மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(2)

இத்தனைக்கும் யாருக்கும் இந்தப் பெண் ஒருத்திதான் அவர்கள் பொறுப்பில் உள்ள நோயாளி என்றும் இல்லை.

அவரவர்கள் பொறுப்பில் இருந்த நோயாளிகள் அனைவரையும் பார்த்துக் கொண்டும், இதையும் செய்து கொண்டும் இருந்தனர் அவர்கள்.

கூடவே நேரம் தவறாமல் அத்தனை பரிசோதனை, அதற்கேற்ற வைத்தியம் என ராதிக்கு உட்கார கூட நேரமில்லை. பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.

இதில் ஒரு விபத்தில் வயிற்றுப் பகுதியில் காயம்பட்டு, அதன் நிமித்தம் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்த ஒரு நோயாளி சற்று தள்ளி இருந்த படுக்கையில் இருந்தவர், இப்போது விழித்து கூப்பிட,

ராதி அவரிடமாக போய் நின்றாள்.

கையிலிருந்த ரத்தக் கறைபட்ட க்ளவ்ஸை இவள் கழற்றுவதை அருவருப்பாய் பார்த்திருந்த அவர், இவள் முக மாஸ்க்கை கழற்றிவிடவும் ஒரு ஆராய்தலாய் பார்க்கத் துவங்கி இருந்தார்.

இதையெல்லாம் சட்டை செய்து கொண்டிருக்கவா இவளுக்கு நேரம், அவரது கேஸ் சீட் பார்த்து, மற்றவைகளையும் கவனித்து

“சார் உங்களுக்கு பெருசா எதுவும் இல்ல, பயப்பட வேண்டாம், கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்க்குத்தான் இங்க வச்சுருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் வார்டுக்கு கொண்டு போய்டுவாங்க” என உண்மை நிலையை ஆறுதலாகவேச் சொல்ல,

அவரோ இவளையே பார்த்துக் கொண்டிருந்தவர் “நீ பிஜுவோட வீட்டுக்காரிதானே! உங்க கல்யாணத்துக்கு கூட நான் வந்தேன், என் பேர் ரவி, பிஜுவுக்கு ஒன்னுவிட்ட மாமா பையன்” என அறிமுகப் படுத்திக் கொண்டார்.

சட்டென இவளுக்குப் புரிந்து போயிற்று எந்த ரவி என. முகமெல்லாம் பார்க்கவில்லை என்றாலும் குரல் இன்னும் மறக்கவே இல்லையே!

அவளை மீறி சுர் என சுட்டதுதான். ஆனால் காயம்பட்டுக் கிடப்பவரிடம் என்னதை காட்டிக் கொள்ள?

“ஓ அப்படியா? வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சா? நம்பர் இருந்தா தாங்க நான் கூப்ட்டு சொல்லிடுறேன்” என அடுத்து ஆக வேண்டிய காரியத்தை இவள் கவனித்தாள்.

அபித்துக்குக் கூட இன்னும் இந்த ரவி இங்கு இருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை என்பது புரிய இவள் அபித்துக்கு அழைக்க மொபைலை எடுக்க கிளம்ப,

அந்த ரவி அதோடு விட்டிருந்தால் நலமாய் போயிருக்கும்.

ஆனால் வளர்த்து வைத்த வாய்க் கொழுப்பு என்று ஒன்று இருக்கிறதே! எப்போதும் பேசிப் பழகியது எல்லா இடத்திலும் வாயில் வந்து நிற்கும்தானே!

“இந்த நர்ஸ்மார்ங்களெல்லாம் எங்க? ஒருத்தியையும் காணோம்? எல்லாவளும் டாக்டர் பின்னால போய்ட்டாள்ங்களோ?” எனக் கேட்டான்.

அவ்வளவுதான் அதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டிருப்பது நியாயமாகப் படவில்லை இவளுக்கு.

இதழை இழுத்து சிரிப்பு என பெயர் செய்து கொண்டாள் இவள்.

“அதாவது அண்ணா பாருங்க நீங்க பத்தரை மாத்து தங்கம், ஆனா அவங்க பாருங்க பத்து மணிக்கு அப்புறம் படி தாண்டி வெளிய வர்ற பத்தினி இல்லா கூட்டம். அப்படி இருக்க அவங்க உங்க பக்கதுல வரலாங்களா?” என்றவள்

பின் முகம் இறுக, “பத்து மணிக்கு மேல வெளிய வர்றவல்லாம் பத்தினி இல்லைனு அவங்கட்ட கைய நீட்டிடாதீங்க, கைல கிடைக்கத வெட்டிவிட்டுட்டுப் போய்டப் போறாங்க” என்றவள்

அவன் முழித்த வகையில் “ஆக்சிஜன் ட்யூப்பை சொன்னேன்” என்று வேற பதில் கொடுத்துவிட்டு

“உடம்பை பத்ரமா பார்த்துகோங்க” என்றும் ஒருவிதமாய் சொல்லிவிட்டு

“நான் இப்ப அபித்ட்ட சொல்லி உங்க வீட்டுக்கு தகவல் சொல்ல சொல்லிடுறேன் அண்ணா” என இதை வெகு தன்மையாக வேறு கூறிவிட்டு போய் மொபைலை எடுத்தாள்.

ஒரு புறம் இந்த ரவி நிமித்தம் கோபம் சுருசுருத்துக் கொண்டிருந்தாலும், ஒரு வகையில் நிம்மதிதான்.

எப்படி இருந்தாலும் நம் சுபாவத்தோடு ஒத்துப் போகிறவர்கள்தானே நமக்கு நட்பாய் இருக்க முடியும், எப்படி இந்த ரவியையெல்லாம் பிஜு நண்பனாய் வைத்திருக்கிறான் என உழன்று கொண்டிருந்த ஒன்று காணாமல் போயிருந்தது.

உறவினர் என்ற முறையில் பழகித்தானே ஆக வேண்டி இருந்திருக்கும்.

ஆனாலும் இவன்ட்டல்லாம் போய் டாக்டர் பொண்ண கல்யாணம் செய்து கஷ்டப்படுறேன்னு இந்த பிஜு சொல்லிகிட்டு இருந்தான்.

போடா அபூர்வசிந்தமாணி அப்றம் என்னத்த லவ் பண்ண?!!!

முன்போல் கடும் கோபமெல்லாம் பிஜு மேல் இல்லை எனினும் ஒரு உறுத்தல் உள் மனதில் இருக்கிறதுதான்.

வெறுப்பு என இல்லாவிட்டாலும் மருத்துவம் அவனுக்குப் பிடிக்காத தொழில்தான் போலும். ஒரு வேளை இப்படி ரத்தமும் கழிவு என எதிலும் எல்லாவற்றிலும் கை வைக்க வேண்டி இருப்பது அவனுக்கு மனதுக்கு ஒவ்வவில்லையோ?

எல்லோருக்கும் எல்லாமும் பிடிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லையே!. இவளை அவனுக்குப் பிடித்திருக்கிறதே அது போதும்.

மனம் அடங்கியும் கொண்டதுதான் தன்னவன் காதலுக்குள்ளும்.

ஆனாலும் அவன் இன்னும் இவட்ட உர் பட்லராதான் முறச்சுகிட்டு இருக்கான்!!

எப்படா பேசுவ?!

இப்படி எல்லா மனநிலையோடும் இவள் அபித்துக்கு அழைக்கவென மொபைலை எடுக்க, அப்போதுதான் பிஜுவின் மெசேஜ் காணக் கிடைத்தது.

அடுத்த பக்கம்

Advertisements