மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18 (2)

அவசரமாய் இரவு உடையிலிருந்து சல்வாருக்கு மாறி இவள் வெளியே வந்த போது,

“ஹேய் எந்திரிச்சுட்டியா? இப்பவே கிளம்பணுமா ராதி?” என இவளை வரவேற்றது இவளது கணவன்.

“வாங்கத்த, வாங்க மாமா” எனத் தொடங்கி பரஸ்பர நல விசாரித்த வண்ணம், ‘வந்தவங்களுக்கு காஃபியாவது போட்டுத் தரணுமே, சமையலாள் வர இன்னும் நேரமிருக்கிறதே’ என இவள் சமையலறைக்கு நகர,

“ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு ராதி, எனக்கும் ஒரு கப் தர்றியா?” என இவளிடம் கேட்டு பாவை நெஞ்சில் பால்வார்த்தான் இவளவன்.

பிஜுவின் பெற்றோர் இதுவரைக்கும் இவள் முகம் சுண்டும் படி எதுவும் நடந்து கொண்டது இல்லைதான், அவனது அம்மாவெல்லாம் வெகு பாந்தமும் பாசமுமாக பேசுவார்தான், இருந்தாலும் இவளுக்கு உள்ளுக்குள் உதறிக் கொண்டு இருக்கிறது.

வீடு சரியா மெயின்டெய்ன் ஆகலைனு நினைப்பாங்களோ? பிஜுவ நான் சரியா கவனிக்கலைனு யோசிப்பாங்களோ? நான் சாதாரணமா செய்ற எதாவது அவங்கள மரியாதையா நடத்தலைனு தோணிடுமோ என புது மருமகளுக்கே உள்ள இயல்பான பாதுகாப்பின்மை.

இதில் இவள் காஃபி போட்டு எல்லோரும் குடிக்கிறதா? அப்படின்னு நினைக்கிறப்பவே பீதியாகுதுல்ல, அதில் இந்த ப்ளாஸ் காஃபி விஷயம் நெஞ்சில் பால் வார்க்கும்தானே!

தன்னவனை நன்றியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இவள் காஃபியை கப்பில் ஊற்றத் தொடங்க,

“எனக்கும் உனக்கும் மட்டுமா எடுத்துட்டு வா ராதி, லெஃப்ட் சைட் செல்ஃப்ல த்ரெப்டின் பிஸ்கட் டப்பா இருக்கு பாரு, அதில் மூனு அப்பாக்கு கொண்டு வந்துடு, அம்மா அப்பா ஏற்கனவே காஃபி சாப்டாச்சு” என அடுத்த குறிப்பு அவனிடமிருந்து.

புரிந்தும் புரியாமலுமே இவள் அவன் சொன்னதையெல்லாம் செய்யத் துவங்க,

“எப்ப இருந்து தம்பி இப்படி ரெண்டு காஃபி குடிக்கிற பழக்கம்? என்னையவே அடிக்கடி குடிக்காதம்ப?” என இவள் மனதிலிருந்ததை அவனது அம்மா விசாரித்தார்.

“சும்மா இன்னைக்குத்தான், உங்க கூட ஷேரிங்ல குடிச்சு நாளாச்சு மீ” என்றவன்,

“ஷேர் செய்யலைனா இப்ப ரெண்டாவது கப் குடிப்பீங்கல்ல, அதை தடுக்கத்தான் இந்த சதி” என எதோ வில்லன் தொனியில் கிண்டலாய் சொன்னவன்,

“ராதி தனியா குடிக்க யோசிச்சுகிட்டு குடிக்காம ஓடிடும், உங்க சூப்பர் காஃபிய அவ மிஸ் செய்துடுவா” எனவும் இயல்பாய் சொல்லிக் கொண்டிருந்தான்.

இப்படி ஒரு காஃபியை வைத்தே இவளை கவுத்திப் போட்டான் பையன்.

