மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 21(3)

“நீங்க சொல்லுங்கக்கா, வேற என்ன நடந்துச்சு? சும்மால்லாம் விஷயம் நியாபகம் இருக்காதே?” இவளது தோழி ஒருவள் விற்பனை பெண்களிடமே தூண்டில் போட,

“முதல்ல நாங்க காமிச்ச எதுவுமே சாருக்குப் பிடிக்கல” கடைப் பெண் தொடர,

“அன்னைக்குன்னு எங்க ஓனர் பொண்ணு சென்னைல இருந்து இங்க வந்துருந்தாங்களா, , இங்க நடக்கிறத பார்க்கவும் ஒரு இன்ட்ரெஸ்ட்ல அவங்களும் எடுத்து காமிக்க, எதையும் கூட சார் ஒத்துக்கல” இன்னொருத்தி தொடர்ந்தாள்.

“கடைசி நீங்க சொன்ன கலர்ஸ் ஸ்பெசிபிகேஷன்ல நான் உங்களுக்கு ட்ரெஸ் அரேஞ்ச் செய்றேன் சார்னு எங்க ஓனர் பொண்ணு சொல்லி சார்ட்ட ஃபோன் நம்பர் வாங்கிட்டு, அப்றம் இதையெல்லாம் மென்ஷன் செய்தே ஆர்டர் கொடுக்க சொன்னாங்களாம்”

“அப்றம் ஒரு மாசம் கழிச்சு ட்ரெஸ் அது போல வரவும் சார்க்கு கால் பண்ணி  சொல்லி, நாலஞ்சு வெரைட்டி இந்த கலர்ல வந்துருந்துது, அதுல இந்த காக்ரா நல்லாருக்குன்னு சார் வாங்கிட்டு போனாங்க”

“எங்கள சார் செம்மயா ட்ரில் வாங்கினாங்கல்ல அதான் எங்க எல்லாருக்கும் நியாபகம் இருக்கு” விற்பனை பெண்கள் விளக்கி முடிக்க,

“ஆஹா நம்பிட்டோம், இதுக்கா எல்லாரும் குசு குசுன்னு பேசி சிரிச்சீங்க, வேற என்னமோ இருக்கு” என இவர்கள் கோஷ்டியில் ரெண்டு பேர் விடாமல் வம்பிழுக்க,

“அப்பவே அண்ணா தான் லவ் பண்ற பொண்ணுக்கு எடுக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும் அப்படித்தான?” பொற்கொடி நூல் விட்டுப் பார்க்க,

அவர்கள் அத்தனை பேர் முகமே காட்டிக் கொடுத்தது அது உண்மை என்று.

“எப்படி? அது எப்படி? அண்ணாவே சொன்னாங்களா?” இவள் நட்பு வட்டம் விளையாடிக் கொண்டிருக்க,

ராதியோ பிஜுதான் இந்த உடை வாங்கியது என்ற தகவலிலேயே மின்சாரத் தொடுகைபோல் ஸ்தம்பித்துப் போனவள், சுருள சுருள கொட்டும் தேன் வகை பிரமிப்போடே மொத்த நிகழ்விலும் நின்றிருந்தாள்.

சென்னையில் இவளை சந்திக்கும் முன்பே இந்த உடை வாங்கி இருந்தால்தானே சென்னையில் வைத்து முதல் நாள் இவள் செல்லும் போதே தந்திருக்க முடியும்.

அதுவும் ஒரு மாதம் காத்திருந்து வாங்கினானாமே!

எப்போது இருந்து அவன் இவளை காதலித்துக் கொண்டிருக்கிறான்? ஆனால் ஏன் இவளைக் கண்டாலே காணாதவன் போல் நின்று கொண்டிருந்தான்?

இதற்கு மேலேல்லாம் எதையும் நிதானிக்க முடியவில்லை.

காற்றது இறக்கைகளாக உட்ச வகை பீறிடலில் உயிரில் வந்து விழும் உன்மத்த உவகையில் வான் வீதியெங்கும் செட்டையடித்தபடி இவள். நுரையீரல் பை எங்கும் அழுந்த அழுந்த முட்டியது காதல் மேகம்.

தெய்வமே இதில் அவன் விருப்பமில்லாமல் திருமணம் செய்தான் என்றெல்லாம் இவள் குழப்பி இருக்கிறாள். அதை அவனிடம் வேறு சொல்லி இருக்கிறாள். அதுவும் நீ லவ் மேரேஜ்னு சொன்னா நான் கண்டிப்பா நம்ப மாட்டேன் என்ற கேரண்டியுடன்.

அப்போதே அப்படியே அவனிடம் ஓடிப் போய் அவனுக்குள் அடைந்து கொள்ள பிய்த்தெறிந்து கொண்டு வருகிறது ஒரு வெறி ஆவல்.

அவனை அழைக்கவென இவள் மொபைலை எடுக்க, அதே நேரம் வருகிறது இவளுக்கு அழைப்பு.

அபித்தான் அழைத்தான்.

“அந்த டீனேஜர் இருக்குதுல்ல, அந்த பொண்ணுக்கு cryptomenorrheaன்னு ஒரு தாட், எக்சமைன் செய்துட்டு இருக்காங்க, நீ வந்துட்டு போறது பெட்டர். நம்ம மக்கள் எல்லோரையும் வரச் சொல்லிட்டு இருக்கோம்” அவசர அவசரமாய் அவன் சொல்ல,

அடுத்த நிமிடம் தன் தோழியர் புடை சூழ போர்கால துரிதத்தில் பிஜு முன்பு நின்றிருந்தாள் ராதி.

‘எமெர்ஜென்ஸி, ஹாஸ்பிட்டல் போறேன், நீங்க வீட்டுக்கு போங்க” என்ற வகை செய்திகளை மட்டும் படபடத்துவிட்டு ஆட்டோ பிடித்து மருத்துவமனையைப் பார்த்து பறக்கும் நிலை அவளுக்கு.

Cryptomenorrhea என்பது இயற்கையாய் ஒரு சிறுமி அவள் வயதில் பூப்படையும் போது, உதிரப் போக்கு ஏற்பட வழி இல்லாதபடி அப்பெண்ணின் பிறப்புருப்பில் எதுவும் ஜவ்வு போல வளர்ந்திருந்து தடை செய்திருக்கும்.

ஆதலால் அவள் பூப்படைந்தது வெளியில் தெரியாது. அந்த உதிரம் கருப்பைக்குள் கட்டித் தேங்க, அதன் நிமித்தம் அடி வயிற்றில் வலி உண்டாகும். உதிரத் தேக்கம் கருப்பையை உள்புறமாகவே வீங்க வைப்பதால், இறுதியில் சிறுநீர் கழிக்க முடியாத நிலை உண்டாகும்.

உள்ளே தேங்கிய ரத்தம் கிருமி தாக்குதல்களால் விஷமடையும் (septic) வாய்ப்பும் அதிகம். அப்படி ஆகும் பொழுது அது அப்பெண்ணின் உயிருக்கு அபாயமாகிவிடும்.

அடுத்த பக்கம்

Advertisements