மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 9 (2)

கோபப்படுவதா அல்லது பயப்படுவதா என்றே தெரியாத நிலை அவளுக்கு.

ட்ரெஸ் செலக்க்ஷனில் எப்போதுமே இவளுக்கு ஈடுபாடு கிடையாது என்பதால் அவளது நகை உடை தேர்வெல்லாம் பொதுவாக அம்மா செய்வதுதான்.

அதுவல்ல இப்போது விஷயம். இவள் இங்கு எப்படி எனக்கு திருமணம் நிச்சயம் செய்வீர்கள் என கோபப்பட்டுக் கொண்டிருக்க… எந்த விளக்கமும் சொல்லாமல் அவர்கள் நிச்சயவிழா ஏற்பாட்டை கவனிக்க சென்றால் என்ன அர்த்தம்?

அத்தனை தூரம், அதுவும் திருமணம் போன்ற மிக முக்கிய விஷயத்தில், இவளது உணர்வுகளை அலட்சியப்படுத்தும் மனம் அவளது பெற்றோருக்கு கிடையவே கிடையாது. பின் ஏன் இப்படி?

ஏதோ விஷயத்தை இவளிடம் எப்படி சொல்ல என தடுமாறுகிறார்களோ என்று பரிதவிப்பாய் தோன்றுகிறது இவளுக்கு. பயந்தாள்.

அப்படி என்ன விஷயமாக இருக்கும்? எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறியதாக இருக்காது.

இப்போது மனம் பிஜு மீதிருந்த கோபத்தையெல்லாம் தாண்டி சட்டென அவனைத் தேடுகிறது.

“அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ? பேசிப் பார்க்கலாமா?’ என்றெல்லாம் ஒரு பக்கம் பசித்துப் பாய்கிறது என்றால்…

அடுத்தபுறம் இவள் கோபத்தில் இருக்கிறாள் எனத் தெரிந்தும் இத்தனை நேரம் வரை இவளை மொபைலில் கூட தொடர்பு கொள்ள முயலாத அவனை எந்த அடிப்படையில் அழைக்க என்றும் இறுகியது.

தன் அறையில் படுத்து தலைவலி வரும் வரை யோசித்தவள்…

ஆதிக்கிற்கு தெரியாமல் எந்த விஷயமும் இராது என்ற உறுதியில் தன் அண்ணனைப் பார்த்துவர கிளம்பிவிட்டாள்.

‘கண்டிப்பா இவளோட நிலைய புரிஞ்சுகிட்டு எல்லாத்தையும் அவன் சொல்லவும் செய்வான்’ என்ற நம்பிக்கை.

அன்றிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்ததால்தான் ஆதிக் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை என அறிந்திருந்ததால்,

இந்நேரம் அவன் அன்றிலின் அம்மா வீட்டிற்கு திரும்பி இருப்பான் என்ற புரிதலில் நேராக கிளம்பி அங்குதான் சென்றாள்.

அந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் பிஜுவினுடையது என்ற நினைவு ஏக்கத்தையும் எரிச்சலையும் இவளுக்குள் ஒருங்கே கிளப்ப… இவள் தன் அண்ணியின் பிறந்த வீட்டிற்குள் நுழைந்தால்…

இவளுக்கும் முன்பாக அங்கே சென்று உட்கார்ந்திருந்தது இவளது பெற்றோர். எல்லோரும் இவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

போர்டிகோவிற்கு அடுத்த வெராந்தவில் இவள் செருப்புகளை களைந்து கொண்டிருந்த நேரமே இவளது காதில் விழுகிறது ஆதிக்கின் பேச்சு.

“அதில்ல மாமா…  நீங்க இப்ப நான் போற போஸ்டிங் ரொம்ப ரிஸ்க்… திரும்பி வந்தாதான் நிஜம்… அதனாலதான் இப்பவே உனக்கு கல்யாண ஏற்பாடு செய்றேன்னு சொன்னா ஆராக்கு அடுத்து எப்படி நிம்மதியா இருக்க முடியும்?

அதுவும் நீங்க திரும்பி வர ரெண்டு வருஷம் ஆகும்ன்றீங்க… அது வரைக்கும் நீங்களும் அத்தையும் யார் கூடவும் தொடர்பிலயும் இருக்க முடியாதுன்றீங்க…

அப்படின்னா ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு என்னாச்சோன்னு ஆரா பயந்துகிட்டே இருப்பால்ல… அதான் அத்தை அவட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்றாங்க…”

இவளது அண்ணன் ஆதிக் சொல்ல சொல்ல விஷயம் முழுவதுமே புரிந்து போனது ஆராதனாவுக்கு.

