மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 9 (3)

அத்தை வீட்டிலிருந்த தன் அறையில் சுருண்டு கிடந்தவளுக்கு மீண்டுமாய் விழிப்பு தட்டியதே கடும் வயிற்று வலியில்தான்.

மாதம் மாதம் வரும் தொல்லையான ஆசீர்வாதம் வந்திருந்தது.

இப்போது இருந்த மன அழுத்தம் காரணமாகவோ என்னவோ சில பல நாட்கள் முன்பே வந்து நிற்கிறது. நாள் தவறி வருவதால் அதற்கேற்ப வலியும் கொடும் தீவிரமாக இருக்கிறது.

எல்லா மாதங்களும் இது இவளுக்கு வலிக்க வலிக்கத்தான் வரும் என்று இல்லை…  ஆனால் வலிக்க வந்த மாதங்களில் இவளை துவம்சம் செய்துவிடும்.

அதன் முதல்கட்ட வேலையாக குடல் அறுந்து வாயில் வருவது போல் உணர்வு… இதோ பதறி அடித்து  குளியலறையை நோக்கி ஓடினாள் இவள்.

மதியம் சாப்பிட்டதெல்லாம் வாய் வழியாய் வெளி நடப்பு செய்யத் துவங்க… அதே நேரம் குனிந்திருந்த இவளது நெற்றியை பின் இருந்து பிடிக்கிறது ஒரு கரம்.

காருண்ய ஸ்பரிசம். அரவணைப்பு சுரபி.

மொத்த உலகிலும் தன்னந்தனியாய் நிற்பது போல் இருக்கும் இவளது மன நிலைக்கும், சாய்ந்து வரும் அந்த சன்ன இருளுக்கும், இந்த உபாதை வலி உடல் நிலைக்கும் அப்படியே திரும்பி அந்த கரத்திற்கான தோளில் புதைந்து சுருளத் தள்ளியது அவள் மனம்.

“அம்மா” என்றபடி திரும்பினாள் இவள்.

ஆம் தன் அம்மா வந்திருப்பதாகத்தான் நினைத்தாள் பெண்.  ஆனால் கனிவும் தன்மையுமாய் நின்றிருந்த அவன் இப்போது இவள் பார்வைக்கு கிடைக்கிறான். பிஜு.

இவன் எங்கே இங்கு வந்தான்? என எகிற மட்டுமல்ல ஏதுவாக நினைக்க கூட முடியாமல்  சின்னதாய் நடுங்கிக் கொண்டிருந்த இவள் மென் தேகம் உந்த…

கட்டாயமாய் தன்னை கட்டி இழுத்து கட்டிலுக்கு செல்லத்தான் முயன்றாள் ராதி. வார்த்தை என்று எதுவும் பேசிவிடவில்லை அவள்.

அதற்காக வைத்த முதல் எட்டிலேயே அவளது கால் சற்றாய் வழுக்க… அனிச்சை செயலாய் குனிந்தவள் கண்ணில் படுகிறது அவளது உடையில் பட்டிருந்த உதிரத் தடங்கள்.

அவள் சறுக்க தொடங்கவும் “ஹேய் பார்த்து” என்றபடி அவனும்தானே இவளைப் பிடிக்க முயன்றான்.

அதில் அவள் பார்வை சென்ற இடத்துக்கு அவனது பார்வையும் சென்றிருக்கும்தானே… இவள் கண்டதை அவனும் கண்டிருப்பான்தானே!

அவள் ஒரு மருத்துவ மாணவி, அதோடு இது ஒரு இயல்பான இயற்கையான விஷயம் என பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும் என்ற புரிதல் உள்ளவள் என்றாலும்

இப்படி நேருக்கு நேராய் ஒரு ஆணின் பார்வைக்கு உட்படுவது எப்படி இருக்கிறதாம்?

அவள் வசமில்லாத உடலாலும் மனதாலும் நிகழ்ந்துவிட்டதை முழுதாய் உள்வாங்கி அசூசையை அதன் முழு அளவில் அனுபவிக்கும் முன்னாக கூட

“அக்காவுக்கு முன்னல்லாம் மாசம் மாசம் ஃபீவர் வந்துடும்… கூடவே வாமிட்டும் ஆகும்… இந்த டைம்ல அக்கா ரொம்ப வீக்கா இருப்பா…நாமதான் நல்லா பார்த்துக்கனும், ஹார்மோன்ஸ்னால சும்மா சும்மா கூட அவளுக்கு எரிச்சல் ஆகும்… நீதான் அட்ஜஸ்ட் செய்து போகனும்னு அம்மா சின்னதில் இருந்தே சொல்லி கொடுத்ருக்காங்க” என வெகு வெகு இயல்பாய் வந்தன வார்த்தைகள் அவனிடமிருந்து.

