மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18

மறுநாள் காலையில் ஆராதனா கண்விழிக்கும் போதே காதில் விழுகிறது  அடுத்த வரவேற்பறையில் இருந்து பிஜுவும் அவனது அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம்.

இவனுக்கு காயம் பட்ட செய்தி நேற்று மாலைதான் பிஜு வீட்டுக்கு சொல்லப் பட்டது. அடுத்து கிளம்பி வந்திருக்கிறார்கள் போலும்.

நடந்து கொண்டிருந்த பேச்சு இவளைப் பற்றித்தான்.

பல் கூட துலக்காமல் வெளியே சென்று வரவேற்க முடியாதென ஆராதனா குளியலறைக்குள் நுழைய இன்னும் தெளிவாக காதில் விழுகிறது அம்மா பையன் உரையாடல்.

பல் துலக்கியபடியே காதை அதற்குக் கொடுத்தாள் இவள்.

“இல்ல தம்பி, ஃபீவர்க்கே தலைல எண்ணை வைக்க மாட்டோம், இப்ப வைக்கலாமோ என்னமோ? ஆரா வரட்டும்டா, அவட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தேய்ச்சு விடுறேன்”  பிஜுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவனது அம்மா.

“அதெல்லாம் ஒன்னும் செய்யாது, இல்லைனாலும் சும்மாவாது தலைய கலைங்கம்மா, நீங்க செஞ்சா சூப்பரா இருக்கும்” பையன் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

கூடவே நியாபகம் வந்தவனாக “இப்படி எதோ மசாஜ் செய்தா முடி கொட்டாதுன்னு அக்காக்கு என்னலாமோ செய்தீங்கல்லமா?” விசாரித்தான்.

“ஏன்டா தம்பி முடி கொட்டுதா என்ன?”

“எனக்கில்லமா ராதிக்கு, இப்ப ரீசண்டா அவளுக்கு ரொம்ப கொட்டுது, நீள முடிவேறயா? சீப்ல வந்த முடிய பந்தா சுருட்டி அவ தூர போடுறத பார்க்கிறப்ப நமக்கே ஒரு மாதிரி இருக்கு, அவளுக்கு ரொம்ப கடி ஆகும்ல அதான்”

உண்மைதான் அதிகமாக கொட்டுகிறதுதான் இவளுக்கு. பந்து பந்தாய் அள்ளி குப்பையில் போடும்போது பதைக்கும்தான்.

ஆனால் இந்த வருட அலைச்சல், வேலைப்பளு, தூக்கமின்மை இதில் இதெல்லாம் சகஜம் எனத் தெரியும் என்பதால் ஒருவாறு அதை கண்டுகொள்ளாமல் இருந்து கொள்வதுதான் இவள்.

இதையெல்லாம் கவனித்திருக்கிறானா இவன்?

“தூக்கம் குறஞ்சாலே இப்படித்தான் தம்பி இருக்கும், அதை சரி செய்யாம மத்த என்ன செய்தும் சரியாகாதே! ஆனா குழந்தை உண்டாகிறப்ப நல்லா வளந்திடும்”

அவனது அம்மா எங்கு வருகிறார் என ராதிக்கும் புரியாமல் இல்லை.

“போங்கமா முடிக்கு இலவச இணைப்பா என் பிள்ள? அதெல்லாம் குட்டி வர்றப்ப ராயலா வரட்டும், இப்ப இந்த முடிகொட்றத நிறுத்த முடியலைனாலும் குறைக்கவாவது வழி செய்யும்ல இந்த மசாஜ், அதுக்கு வழி சொல்லுங்க”

பிஜுவின் பதில் இவளுக்கு பிடிக்காமல் போகுமா என்ன?

“இப்பவா தம்பி குழந்தை வச்சுக்க சொல்றேன், ஆரா ஷெட்யூல் எப்படி இருக்குதுன்னு எனக்கும் தெரியாதா என்ன? ஆனா அடுத்த வருஷமாச்சும் வச்சுகோங்களேன்,

கல்யாணத்தையே மூனு வருஷம் கழிச்சுன்னு சொன்னியே, அதான் என்ன நினைச்சுகிட்டு இருக்கியோன்னு பார்த்தேன்.

அம்மாக்கு முன்ன மாதிரி உடம்பு இல்லடா, வயசாகுதோன்னு தோணுறப்ப, போறதுக்குள்ள உன் குழந்தையவும் பார்த்துட்டுப் போய்டணும்னு தோணிடுது” என இயற்கையான தன் மன உணர்வைச் சொல்ல,

“ஆனாலும் 50 வயசுல வயசாகிட்டுன்னு தோணுதுன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் மீ, ஹோட்டல்கே போகாம வீட்டு சாப்பாடு மட்டும் சாப்டுகிட்டு இருக்க உங்களுக்கெல்லாம் வருஷம் போக போக வயசு குறையத்தான் செய்யுமாம்,

என் பிள்ளைங்களுக்கும் இப்படி கல்யாணத்தப்ப டிப்ஸ் கொடுக்கத்தான் செய்வீங்க பாருங்க” என உற்சாகமாகம் வரும் படியாய் ஆறுதல் சொன்னான் மகன்.