“அதுக்காக ஆராட்ட விஷயத்த சொல்லாமலேயா கல்யாணம் செய்ய முடியும்? அவ கேள்வி கேட்பாதானே? அவள கம்பல் செய்றது போல இருக்காதா?

மெடிசின் படிக்கிற பொண்ணு death is part of lifeனு யோசிக்கிற அளவு தைரியமா இருக்க வேண்டாமா?”

இவளது அப்பா இப்போது பதில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு அன்றிலோ “அது சரிதான் சித்தப்பா… ஆனா விஷயத்தை நீங்க அப்படியே சொல்லாதீங்க… இந்த போஸ்டிங்ல டூ இயர்ஸ் உன்ட்ட பேச முடியாதுமா… அப்படி நாங்க அங்க இருக்கப்ப நீ கீழ விழுந்த மாதிரி கனவு வந்தா கூட எங்களுக்கு மனசு பதறிடும்…

இதே இது உனக்கு மேரேஜ் ஆகிட்டுன்னா, மாப்ள இருக்கார் பார்த்துப்பார்னு நிம்மதியா இருப்போமேன்னு யோசிச்சோம்… பிஜு நம்ம ஆதிக்குக்கு நல்லா தெரிஞ்ச பையன்… ரொம்ப பாசமான குணம்… நெருங்குன சொந்தமும் கூட…

ஒன்னுக்குள்ள ஒன்னுன்றப்பா எல்லோருமே ரொம்ப நல்லா பார்த்துப்பாங்கன்னு தோணிச்சு. உனக்கும் பிடிச்சிருக்குன்ற ஒரே காரணத்தாலதான் தைரியமா கல்யாணம் பேசினோம்…

பிடிக்கலைனா சொல்லு… இப்படியே இந்த கல்யாணப் பேச்ச ட்ராப் பண்ணிடுவோம்னு விஷயத்த இப்படி ப்ரெசென்ட் செய்ங்க… இதுவும் உண்மைதானே…” என அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுநிலமையான வழி சொல்ல…

ஆராதனா வந்த சுவடே தெரியாமல் கடகடவென திரும்பி வந்துவிட்டாள்.

விஷயம் இவளுக்கு தெரியாது என நினைப்பது அம்மாவுக்கு நிம்மதி தரும் என்றால்… தனக்கு அது தெரிந்துவிட்டதை காட்டிக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருந்தாள்.

ஒரு மாதிரி அதிர்ந்து இருந்தாள் அவள்.

அவளது திருமணம் பற்றிய பெற்றோரின் மனநிலை இப்போது அவளுக்கு தவறாக தெரியவில்லை.

அதோடு அவர்கள் இவளிடம் சொல்லத் தயங்கும் காரணமும் முழுக்கவுமே புரிகின்றது.

எத்தனை அளவு அவளது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆபத்து என்றால் இப்படி ஒரு  அவசர திருமண முடிவுக்கு வந்திருப்பார்கள் என அவளுக்கு நன்றாகவே தெரியும்.

எதற்கும் அத்தனை எளிதாய் அசைந்து கொடுக்காத அவளது அப்பாவே இப்படி யோசிப்பதென்றால் இந்த முறை விடை பெற்று செல்லும் அவளது அப்பாவை அவள் மீண்டுமாய் பார்ப்பது அரிதிலும் அரிதாகத்தான் இருக்க முடியும்.

சற்று நேரம் விஷயத்தின் வீரியத்தில் செய்கையற்று அமர்ந்திருந்த அவள், பின் ஒருவாறு சுதாரிக்கவும் செய்துவிட்டாள்.

கடவுளுக்குட்பட்ட நியாயமான வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு  தானாக தேடிக்கொள்ளாத மரணம் ஆதாயம் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது… அப்படியானால் அது வந்துவிடுமோ என நினைத்து அழ என்ன இருக்கிறது என்ற திடநிலைக்கு சீக்கிரமே திரும்பிவிட்டாள்.

ஆனாலும் மனதிற்குள் ஒரு பெத்த பெரும் அழுத்தம்.

அடுத்த பக்கம்

Advertisements