அவள் மனம் உணர்ந்தவனாய், இதற்காக அவள் கூனிக் குறுக கூடாதென,

‘எனக்கும் இது இயற்கை என்று தெரியும், அதோடு அதன் வேதனையும் புரியும், என் சகோதரியை பார்க்கும் விகாரமற்ற மனப் பான்மையில் மட்டுமே இதைக் காண்கிறேன் என இப்படியாய் உணர்த்துகிறான் என்பது வரை அவளிருக்கும் இந்த நிலையிலும் புரிகின்றது ராதிக்கு.

ஏற்கனவே வெறுமையின் வியாப்பிப்பினால், தனிமையின் தாராளத்தால் இரும்புக் குண்டாய் கனத்திருந்த அவளது மனதில் இது ஏக ஏராளமாய் செய்விக்கிறது ஏதோ ஒரு வேதியல் வினை.

திருமணத்தில் அவன் வெறுமையாய் வரவில்லை. அவனது அக்கா, அம்மா ஏன் அப்பா, தாத்தா பாட்டி உறவுகள் நட்புகள் என எத்தனையோ பேர் அவனுக்குள் உண்டாக்கி இருக்கும் ஒரு உலகத்தை கொண்டு வருகிறான் என்று ஒரு உணர்வு நிலை. உறவுகளின் உலகம்!

அவளை அப்படியே கைப் பற்றி அருகிலிருந்த பாத் டப் விளிம்புச் சுவரில் அமர வைத்த அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அவள்.

அவள் இலகுவாக உணர வேண்டும் என்பதற்காகவாவது அப்படியே அவன் வெளியே போய்விடுவான் என்ற அவளது நம்பிக்கையை நாசமாக்கி, அவசர அவசரமாய் சென்று அவளுக்கு மாற்று உடைகள் எடுத்து வந்தான் அவன்.

“சமாளிச்சுப்பல்ல…?” அவனது அடுத்த விசாரிப்புக்கு எதுவுமற்ற பார்வையோடு சம்மதமாய் தலையசைத்து வைத்தாள் அவள்.

“இல்லனா அத்தைய வரச் சொல்லவா?” மறுபடியும் அவன் கேட்க, அவன் விழிகளில் கொழுவி நின்ற தன் கண்களை மறுப்பாய் இவள் அசைக்க, குளியலறை கதவை சாத்தி வைத்துவிட்டு சென்றான் அவன்.

சென்றவன் அவள் படுத்திருந்த மெத்தையின் விரிப்பை எடுத்துவிட்டு வாட்ரோபிலிருந்து தேடி எடுத்து மற்றுமொரு விரிப்பை விரிப்பது,

இன்னுமே அசையாமல் அமர்ந்திருந்த அவளுக்கு சின்னதாய் திறந்து நின்ற கதவின் வழியாய் காணக் கிடைக்கிறது.

அதிலும் கரை பட்டிருக்குமாயிருக்கும். மாற்றி வைக்கிறான் எனப் புரிகிறது.

அவளது அம்மா கூட இந்த காரியங்களை இவளுக்குச் செய்தால் தர்மசங்கடப் படுவாள் இவள்.

அதை சற்றும் சங்கோஜமின்றி, வெறுப்பு அருவருப்பு எதுவுமின்றி, பாலுணர்வு சார்ந்த பார்வையோ கிண்டலோ ஏதுமின்றி, ஏன் காதலைக் கூட காட்டாமல், தனக்கான வேலையைச் செய்வது போல் அத்தனை சாதாரணமாய் அவன்  செய்து கொண்டு நின்ற விதத்தில்

அடித்துப் புரள்கிறது அவள் அடிவயிற்றில் ஒரு அன்யோன்ய அருவி.

எழுந்து சென்று கதவைத் தாழிட்டவள், இதயத்தில் அவனுக்கும் அவளுக்கும் இடையிலிருந்த கோட்டினை எப்போதோ தொலைத்திருந்தாள்.

அடுத்த பக்கம்

Advertisements