காஃபி கலக்குற ராக்கெட் சயின்ஸ்ல இருந்து இவ ஜஸ்ட் மிஸ்னாலும், இன்னும் ஏனைய பிற நெர்வெஸ்னெஸ் முட்டி தட்ட, இவள் காஃபி ட்ரேயுடன் வரவேற்பறைக்குள் மீண்டும் நுழையும் போது,

அவனது அம்மா சோஃபாவில் இருக்க, அவர் கால் புறம் தரையில் இவன் இருக்க, இவனது முடியை கலைக்கும் வேலையை அவனது அம்மாவுக்கு கொடுத்திருந்த அவன்,

இவளை தனக்கருகில் உட்காரும் படி சைகை செய்துகொண்டே காஃபியை வாங்கிக் கொண்டான்.

முதல் கணம் ஒரு மாதிரி இருந்தாலும் அவன் அருகில் அமரவுமே இருந்த பதற்றம் எல்லாம் விலகுவது போல் ஒரு உணர்வு இவளுக்கு.

சொன்னபடி அவனும் அம்மாவும்  ஒரே கப் காபியை இருவருமாக குடிக்க,

இவள் தன் காஃபியை கவனித்துக் கொண்டிருந்த நேரம்,

“ஆவுடையனூர் போனீங்க போல என்னமா?” என இவளிடம் விசாரித்தார் பிஜுவின் அம்மா.

“அந்த செல்விபாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சுகாத என்னமா” என இவள் பதில் எதுவும் சொல்லும் முன்னும் ஆறுதலும் சொன்னார்.

“தப்பு எங்க பக்கமும் இருக்குமா” என அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் ஒரு புள்ளி அளவு கூடப் புரியவில்லை எனினும், ஏனோ இவளுக்கு திக்கென்றும் இல்லை.

“அது அந்த பாகிப் பொண்ணு இருக்கே” என தொடங்கிய பிஜுவின் அம்மா அடுத்து எப்படி சொல்ல என திக்க,

“நம்ம குடும்பத்து பொண்ண எப்படி குறை சொல்லன்னு பார்க்காத, வெளியாள்ட்டயா சொல்ற? மருமகட்டதான, அவளும் பிஜுவும் வேற வேற கிடையாது, இப்படி மறைச்சு மறைச்சு பேசினாதான் தப்பு தப்பா போகும்” என சற்று கண்டனமாய் இடையிட்ட பிஜுவின் அப்பா,

“பெருசா எதுவும் இல்லமா, பாகிக்கு ஒரு குணம், யார் ரெண்டு பேர் கொஞ்சம் சேர்ந்து சிரிச்சு பழகி இருந்துட்டா அவங்களுக்குள்ள ஒருத்தர பத்தி ஒருத்தர்ட்ட போட்டுக் கொடுத்து பிரிச்சு வச்சாதான் அவளுக்கு என்னமோ திருப்தியா தெரியும், நம்ம வீட்டு சின்ன செட் எல்லாம் அவளப் பார்த்தாலே தெரிச்சு ஓடும்,

பாகி உறவுல எனக்கு ஒன்னுவிட்ட அக்கா பொண்ணு, பிஜுவுக்கு முறை வருதுல்ல, அந்த அடிப்படையில் அவங்க கல்யாணத்துக்கு கேட்டாங்க, இங்க யாருக்கும் இஷ்டம் இல்ல,

பிஜு முதல்லயே ரத்த சொந்தம் இருக்கிற எந்த உறவுக்குள்ளயும் எனக்கு பொண்ணு பார்க்காதீங்கன்னுட்டான்.

இந்த சம்பந்தம் வேண்டாம்னு பாகி வீட்டுக்கு சொல்லப் போன நம்ம ஆட்கள் பிஜு சொன்னதையே சொல்லிட்டு வந்திருந்தா சரியா போய்ருக்கும்.

