மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 8 (3)

ஊரிலிருந்து வந்திருக்கும் இவளது பெற்றோரை பார்க்கவென பேர் செய்து கொண்டு பிஜு குடும்பம் வந்திருந்தாலும் இங்கு நடப்பதெல்லாம் இவள் திருமணம் சார்ந்த காரியமே எனப் புரியாமல் இல்லை இவளுக்கு.

ஆக பிஜுவை நேருக்கு நேர் அத்தனை பேர் முன்னிலையில் பார்க்கவே இவளுக்கு தடுமாறுகிறது.

அதோடு அந்த ரிங் டோனுக்காகவும் இவள் முறைத்தாக வேண்டிய விஷயம் இருக்கிறதே…

ஆக அவனைப் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்து மற்ற எல்லோரையும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் அவர்களிடம் பேசிக் கொண்டுமிருந்தாள்.

அதே நேரம் அடுத்திருப்பவன் இவளிடம் எப்படியும் பேச முயல்வான் என்ற நம்பிக்கையும், பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இவளுக்குள் தீபமாய் ஒரு தித்திப்பை ஏற்றி அதை தீயாய் எரியச் செய்து கொண்டு போயிற்று.

ஆனால் அவனிடமிருந்து அப்படி எந்த முயற்சியும் வரவே இல்லை.

அதே நேரம் வெளியரங்கமாக துவங்குகிறது இவர்களது திருமண பேச்சு.

எப்ப இவங்க மேரேஜ் வச்சுக்கலாம் என யாரோ கேட்க…

இவள் சற்றும் எதிர்பாராமல் வருகிறது இவளது அப்பாவிடமிருந்து “இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிச்சுட்டா நல்லா இருக்கும்” என ஒரு பதில்.

அதிர்ந்தே போனாள் ஆராதனா.

இவளது பெற்றோர் இவளது பதிமூனு பதினாங்கு வயதிலிருந்தே குடும்பத்தின் முக்கிய விஷயங்கள் எதையும் இவளிடம் கலந்தாலோசிக்காமல் செய்வது கிடையாது.

முடிவு எடுப்பது அவர்கள்தான் எனினும்…என்ன விஷயம் ஏன் அந்த முடிவு… இவள் கருத்து என்ன… அதன் சாதக பாதகங்கள் என எல்லாம் அலசப்படும் இவள் வீட்டில்…

அதில் இவளிடம் குறிப்பால் கூட உணர்த்தாமல் ஆதிக் அண்ணாவிடம் வரன் பார்க்க சொன்னதே அதிசயம்…

சரி இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் அமைந்து வரும் என அவர்கள் எண்ணி இருக்கலாம்…

அதை பேச்சு வாக்கில் ஆதிக் அண்ணாவிடம் குறிப்பிட்டு இருக்கலாம்…

அண்ணா தன் ஆசையில் பிஜு பத்தி சொல்லப் போக.. அப்பாவுக்கும் பிடித்து வந்திருக்கலாம்…

நேரில் வரும் போது இவளிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்களாய் இருக்கும் என இவள் நினைத்திருக்க…

இப்போது இவளிடம் ஒரு வார்த்தை கூறாமல் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்றால் எப்படி இருக்கிறதாம் இவளுக்கு?

பிஜுவை மட்டும் இவளுக்கு முன்னமே அறிமுகம் இல்லை எனில் இப்போது திருமண பேச்சு எடுத்ததுக்கே கொதித்திருக்க மாட்டாளா இவள்?

இதில் படிப்பு முடியக் கூட இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் ஒரு மாதத்தில் திருமணம் என மாப்பிள்ளை வீட்டாரிடமே சொன்னால் எப்படி?

ஆனாலும் இதை எதையும் வெளிப்படுத்தும் இடமும் நேரமும் இதுவல்ல என்ற எண்ணத்தில் முயன்று அமைதியாக இருந்தாள் ராதி. அது அவளது சுபாவம்

அப்பா அம்மாவிடம் தனியாக பேசினால் நிச்சயமாய் புரிந்து கொள்வார்கள்…

பிஜுவிடமும் இன்னும் ஒரு வருடம் கழித்துதான் இவளுக்கு சரியாய் வரும் என்றுவிட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்… அதற்கேற்றபடி அவனது வீட்டினரை மட்டுமல்ல இவளது பெற்றோரையும் கூட கையாண்டு கொள்வான்.

அதைவிட்டு இப்போது இங்கேயே இவளது அப்பாவின் வார்த்தையை எல்லோர் முன்னும் இவள் மறுத்தால், அது அப்பாவுக்கு அவ்வளவாய் மரியாதை இல்லை…

அதோடு பிஜுவை உடனேயே மணக்க முடியாது என இவள் சொல்வது ஒரு வகையில் அவனது வீட்டினருக்கும் இதமாக இல்லாமல் தோன்றலாம்.

இவள் இப்படி எல்லாம் யோசித்த நொடிக்குள்…

எதையும் யோசிக்காமல் அறைந்தார் போல மறுத்தேவிட்டான் பிஜு. அது அவனது சுபாவம்.

“இல்ல… அது சரிப்படாது அங்கிள்… இன்னும் மூனு வருஷமாவது போகட்டும்…” அழுத்தமும் திருத்தமுமாக வந்தன அவன் வார்த்தைகள். என் முடிவை மாத்திக்க மாட்டேன் என்ற நெடி அதில் அதிகமாகவே இருந்தது.

இவளுக்குள் எங்கோ பரவுகிறது ஒரு ஏமாற்றம்.

என்ன இருந்தாலும் இவளுக்கும்தானே இது கல்யாணம்.

ஒரு வார்த்தை ராதிட்டயும் கேட்டுகோங்க என அவன் சொல்லி இருந்தால் கூட இவளுக்கு இப்படி தோன்றாதோ?

அதுவும் ‘உன் கூடவே இருக்கனும் போல இருக்கு’ என்றவன் மூனு வருஷம் கழிச்சு மேரேஜ்னு சொன்னா எப்படி? இவள் கூட ஒன் இயர்ல மேரேஜ் செய்யனும் என நினைத்துக் கொண்டிருக்கிறாளே!!

“ராதிட்டயும் கேட்டுட்டு… இந்த டைம் நீங்க ஊருக்கு கிளம்புறதுக்குள்ள எங்கேஜ்மென்ட் ஒன்னு க்ராண்டா வச்சுக்கலாம் அங்கிள்” பிஜு இப்போது தொடர…

இதெல்லாம் இவள் மனதுக்கு போதுமானதாய் இல்லை. ஆனால் எதையும் இவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

தொடரும்…

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்… 9

Advertisements