அதற்குள் பிஜுவின் அப்பாவோ “என்ன நீ? படிச்சுகிட்டு இருக்க பொண்ண கல்யாணம் செய்து வச்சுட்டு, இப்ப அடுத்து இப்படியும் ஆரம்பிச்சா என்னது? அவன் ஒழுங்கா படிப்பு முடியவும் கல்யாணம்னு சொன்னவன்” என இடையிட,

“ஆமா அதுவும் சரிதான், இதெல்லாம் உங்க ரெண்டு பேரோட சொந்த விஷயம், நான் மூக்க நுழைக்கிறது சரி கிடையாது,

என்ன இருந்தாலும் சுமக்கப் போறதும், வலி தாங்கி வளர்க்கப் போறதும் ஆராவும் நீயும்தான், ரொம்பவே பெரிய பொறுப்பு, பார்த்து செய்ங்க” என்ற  மகனிடம் ஒப்புக் கொண்டார் அவனது அம்மா, பின் தொடர்ச்சியாக,

“தினமும் நைட் படுக்க முன்ன செக்ல அரச்ச தேங்காண்ண, இல்லனா ஆலிவ் ஆயில் இதை கை பொறுக்க அளவு சூடு செய்துகிட்டு, விரல் நுனில மட்டுமா எடுத்து, எல்லா முடி வேர்கால்லயும் படுற மாதிரி ஒரு அரை மணி நேரமாவது தேச்சு விடணும்,

மூனு நாளைக்கு ஒருதடவை தலைக்கு குளிக்கணும், குளிக்கிறதுக்கு முன்னால உச்சந்தலையில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை வச்சுகிட்டா கூட நல்லது. முடி கொட்றது குறையும்” என மருமகளுக்குத் தேவையானதைச் சொன்னவர்,

“ஹூம் இங்க இருந்துட்டு கூட முடி கொட்டுது என்னடா தம்பி, முன்னல்லாம் இந்த சுத்துவட்டார மக்களுக்கே முடி அதிகமா இருக்கும், தாமிரபரணி தண்ணி அப்படி, இப்ப ஆத்துலயும் தண்ணி இல்ல, போய் குளிக்கிறதுக்கும் நேரம் இல்ல” என புலம்பியும் கொண்டார்.

“தண்ணி சரி இல்லனா இதெல்லாம் செஞ்சும் ப்ரயோஜனம் இல்லடா, ஆத்து தண்ணி வரலைனா, தலைக்கு குளிக்கிறதுக்கு மட்டும் வாட்டர் ப்யூரிஃபையர்ல தண்ணி பிடிச்சு குளிங்க, அக்கா அப்படித்தான் செய்துகிட்டு இருக்கா” என அடுத்த தீர்வும் சொன்னார்.

“ம்மா என்சைக்ளோ பீடியான்னு பேர் வச்சது தப்புமா, மாசைக்ளோபீடியான்னுதான் பேர் வச்சுருக்கணும், எப்டிமா எதைப் பத்தி கேட்டாலும் பதில் வச்சுருக்கீங்க?” என இப்போது ஒரு கொஞ்சல் தொனியில் தன் அம்மாவை சிலாகித்துக் கொண்ட பிஜு,

கூடுவே “வாரம் ரெண்டு டைம்தானமா தலைக்கு குளிக்கணும்னு சொல்றீங்க, அப்பன்னாதான், வாரம் ஒரு தடவை பாபநாசமோ குற்றாலமோ மலைக்கு போய் ஒரு மூனு நாலு கேன் தண்ணி எடுத்து வந்தா ராதிக்கு போதுமே, அங்க எந்த சீசன்லயும் தண்ணி இருக்கும்” என்றும் அவன் யோசிக்க,

இங்கு கேட்டிருந்த ராதிக்கு அடி வயிற்றில் ஏதோ ஸ்தம்பித்துப் போயிற்று. சூழ்நிலைக்காக மட்டுமே திருமணம் செய்துகொண்ட ஒருவனால் இப்படி சிந்திக்கவாவது முடியுமா என்ன?

தேவையில்லாமல் எதையோ போட்டுக் குழப்பி, சம்பந்தமே இல்லாமல் இவனையும் வாட்டி வதைக்கிறேனோ? குற்ற உணர்ச்சி அவளை குத்தி உருவியது.

‘பாவம் அதுவும் அவனுக்கு உடம்பு முடியாத நேரத்தில்’ உருகிப் போனாள் அவள்.

‘எதுனாலும் முதல்ல அவன்ட்ட மனசு விட்டு பேசிடணும்’ அழுத்தமாய் முடிவும் செய்து கொண்டவள், முகம் கழுவ என தண்ணீர் குழாயை திறக்க, அடுத்து பேச்சுக் குரல் எதுவும் காதில் விழவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements