மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 17 (3)

சராசரி நபர் யாருக்குத்தான் ஹாஸ்பிட்டல் வந்து போவது பிடிக்கும் என அடுத்த கோணத்தில் அவளுக்கு யோசிக்கவே வரவில்லை.

மீண்டும் அமிலச் சுரப்பு, முருங்கை மரம் நாடியது இந்த காதல் தேவதையின் மனம்.

இந்த அன்றில் அண்ணி மேல உள்ள பாசத்தில் என்னை கல்யாணம் செய்துகிட்டு, அடுத்து மேரேஜ் ஆகிட்டுன்ற ஒரே காரணத்துக்காக என்ட்ட நல்லா நடந்துக்கிறான், மத்தபடி என்னை இவனுக்கு பிடிக்கல என்று திரும்பவும் துவங்கியது அது.

நிஜமாவே என்னை பிடிச்சுதுன்னா அந்த ரவி மாதிரி ஆட்கள் பேசுறப்ப கேட்டுட்டு சும்மாவா இருப்பான்?

என்ட்ட மட்டும் கோபம் சுர்ருன்னு வருது.

அப்படி என்ன என் ப்ரொஃபஷன் மோசம்? ஒரு வேளை அந்த ரவி போலதான் இவனும் நினைக்கிறானோ?

ஆனா எனக்கு மட்டும் இவனப் போய் எதுக்கு பிடிக்குது? இத்தனைக்குப் பிறகும் அவனுக்கு ஒன்னுனா உயிர் போகுது, அவன்ட்ட பேசாமா இருக்றது நரகம்னா, பார்க்காம இருக்றது கொடூரம்னு இருக்கு.

அம்மா அப்பாவக் கூட எத்தனை காலம் விட்டுட்டு ஹாஸ்டல்ல இருந்துருக்கேன்? இவன விட்டுட்டு ரெண்டு நாள் முடியலியே!

குழப்பமும் வலியும் கூடவே காதலும் கொத்திப் பிடுங்கின அவளை.

ஆனால் இது எதையும் அவனிடம் பேச அவள் எண்ணவே இல்லை.

நேருக்கு நேரா கேட்டா இவளுக்குப் பிடிக்காத உண்மை எதையும் அவன் சொல்லிடவாப் போறான்? இவளுக்கு ஹர்ட் ஆகக் கூடாதுன்றதாலயே சொல்ல மாட்டான்.

யார்ட்ட என்ன பேசணும், எதை மறைக்கணும்னு எவ்ளவு ப்ளான் பண்ணி நடந்துக்கிறான், இதுல இவட்ட வந்து உன்னை பிடிக்காம மேரேஜ் செய்துட்டேன்னு உண்மைய சொல்வானாமா அவன்.

இப்படி குமைந்து கொண்டிருந்தாள் அவள்.

இதில் இவர்கள் அப்பார்ட்மென்டை அடைந்து  கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையவும்,

இவளை ஒரு கையால் வளைத்து தன்னோடு இறுக்கியபடி சாத்திய கதவிலே சாய்ந்து கொண்ட பிஜு “வசமா மட்டிகிட்டு என் புல்லாங்குழல்” என இவள் காதில் சொன்னவன், காது மடலில் இதமாய் இறங்க,

“ப்ச் விடுங்க நீங்க” என இவள் இயல்பு போல் உருவ முனைந்தாள்.

எத்தனை ஏமாற்றம் வலி இருந்தாலும் அவனிடம் அதை இந்நிலையில் வெளியிடப் பிடிக்காத அவள் மனநிலை காரணம்.

“டாக்டரம்மா அந்தக் கையத்தான் உங்க பொறுப்புல கொடுத்திருக்கு, அதுக்கு நீங்க ஆயிரம் ரூல் போடலாம், ஆனா இந்தக் கை என் கை, இது என் பொண்டாட்டி, என்ன வேணும்னாலும் செய்வேன்” அவன் இருந்த மனநிலையில் அவன் இன்னும் துள்ளலாய் சீண்ட,

“கல்யாணம் ஆகிட்டுன்றதாலேயே இப்படி பழகணும்ன்றது எனக்குப் பிடிக்கல” என முனங்கலாய் வந்தன இவள் வார்த்தைகள்.

அவன் கல்யாணம் செய்துட்டோம்ன்ற ஒரு காரணத்துக்காகத்தான இவட்ட எல்லா வகையிலும் நல்லா நடந்துக்கணும்னு இப்படில்லாம் சேர்ந்துக்கிறான் என அவள் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் இப்படி வெளிப்பட்டது.

ஆனால் தலை வால் புரியுமா பிஜுவுக்கு?

“ஹேய் வாலு நீதான் ரெண்டு நாளைக்கு முன்ன என்னல்லாமோ ப்ளான் போட்டிருந்த?” அவன் கேட்பான்தானே!

“அப்ப இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கும்னு நினச்சேன்” தரையைப் பார்த்தபடியே முனங்கினாள் இவள்.

உண்மைதானே, அப்போது அவன் இவளை முழுமனதாக நேசிப்பதாக அல்லவா எண்ணி இருந்தாள்.

“இப்பவும் கூட எனக்கு இதெல்லாம் ரொம்பவே பிடிக்கும்” என சின்னச் சிரிப்போடு வருகிறது அவனது பதில்.

அதோடு பிடியிலிருந்து வெளி சென்றிருந்த அவளை மீண்டுமாய் இடையோடு வளைத்து தன் முகத்திற்கு நேராய் கொண்டு வந்தவன்,

“அவ்ளவு சொல்லியும் இன்னும் என் மேல உள்ள கோபம் போகலையா ராதிமா?” என விசாரித்தான்.

இவள் கண்களைப் பார்த்தபடி இவளை முழுவதுமாய் புரிந்து கொள்ள அவன் முயல்வது இவளுக்குத் தெரிகிறது.

“எனக்கு உங்கள ரொம்பவே பிடிச்சுருக்கு பிஜு” இருந்த உணர்வு நிலையில் இதைச் சொன்னது இவள்தான். ஆனால் இதற்குள்ளே இவள் குரல் பிசிற,

“ஆனா கொஞ்சமா பிடிக்கவும் இல்ல” கண்ணில் நீரேற சொல்லியேவிட்டிருந்தாள் இவள்.

அடுத்த பக்கம்

Advertisements