சென்று பார்த்துக் கொள்வதென்றெல்லாம் இவர்கள் குழு ஆலோசிக்க துவங்க,

இப்போது இவளிடம் வந்த பிஜு “ஒரு டூ மினிட்ஸ்” என பொத்தம் பொதுவாய் சொல்லிவிட்டு இவள் கரம் பிடித்து நடக்கத் துவங்கினான்.

மற்றவருக்கு வேண்டுமானால் அது சாதரண நடை எனத் தோன்றுமாயிருக்கும் அவளுக்கு நன்றாகவே தெரிகிறது அவன் அவளை இழுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.

கட்டுக்கடங்கா ஆவல் அவனிடம்.

“அச்சோ என்ன நீங்க? என்ன ஓட்டித் தீக்கப் போறாங்க” என்றெல்லாம் இவள் அவனிடம் முனங்கிக் கொண்டிருந்தாலும் தரையில் பாதங்கள் பாவாமல் எங்கோ ஓரு ஏழாம் சொர்க்கத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்தாள் இவள்.

அந்த அறையை விட்டு வெளியே வந்து மஞ்சள் வெளிச்ச தாழ்வாரத்தில் சற்று தூரம் நடந்தால் எதேதோ உபகரணங்களின் உதிரி பாகங்களை போட்டு வைத்தது போல் ஒரு அறை இருக்கும்.

ஓய்வு வேண்டும் என்றால் அதில் கூட சில நேரம் இந்த மாணவக் கூட்டம் ஒன்றிரெண்டு பேர் உட்கார்ந்து தூங்குவதுண்டு.

ஆளற்ற அதற்குள் இழுத்தவன், முதல் காரியமாக இவள் இரு கைகளையும் பற்றி அவளின் உள்ளங்கைகளில் திரும்பத் திரும்ப இதழ் பதித்து பதித்து எடுத்தான்.

அடி வயிறு முதல் அவள் அங்கம் எங்கும் மின்சார ஒத்தடங்கள் உண்டாகித்தான் தொலைத்ததென்றாலும்,

அவன் செயல்களின் அடக்கப் பொருள் அவனுள் அடங்காமல் பொங்கிக் கொண்டிருக்கும் பெருமிதம் பாராட்டு நிறைவு என்பது இவளுக்கு வார்த்தையின்றி புரியும்தானே!

“என்ன சொல்லன்னு தெரியல வாலு, உன் வேலை இப்படித்தான் இருக்கும்னு தெரியும்தான், ஆனாலும் பக்கத்தில் இருந்து பார்க்கிறப்ப…” என்று தன் பாராட்டை வார்த்தையில் வடிக்க முயன்றவன், எந்த வார்த்தையும் கூட அவன் உணரும் அளவை சொல்லிவிட முடியாது என்பது போல்,

மீண்டும் அழுத்த அழுத்த முத்தங்களை தன் உள்ளத்தை உணர்த்த துணைக்கிழுத்தான்.

அடுத்து ஒற்றைக் கையால் இறுக்கமாய் அவளை அணைத்தும் கொண்டான்.

இவனுக்கா இவள் படிப்பை, இந்த மருத்துவப் பணியை பிடிக்காது?!!

முழு மொத்தமாகவே நிறைந்தும் தெளிந்தும் போகும்தானே இவள் மனது.

சற்று நேரம் இருவருமாய் அந்த நொடிகளின் அனைத்து பரிணாமங்களையும் இந்த வகையிலேயே சஞ்சரிக்க,

“என்னமோ டாக்டர் பொண்ண கல்யாணம் செய்துட்டு கஷ்டப்படுறதா சொன்னீங்க?” என மெல்ல கேட்டு வைத்தாள்.

“கஷ்டமா? இல்லையா பின்ன?” கேட்கும் போதே குழைந்த அவன் குரலிலும் மாறிய அணைப்பின் வண்ணத்திலும், அவள் காது மடல் தொடங்கி கன்னப் புறம் வரைக்கும் உராய்ந்தெழுந்த அவன் அதர ஸ்பரிசங்களிலிலும் ஸ்ருங்காரம் சந்தமற்ற சிந்துநதியாய் தலைகுப்புற சிந்தியது.

“சாப்பாட வாயில வச்சுட்டு சாப்டாதன்னா?” அதே குழைவில் அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே

“ஐயோ, எங்க வச்சு என்னப் பண்றீங்க?” என்றபடி அவனிடமிருந்து உருவிக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்திருந்தாள் இவள்.

உடையவன் செயலில் உள்ளுக்குள் உண்டாகித் திண்டாடும் தித்திக்கும் தீ மழை பதத்தை, சின்னதாய் ரசித்தும் முடிந்த வரை மறைத்தும் இவள் நடக்க,

“இதெல்லாம் அநியாயம் டாக்ரம்மா, கஷ்டப்படுறேன்னு கஷ்டப்பட்டு சொல்லிகிட்டு இருக்கேன், அதை முழுசா கூட சொல்லவிடலைனா எப்படி?” என சீண்டியபடி அவள் பின்னால் வந்தான் அவன்.

அப்போதுதான் மெல்லமாய் உறைக்க “இந்த கஷ்டத்தையாப்பா உங்க கசின் ரவிட்ட சொன்னீங்க?” என விஷயத்திற்கு வந்தாள் இவள். அவளையும் மீறி குரல் கீழே இறங்கியது.

“ஏய்” என்றபடி இப்போது இவளுக்கு இணையாக வந்து கொண்டவனிடம் சற்று முன் காணப்பட்ட எந்தக் குழைவும் இல்லை. அதற்காக கோபம் என்றால் அதுவும் இல்லை. ஒரு தீவிர பாவம் அவ்வளவே!

“என்னாச்சு? ரவிட்டயா? அவன்ட்ட டாக்டர் பொண்ண மேரேஜ் செய்துட்டு கஷ்டப்படுறேன்னு நான் சொன்னனா? எப்ப? அதெப்படி சொல்வேன்?” தன் மனதில் வந்த எல்லா கேள்விகளையும் இவளிடம் கேட்டுக் கொண்டே வந்தவன்,

“அவன் சும்மாவே எதையுமே குதர்க்கமா பார்க்கிற டைப், அதனால முடிஞ்ச வரைக்கும் அவன்ட்ட என்னனா என்னன்ற அளவோடதான நிறுத்திப்பேன் நான், இதுல எங்க போய் நான் இதெல்லாம் பேச?” என்றும் சொல்லியபடி யோசித்தான்.

அடுத்த பக்கம்

Advertisements