மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(3)

இருந்த அத்தனை நிலைக்கும் அவனிடம் இருந்து மெசேஜ் என்பதே அவளை ஆகாய அருவிக்குள் அள்ளி அமிழ்த்தி அத்தனை அழுத்தங்களையும் சங்கிலி பொடிபட சட்டென விடுவிக்கிறதென்றால்,

அவனின் செய்திகளைப் படிக்கப் படிக்க, இவளுள் இடப் பக்கம் வலப்பக்கம் இங்கிதமின்றி துள்ளிச் சுழல்கின்றது காதல் பொருநை.

சின்னதாய் ஒரு விம்மல், பெரிதாய் ஒரு துளி விழி நீர், சிலீர் என்பதாய் தேகம், சிந்திவிடுவதாய் ஒரு தீங்குழல் நாதம், பொதிகையாய் ஒரு ஆவல் போய்க் காண வேண்டும் தன்னவனை என்பதாய் செய்து கொள்கிறது இவள் எனும் உலகம்.

இதே நேரம் அபித்தும் அவன் பின்னால் இவளவனுமே உள்ளே வந்து நிற்கின்றனர் கதவை திறந்து கொண்டு.

வேறு வகையில் விஷயம் கேள்விப் பட்டிருப்பர் போலும்.

அடி உதடை அரை மில்லி மீட்டர் கடித்தபடி,

சலுகை வண்ணமும் சத்தமிழந்த மௌனச் சிணுங்கலும் சரியாய் கலந்த முகபாவத்தில்,

சரியப் போகும் விழி நீரை தன்னகத்தே கொண்டு சிரித்தபடி உருளும் கண்களுமாய், இவள் அவனைப் பார்த்த பார்வையில் பிஜுவுக்கு இவள் நிலை சொல்லாமலே புரிந்து போயிற்று.

இவளை கண்டும் காணாதது போல் வந்தவன், பிறர் கவனம் கவரா வண்ணம் இவள் கை விரல்களோடு விரல்கள் பின்னிக் கொண்டு இணைந்து நடக்க,

அவனது அருகாமை, அந்தக் கைத்தலம் பற்றுதல் இவைகளே இவளின் மொத்த உலகிற்கும் போதுமானதாய் இருந்தது.

இவளின் ஏதோ ஒன்றும் எல்லாமும் அவனுக்குள் புரிபட்டே இருப்பதாய் இவளுக்குள் தெளிவு.

அடுத்து எல்லாம் துரிதமாகவே நடந்தது.

ஐசியூவில் நின்று கொண்ண்டு அண்ணலும் அவனது அன்னமும் டூயட்டா பாட முடியும்?

அதோடு உடல்நிலை சுகமில்லாத உறவினர் வேறு.

அந்த ரவிக்கு தேவையானவைகளை செய்து அவன் நிலமை பொதுவார்டுக்கு மாற்றப்படும் அளவு நன்றாக இருக்கிறதென உறுதிப் படுத்திக் கொண்டு, அங்கு மாற்றபட்டான்.

அபித்தை வேறு வெகு அருகில் வைத்துக் கொண்டு என்ன சொல்லிக் கொள்ள முடியும் தம்பதிகள்.

“நீங்க வீட்டுக்கு கிளம்புங்கப்பா, ரொம்ப லேட் ஆகுது, நான் வர மானிங் ஆகிடும் போல” என இவள் வழி அனுப்ப முயல,

அவன் இவள் கன்னத்தில் சின்னதாய் ஒரு தட்டிவிட்டு ஒரு தலையசைப்புடன் வெளியே வந்துவிட்டான்.

அதன் பின்பு அதிகாலை 3 மணி போல் அந்த க்ரிப்டோ சிறுமியின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, நிலைவரம் பெற, ஓரளவுக்கு மூச்சு விட முடியும் போல் இருந்தது ராதிக்கு.

இனி இவள் வீடு திரும்பலாமாய் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் பிஜுவை அழைத்து தொந்தரவு செய்ய இவளுக்கு மனமில்லை.

முன்பெல்லாம் அழைப்பாள்தான். உடல் நலம் சரியில்லாத அவனை இப்போது இழுத்தடிக்க இவளுக்கு விருப்பமில்லை.

காலையில் சென்று கொள்ளலாம் என முடிவெடுத்தவள், ஒரு குட்டி ப்ரேக்கிற்காய் இவள் வெளியே வந்து, கான்டீனைப் பார்த்து நடந்தபடியே தன் மொபைலைக் குடைய,

திரும்பவுமாய் தன்னவன் செய்திகளை ஒரு முறைப் பார்த்துக் கொள்ள இவள் ஆசை கொள்ள, அங்கு அடுத்துமாய் அவனிடமிருந்து ஒன்றிரெண்டு குட்டிச் செய்திகள்.

அதில் ஒன்று ‘ஜெனரல் வார்ட் பக்கத்து வரெண்டாவில்தான் வெயிட் பண்றேன், எப்ப வர்றியோ வா’ என்பதும்.

