மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 21

பிஜு எதுவுமே சொல்லவில்லை. அவனுக்கு எதையும் சொல்லத் தோன்றவுமில்லை.

மறுபடியும் ஒரு முறையாய் தன்னவளுக்குள் விழுந்திருந்தான் அவன்.

அவனது அக்கா ரத்தியிடம் திருமணமான புதிதில் அவளது மாமியார் குழந்தை பற்றி பேசியதற்கு அவள் அதை  அதீதமான தலையீடாய் உணர்ந்து மிகவும் மனம் வருந்திப் பார்த்திருக்கிறான் இவன்.

அந்த வகையில்தான் இவன் ராதியும் அப்படி மனம் நோகக் கூடாதே என ஓடி வந்தது.

அவனது அக்காவாவது இவன் அம்மாவிடம் புலம்புவாள். இங்கு ராதி அப்படி கூப்பிட்டு அவள் அம்மாவிடம் பேசிக் கொள்ளவும்  வழி இல்லையே!

அதையெல்லாம் நினைத்திருந்தவனுக்கு இவன் மனைவி அதை வெகு சாதாரணம் போல் அசாதாரணமாய் கையாள்வது வெகுவாகவே பிடிக்கிறது.

இவனவள் பொதுவாகவே இப்படித்தானே! எத்தனை பெரிய வார்த்தைகளையும் மன ரம்மியம் குறையாமல் இலகுவாக கையாள்வாளே!

அதோடு இவன் இதுவரை கற்பனை கூட செய்திராத இவனது குழந்தையை இவனைப் போல் இருக்கும், அவளைப் போல் இருக்கும், இவன் அம்மாவைப் போல் இருக்கும் என்றெல்லாம் வேறு அவள் சொல்லிவிட்டுப் போனால் அவனும்தான் என்ன ஆவான்?

இவன் திட்டம் போட்டு ஏமாற்றும் கிரிமினல் என நினைத்து விலகிப் போக எண்ணி இருக்கிறாள் என்பதுதானே இவன் கோபமே.

அதோடு நீ என்னை காதலிப்பதாய் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்லிவிட்டாளே என்ற ஆதங்கம் வேறு.

அந்த கோபத்தில் போய் இவர்கள் குழந்தையைப் பற்றி அவள் பேசிய பேச்சு விழும் போது கீழாக எண்ணினாள் விலக்கினாள் என்பதெல்லாம் அடுத்தும் எங்கு நிற்கவாம்?

உனக்கும் எனக்குமான குழந்தை என்ற சிந்தனையே அன்யோன்யம், அன்பு, நெருக்கம், ஆசை, ஆவல், இணைவு, காதல், ஒன்றாகுதல், ஒரு வாழ்க்கை நீயும் நானுமாய் வாழல் என்பதுதானே!

விலகிப் போகாதோ இவனுள் விழுந்து அழுத்தி இருந்த விளக்கமற்ற பாரங்கள்!

அடிபட்டிருந்த அக மன ஸ்தலங்களில் வந்து பிறளாதோ அன்ன வகை தூவிகள். அமிழ்த ஸ்பரிசமாய் மயில் பீலி வருடல்கள்.

அவசரமாய் தன்னைவிட்டு விலகிச் செல்பவளை இவன் இந்நிலையில் பார்க்க,

அவளோ இவனை அவ்வப்போது சற்று பயத்தோடு ஓரக் கண்ணால் கவனித்தபடியே கடந்து போய்க் கொண்டிருந்தாள்.

அவள் கண்களில் காணக்கிடைக்கிறது இவன் மீதான பயம்.

என்னதான் அவள் நிதானமாக பேசியிருந்தாலும் அவன் கோபத்தில் மீண்டும் எதுவும் சொல்லிவிடுவானோ என்பதுதான் ராதியின் பயம்.

அதற்காகத்தான் அவள் விலகி வந்ததும். இப்போதும் அவன் முகத்தை அவள் மறைவாய் படிக்க முயல்வதும்.

அவ்வளவுதான் இவன் இன்னுமின்னுமாய் இளகித்தான் போனான்.

சே இவனப் பார்த்து பயந்து போற அளவுக்கு ஆக்கி வச்சுருக்கான்.

அவசரமாய் அவளிடம் போய், அழுத்தமாய் இழுத்தணைத்து, அந்த முட்டைக் கண்ணில் முத்தம் ஒன்று மெல்லமாய் பற்று வைத்து, அந்த பயத்தை போக்கி வைக்க மோகம் தொடா காதல் ஒன்று கணிசமாய் கணவன் ஸ்தலங்களில்.

அதில் கட கடவென இவன் அவளிடம் செல்ல முனைய,

“சார் இந்த சாரில்லாம் செலக்ட் செய்துருக்கீங்களா சார்? அப்பன்னா என்ட்ட கொடுங்க, நீங்க பில்லிங் செக்க்ஷன் போய்டுங்க” என குறுக்காக வந்து நின்றாள் ஒரு சேல்ஸ் பெண்.

“வேற க்ராண்டான சாரி பார்க்கணும்னா அந்தப் பக்கம்” என அடுத்த திசையையும் காண்பிக்க,

இடையிட்ட இந்த நொடி நேர தலையீட்டில், அப்படில்லாம் பப்ளிக்ல வச்சு பட்டுன்னு எதையும் செய்துட முடியாது என்பதே சிந்தனையில் வர,

சரி அவளுக்கு பிடிச்ச மாதிரி கிஃப்ட் எதாச்சும் வாங்கிட்டுப் போய் சின்னதாய் விளையாடினாலே சிரித்துவிடுவாள் என்ற முடிவுக்கு வந்தான்.

பபிள் ரேப்பர் இருக்கிற மாதிரி க்ளாஸ் வர்க் வாங்கணும் என்பதுதான் அவன் மனதில் முதலில் வந்த ஐடியா.

டெய்ரி மில்க் ஒன்னும் வாங்கிக்கலாம்.

ஏன் சேலை ஒன்னு கூட எடுத்துக்கலாம். நேத்து  இவன் பாத்ரூம்ல பண்ணி வச்ச ரகளைல, ட்ரை வாஷ்க்கு மட்டுமே செட் ஆகுற அவள் சேலை சோப்பு நுரை ஈரம் என்றெல்லாம் பட்டு பாழாய் போய் போய் ஒரு ஓரத்தில் கிடந்ததே.

அந்த கலர் காம்பினேஷன்லயே எதாவது புடவை கிடைக்குமான்னு பார்க்கலாம்.

முதல் தடவையா அவனும் இவளுமா கடைக்கு வந்திருக்காங்க, எதாவது நல்லதா நச்சுன்னே வாங்கிக் கொடுக்கணும் என்றெல்லாம் தோன்றிவிட,

பார்வையால் ராதி இருக்கும் இடத்தை பார்த்து வைத்துவிட்டு புடவை தேர்ந்தெடுக்க அடுத்த புறமாய் சென்றான்.

அடுத்த பக்கம்

Advertisements