என் அண்ணன் வீட்ல பிஜுனா வெகு இஷ்டம், அவங்கதான் இத மறுத்து சொல்லப் போன ஆட்கள், இவன் பெரியம்மாவுக்கு பிஜுக்கு பாகி வேண்டாம், ஆனா வேற பொண்ணு சொந்தத்துக்குள்ளே அமைஞ்சா நல்லா இருக்கும்னு நினைப்பு போல,

அப்படி சொந்தத்துக்குள்ள பின்னால கல்யாணம் செய்றப்ப, சொந்தம்ன்றதால எங்கள எப்படி வேண்டாம்னு சொன்னீங்கன்னு பாகி வீட்ல முகம் தூக்குவாங்கன்னு,

பாகி டாக்டருக்கு படிக்குது, எங்க பிஜு இன்ஜினியர்தான? என்னனாலும் பாகிய விட சின்ன படிப்புதான, பாகிக்கு நல்ல டாக்டர் மாப்ளையா பார்க்கலாம்னு அவங்க மனசு குளிர்ற மாதிரி பேசி வேண்டாம்னுட்டு வந்துட்டாங்க இவன் பெரியம்மா,

இப்ப டாக்டர் பொண்ணையே கல்யாணம் செய்துருக்கா, அதான் பாகி வீட்ல இப்படி மூஞ்ச தூக்கிகிட்டு இருக்காங்க” பிஜுவின் அப்பா விளக்க,

“அதுக்குன்னு நம்ம ஆராவ அவங்க எப்படி பேசலாம்?” என இடையிட்டார் இவளது மாமியார். காரம் இருந்தது குரலில்.

“அவங்க பேசினது நடந்துகிட்டது எல்லாம் 100% தப்புமா, நான் அதை சரின்னு சொல்லவே இல்ல, நம்ம கை மீறி நடந்துட்டு, என்ன செய்யன்னுதான்மா தெரியல” என இப்போது இவளைப் பார்த்து சொன்ன மாமனாரின் குரலில் மன்னிப்பு கேட்கும் வாசம் தெரிய,

“என்ன மாமா இது? அவங்க செஞ்சதுக்கு நாம யார் என்ன செய்ய முடியும்?” என இவள் ஒரு விதமாய் பதற,

“ப்ச் அப்பா, ராதில்லாம் அன்னைக்கே அதை கிளறல, போறாங்க போங்கன்னுட்டு வந்துட்டு, நான்தான் மனசு கேட்காம ஃபோன் செய்து பொரிச்சுட்டேன், எதுனாலும் என்னையக் கூட பேசலாம், அதென்ன இவள என்னப் பேசுறது?” பிஜு சொல்லிய பிறகுதான் இவளுக்கு அக் கதையின் தொடர்ச்சியே புரிந்தது.

‘எப்படா இது?’ என்பது போல் இவள் இப்போது தன்னவனிடம் முழிக்க,

“அது மறுநாள்” என சுரத்தின்றி வருகிறது அவனது பதில்.

“தெருவுல வச்சிதான சண்டை போடக் கூடாது, அதான் ஃபோன்ல சொல்லி வச்சேன், வாய மூடிட்டு வந்தோம்னா அப்றம் பார்க்கிறப்பலாம் இப்படி தாறுமாறாப் பேசத் தோணும்”

இன்னும் கூட சுடச் சுட கோபம் முகத்தில் எழும்பிப் பார்க்க, இவள் பார்வையை தவிர்த்தபடி விளக்கமும் சொன்னான்.

ஒரு விஷயம் ஆதாரமே இன்றித் தெளிவாகப் புரிகின்றது ராதிக்கு.

சர்வ நிச்சயமாய் அந்த ரவி பேசியதை இவள் கணவன் கேட்டிருக்கவில்லை.

அங்கு நின்று கொண்டிருந்தவன் எப்படி கேட்காமல் போனான் என்றுதான் தெரியவில்லையே தவிர, கேட்டிருந்தான் எனில் அத்தனை நீளமாய் பேசி இருக்க முடியாது அந்த ரவி. அதற்குள் நாலு பல்லையாவது கழற்றி இருப்பான் இவளவன்.

அடுத்த பக்கம்

Advertisements