செய்தி அனுப்பிய நேரம் இரவு 1 மணி.

ஓ மை காட். இன்னும் இங்கதான் இருப்பானோ?

இவள் அவசரமும் ஆவலுமாய் அங்கு போனால் அவன் வரெண்டாவில் இல்லை, ஆனால் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ரவியுடன் இருக்கிறான் போலும்.

கூடவே ஒரு சிறு குழு, இவளது வகுப்புக் கூட்டம்தான். அபித்தின் உறவினர் விபத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் பார்க்க வந்திருக்கலாம்.

பிஜுதான் ஆல் இன் ஆல் அண்ணாவாச்சே, அப்படியே அவனோடும் பேசிக் கொண்டிருக்கலாம்.

இவள் வேகத்தைக் குறைத்து சற்று நிதானப் படுத்திக் கொண்டு அங்கு போய்ச் சேர்ந்த நேரம், இவர்களிடமாய் வந்து நின்றார் அந்த க்ரிப்டோ சிறுமியின் அப்பா.

தன் மகளைப் பார்த்துவிட்டு வந்திருப்பார் போலும்.

இவளும் இவள் வகுப்பு மக்களும் நின்ற மொத்த கூட்டத்தைப் பார்த்தும் கை உயர்த்தி கும்பிட்டவர்

“நீங்கல்லாம் வயசுல சின்னவங்களா போய்ட்டீங்க, இல்லனா கால்ல விழுந்துடுவேன், நாங்கல்லாம் ஏழைங்க, எங்கயும் பெருசா காசு கொடுத்து பார்த்துக்க மாட்டோம், அப்படியே பார்க்க முடிஞ்சவங்கள கூட இப்படி உங்கள மாதிரி பார்த்துக்க மாட்டாங்க, என்னன்னு சொல்லி நன்றி சொல்லன்னு தெரியலையே” என்றார் முழு மொத்தமாய் நெகிழ்ந்து போய்.

“என் பிள்ளைக்கு மட்டும் எதாச்சும் ஆகி இருந்தா திரும்பி பிணமாத்தான் வீட்டுக்குப் போயிருப்பேன்” என தகப்பன் பாசத்தில் அரட்டிக் கொண்டவர்,

“எந்த நோய் நொடியும் தீண்டாம நீங்களும் உங்க வம்சமும் நூறாண்டுக்கு நல்லாருப்பீங்க” அடி வயிற்றிலிருந்து நிறைந்து போய் ஆசி கூறினார்.

அடுத்து எதிர்பாரா நொடியில் இவளது இரு கையையும் “தப்பா நினைக்காதமா” என்றபடி பற்றி தன் ஈரக் கண்ணில் ஒற்றிக் கொண்டவர்

“வீட்டுக்காரருக்கு வேற உடம்பு முடியலையாமே, பொம்பிளப் பிள்ளைனா வீட்டுக்குள்ள வெளிய வரதுல்லன்னு எத்தனை பிரச்சனைமா, அத்தனையும் சமாளிச்சுகிட்டு ராவு பகல் முழுக்கவும் பக்கத்துலயே நின்னு சாவோட சண்டை போட்டு துரத்திருக்கியே” என நன்றியாய் உருகியவர், அதற்கு மேல் என்ன சொல்லவென தெரியாமல்  திரும்பவும் கை கூப்பினார்.

அதே நேரம் இவளைத் தேடிக் கொண்டு அது வரைக்கும் இவளுக்கு உதவியாய் இருந்த நர்ஸ் வந்து சேர,

“என் பிள்ளய அவள பெத்தவ கூட இப்படி பார்த்தது இல்லைமா” என அவருக்கும் கை கூப்பி நன்றி கூறினார் அந்த தந்தை.

அவளையும் மீறி ராதியின் கண் அந்த ரவியின் முகத்தை நோக்கிச் சென்று வந்தது.

அவனும் இந்த நொடி இவளைத் தான் பார்த்தவன் இவள் பார்வை தாங்காமல் தவிர்த்துக் கொண்டான்.

நம் நாடுதான் உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடாம். சிறு குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரைக்கும் எல்லோருக்கும் இங்கே ஆபத்திருக்கிறது.

இருந்தும் இரவில் ஒரு பெண் வெளியே வருகிறாள் என்றால் அவள் எதற்கும் வளைந்து கொடுப்பவள் என்று அர்த்தம் இல்லை,

அவள் செய்கின்ற வேலை, அவளுக்கோ அவள் குடும்பத்துக்கோ இல்லை இந்த சமுதாயத்துக்கோ அவ்வளவு தேவையான ஒன்றாக இருக்குமென்ற புரிதல் இந்த ரவிக்கெல்லாம் வந்திருக்குமா என்று தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் பதில் கொடுத்துவிட்ட திருப்தி இவளுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements